Friday 30 December 2016

சுருளி அருவி - தேக்கடி- குமுளி - மலையோரத்து பயணம்-2. ( A Ride to Suruli Falls- Thekkady- Kumily Hill Ride) Part II

 ...கடந்த  பதிவின் தொடர்ச்சி...

மயிலாடும் பாறை வழியே ஓர் உற்சாக பயணம் (a Yathra Via Mayiladum Paarai)
                     
           மலைப்பாதை கடந்து சமவெளி சாலையில் வேகத்துடன் பறந்தது பாலஸ், மயிலாடும் பாறை ஊரை தொட்டது.  இந்த ஊரின் பெயரை நாம் தமிழ் சினிமா பாடல்களில் கேட்டிருப்போம் நினைவிருக்கிறதா...?* பெயர் கேட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்க்கையில் உற்சாகம். அங்குள்ள ஒரு ஹோட்டலில் காலை பலகாரம் முடித்து விட்டு, குமுளி பயணத்தை தொடர்ந்தோம். சில்லென்ற காற்று வருட அடித்த வெயில் தெரியவில்லை, சிறு குன்றுகள், சாலையை தொடர்ந்த தென்னை மரத்தோப்புகளின் நிழல், பயணத்தை இனிமை செய்தது, வளைவு, நெளிவுகளை கொண்ட ஒரு நதி போல நடந்தது சாலை, வழியில் தெரிந்த காட்சிகளை கண்டவாறே செல்கையில் எம்மை நிறுத்தியது ஒரு கம்மங்கூழ் கடை 

             
 சாலையோர கூழ் கடை- A Road Side Porridge Shop (Bulrush, Ragi)
கூழினை சொம்பில் ஊற்றும் கடைக்காரர் -Shop Owner Served the Millet Porridge Varieties

               கடையில் இரண்டு  பெரிய மண்பானைகளில் தமிழனின் அமுத உணவு  கம்மங்கூழ், கேப்பைக்கூழ் (கேழ்வரகு கூழ் ) மற்றும் மோர் தயாராய் இருந்தது, கடை நடத்தி வரும் பெரியவர் ஒரு முகமன் செய்துவிட்டு என்ன வேண்டும் ? என கேட்டார், ஒரு செம்பு என்ன விலை ? என கேட்க , அவர் 10 ரூபாய் என்று சொல்ல , ஆச்சர்யப்பட்டு விட்டு... (மற்ற ரோட்டோர கடைகளில் குறைந்தது 15 ரூபாய் வாங்குகிறார்கள்) இரண்டு செம்பு கம்மங்கூழ் சொன்னோம். இரண்டு செம்புகளில், அரிந்து வைத்திருந்த   பொடி உள்ளிகளை  போட்டு, மோர் கொஞ்சம் ஊற்றி, பானையில் வைத்திருந்த கம்மங்கூழ் கரைசலை ஊற்றி, கரைத்து விட்டு, கொஞ்சம் உப்பு சேர்க்கையில், கூழின் மணம் நாசியை துளைத்து, ஏற்கனவே  நாங்கள் சாப்பிட்டிருந்த போதும் பசியை தூண்டியது .. கூடவே தக்காளி, பல்லாரி (பெரிய வெங்காயம் ) மிளகு சேர்த்த தொடுகறி, கடிக்க, வறுத்த சீனிஅவரைக்காய், சுண்டை வத்தல், உடன் வத்தல் பொடி, உப்புசேர்த்து, பொடியாக நறுக்கிய மாங்காய் கோஸ், ஊறுகாய்  மற்றும் பப்படப்பூ.   இவைகளை கடித்து, தொட்டு, கூழ் குடிப்பது தனி சுகம்,       மோர்+கூழ் = அமுதம், இதை தவிர வேற ஏதும் எழுத தோணல.. அத்தனை ருசி..

மணம் வீசும் கம்மங்கூழ் Bulrush / Spiked Millet Porridge or Kammangoozh

கம்மங்கூழ் குடிக்க தரப்பட்ட தொடுகறிகள். A Side Dish for Porridge (Cluster Bean Fry and Slied Mango with Salt & Red Chilly Powder, and Onion, Tomato Masala Mixed Rytha)

கம்மங்கூழ் ரசித்து குடிக்கும் ryder இளங்கோ 

            கம்மங்கூழ் குடித்துக் கொண்டே கடை நடத்தி வரும், பெரியவரிடம், கூழ் எவ்வாறு தயார் செய்வது என்று கேட்டோம், அவரும் சுவை பட கூறினார்.. கூழ் காய்க்க தேவையான கேப்பை, கம்பு, இவற்றை காலையில் தண்ணீரில் ஊற வைத்து, சாயங்காலம், ஆட்டு உரல், இல்லனா கிரைண்டர்-லயோ அரைத்து முழு மாவாக்கமால், இடை பதத்தில் எடுத்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, காய்த்து ராத்திரி முழுவதும் வைத்துக்கொள்ளவேண்டும். மறுநாள் காலையில் கேப்பை, கம்பு, கூழ் பதத்திற்கு மாறி விடும், அத்துடன் தண்ணீர் சேர்த்து கூழ் கரைசல் செய்து, மோருடன் சேர்த்து (உப்பு உங்களின் தேவைக்கேற்ப) பருகலாம். என்கிற குறிப்பை வழங்கினார்.. கடை ஓலைக்கூரையால் முடையப்பட்டிருந்தது.. வெயில் மறைக்க..  சுற்றிலும் தென்னை மர தோப்பின் நிழல்.... குடித்த கூழின் சுவை சொல்லி மாளாது.. நமது கிராமப்புற மக்களின் அமுத பானம் அல்லவா...!

கூழ் குடித்த புது தெம்பில்
              நமது ஊர்ப் புறங்களில்,  ஏர் பூட்டி வயல் உழுது , கரிசல்  காடுகளில்  கேணி வெட்டி, பச்சை பயிர்களுக்கு கமலையில் நீர் இறைத்து, பாடுபடும் விவசாய தோழர்களுக்கும், கடும் வெயிலில் பாரம் சுமந்து, கற்பாறை உடைத்து, கான்கிரிட் கலவை கொண்டு வீடு கட்டும் தொழிலாளிகளுக்கும்,   உடல் வலுவிற்கும், உழைப்பினால் ஏற்பட்ட சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தரவும், பசியை போக்கவும், அரிசியோடு  சிறுதானியங்கள் துணை புரிந்தன..கடும் வறட்சியிலும் விளைச்சல் கொடுக்கும் சிறு தானிய வகைகளான.. கூரவு (கூவரகு ) என்ற கேழ்வரகு, கம்பம்புல் (கம்பு), சோளம், குதிரைவாலி, தினையரிசி, சாமை, வரகு, காணம்  போன்றவை நம் வாழ்வில்  நீங்கா இடம் பெற்றிருந்தன. கம்மங்கஞ்சி, சோளக்காடி, சோளச்சோறு, காணத்துவயல், கேப்பைக்களி, உளுந்தங்களி, வெந்தயக்காடி, இந்த உணவு வகைகளை  நம் நாக்கு என்றும் மறவாது, மரண வீடுகளில் துட்டி(அடக்கம்) முடிந்த, மறுநாள், காலையில், காணத்துவயலோடு, சுடுகஞ்சி குடித்தது நினைவில் வருகிறது.  நமது நாகரீக உணவு முறையால் இவை மாய்ந்து போயின.. தற்போது இணைய காலத்தில் இத்தானியங்கள் மீண்டு, மக்களிடையே பயன்பாட்டுக்கு வர துவங்கியுள்ளன.தினம் தினம் இயற்கை உணவு நன்மை தரக்கூடியதென்றும், உடல் சோர்வு நீக்கும் என்றும் வாட்ஸப், முகநூல் செய்திகளை பார்த்து, வீட்டுக்கு சோளம், கூரவு வாங்கி கொண்டு போய், அதை என்ன செய்வதென்று தெரியாமல் திணறிய அனுபவம் நம்மில் பல பேருக்கு உண்டு.. இருந்த போதும் கேப்பை மாவில்  கூழ் காய்க்க இயலாமல் போனால் கொழுக்கட்டை, புட்டு, செய்யலாம், இல்லையெனில் மாவோடு சர்க்கரை, பழம்  சேர்த்து பலகாரம் செய்து, நம் இல்லத்து மழலைகளோடு   சாப்பிடலாமே...! 

* சில சிறு தானிய உணவுகள் செய்முறை பற்றி.. உணவு எழுத்தாளர்.            திரு. போப்பு அவர்களின் தொடர் கட்டுரை.. லிங்க் .  கீழே ...
Millet Foods Preparation- Tamil Hindu  

              ஊருக்கு விடை கொடுக்கும் முன்  மயிலாடும் பாறை பாடல்கள்  *(T B. கஜேந்திரன் இயக்கத்தில், மேஸ்ட்ரோ இளையராஜா இசையில்,   பன்முக ஆளுமை  கங்கை அமரனின் வரிகள், பாண்டிநாட்டுத் தங்கம் படத்தில் மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம், என்ற பாடலும், இப்போது  நகைச்சுவையில் கலக்கி வரும் தம்பி ராமையா அவர்களின் இயக்கத்தில் தேனிசைத்  தென்றல் தேவா வின் இசையில், வெளியான மனுநீதி படத்தில் இடம்பெற்ற  மயிலாடும் பாறை... பக்கத்துல ஓட.. (பாடகி : சத்யா) என்ற பாடலும் இவ்வூரின் பெருமையை பறைசாற்றின )

மறக்க இயலா ருசி 
                   மயிலாடும் பாறை கடந்து, துரைசாமியாபுரம் என்ற ஊரை அடைந்தோம், அங்கிருந்து இடப்பக்கம் பிரியும் கிளைச்சாலையின் வழியே பயணம் தொடர்ந்தது, பச்சை பசேலென்ற நெல் வயல்கள், வாழைத்தோட்டங்கள் அதிலும் குறிப்பாக செந்துளுவன் என்னும் செவ்வாழை, றொபேஸ்டா என்ற பெயர் கொண்ட பச்சைப்பழம், ரஸ்தாளி பழக்குலைகளை காண முடிந்தது, காய்கறி தோட்டங்களும், கரும்பு வயல்களும் கண்களுக்கு விருந்தாகின..... பகல் நேர வெயிலை வாங்கிக்கொண்டு, பாலஸ் விரைந்து சென்றது, ஒவ்வொரு ஊரின் பெயரை பார்த்தவாறே... இறுதியில் சுருளிப்பட்டி என்ற ஊரை அடைந்தோம், அங்கிருந்து சுருளி அருவி செல்லும் சாலையில் விரைந்தோம், சாலையின் இரு பக்கமும் திராட்சை (முந்திரி) தோட்டங்கள் நிறைந்திருந்தன.. இச்சாலை பார்க்க மிகவும் ரம்மியமானது மேற்கு தொடர்ச்சி மலையின்  அழகையும், திராட்சை கொடிகள் படர்ந்த தோட்டங்கள் வழியே பயணிப்பது ஒரு புது அனுபவம், வழியில் அங்கங்கே திராட்சை பழங்கள்  விலைக்கு கிடைக்கின்றன.. சாலை முழுதும் திராட்சை  மணமாக திகழ்கிறது ...  

ஒரு போஸ் 

 கொடியில் கொத்தாய் காய்த்து கிடைக்கும் திராட்சை கனி.  A Bunch of Grapes in a  Farm
                 
                    கூட்டம் குறைவாக இருக்கும் ஒரு சூப்பர் குளியல் போடலாம் என்ற கற்பனையில் சுருளி அருவி செல்லும் சாலையில் பயணித்தோம், கூட்டம் அதிகமாவே இருந்தது, இந்த அருவி தமிழ்நாடு வனத்துறையின் கண்காணிப்பில் செயல்படுகிறது, இளநீர், மாங்காய், சோளப்பொரி கடைகளை கடந்து, நுழைவு கட்டணம் செலுத்தி அருவி செல்லும் சாலையில் நடந்தோம், வழியெங்கும் நீள் நெடிய தேக்கு, அயினி, மற்றும் பெயரறியா மரங்களின் கூட்டம், மரங்களின் மேல் நம் முன்னோர்களின் (குரங்குகள்) நோட்டம், கொஞ்சம் கவனமாகவே செல்ல வேண்டும், 15 நிமிட ஆரண்ய பயணத்தில் நம்மை எதிர்நோக்கி காத்திருக்கிறது சுருளி அருவி.  தண்ணீர் விழுவதை விசாரித்து செல்வது நல்லது, எங்கள் நேரம் தண்ணீர் பற்றாக்குறை, அதிக அளவில் மக்கள் வெள்ளம், அவர்களை நனைக்க முடியாத அருவி வெள்ளம், பார்த்ததே போதும் என்ற மகிழ்ச்சியில் நீராடாமலே திரும்பினோம்..   தேனி, மதுரை, மாவட்ட மக்களுக்கும்  கேரளாவின் இடுக்கி மாவட்ட மக்களின்  மனம் கவர் அருவியாய் இது திகழ்கிறது, 

ஒரு வண்  மரத்து  வேரின் அருகே -Rider Elango Stay in a Big Tree Root in Suruli Falls Park 

 எங்களுக்கும் தண்ணீர் தாகம் உண்டு நண்பா-A Monkey is Waiting for Water Clicked in Suruli Falls Entrance

சுருளி அருவியை தேடி....

தாயிடம் பால் குடிக்கும் குட்டி குரங்கு (ஓர்  அரிதான காட்சி ) Infant with Mother Monkey in a Tree Cliked at Suruli Falls

             சுருளி அருவி பார்த்து முடித்ததும் எங்கள் குமுளி பயணம் தொடர்ந்தது... கம்பம்-கூடலூர்-லோயர் கேம்ப்- (தேசிய நெடுஞ்சாலை 183)  வழிகளில் வேகமாய்.. வழியில் காணும் இடத்தில சுட்டு தள்ளிய சில ஒளிப்படங்கள்...
 அறுவடை செய்த நெல் வயல்களின் அழகு. Beauty of Harvested Paddy Fields in Theni District Tamil Nadu

நெல் வயல்கள் காய்ச்சலுக்கு கிடக்கின்றன. கிளிக்கிய இடம் தேனி மாவட்டம் கம்பம் அருகே..Beauty of Harvested Paddy Fields in Theni District Tamil Nadu

Beauty of Some Coconut Trees, Theni District Tamil Nadu

                   இன்னும் சில கிலோமீட்டர்களில்  சமவெளி பாதை முடிந்து, மலை ஏற்ற பாதை செல்ல போகிறோம் என்பது தெரிந்தது...ஏற்கனவே மயிலாடும் பாறை மலைப்  பாதை எறியதில் குமுளி வழி மலைப்பாதை சிரமம் இல்லாது இருந்தது... எதிர் வரும் வண்டி குறித்த தெளிவு நமக்கு கொஞ்சம் இருக்க வேண்டும், கேரளா, தமிழ்நாடு பேருந்துகள் வளைவுகளை சுலபமாய் கடந்தன.. 2மணி வெயிலிலும்  ஜில் லென்ற குளிர் காற்று தேகத்தை தீண்டியது, முல்லை பெரியார், குமுளி எவ்வாறு  இருக்கும் கற்பனையோடு, பாலஸும் பயணித்தது.. முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து நீர் வழி மின்சாரம் பெறும்  திட்டத்திற்கென்று மலையில் போடப்பட்டுள்ள ராட்சத குழாய்களை பார்த்தபோது பிரமிப்பு ஏற்பட்டது.. மனிதனின் சக்தியையும், அதற்கென உழைத்த உழைப்பாளர்களிள் திறனும், செயல் திட்டம் வகுத்த பொறியாளர்களும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு எம் சிரம் தாழ்த்த நன்றிகள்..

குமுளி செல்லும் மலைப் பாதை மீது, காண்பது தமிழ்நாடு மாநில பகுதி . A Hill View in Kumuly Way


இராட்சத தண்ணீர் குழாய்கள்.  Beauty of Gigantic Pipes in Kumuly Highway 

A View  of Gigantic Pipes in Kumuly Highway

இந்த சாலை யோரம் 

வாகனங்கள் வராத வேளையில். On Kumily Hill Way
                மலை ஏறும் பயணம் மிகுந்த சுவாரஸ்யம் தந்தது, மூங்கில் மரங்களில் கேட்கும் க்ரீம் ..க்ரீம் ஓசை, கிக்கிளி எழுப்பும் பறவைகளின் சத்தமும், மகிழ்ச்சி அளித்தன.. குமுளி மலைப்  பாதையில், வெண்ணுரை அள்ளி வழங்கி, ஆர்ப்பரித்த சிற்றோடை அருவியின் அழகில் மயங்கி சிறிது நேரம்  நின்றோம், மயக்கிய அருவியை கேமராவுக்குள் அடக்கினோம், அதன் எதிரில் நெடிய மரங்களில் பெரிய தேன் கூடுகள் தொங்கி கொண்டிருந்த காட்சி வியப்பில் ஆழ்த்தியது, அதன் ஒளிப்படங்கள்  சில.... 

மரத்தில் மையம் கொண்டுள்ள பெரிய தேன் கூடுகள்.  Huge  Honey Combs  in a Tree, clicked in Kumily Hill way

 வனத்தின் வழியே பாயும் ஒரு பேரோடை . a Unknown Creek in Kumuly Hill Way

  வெண்ணுரை வழங்கும் வெள்ளச் சாட்டம் . Beauty of a Unknown Creek in Kumuly Hill Way

தமிழக அரசுப் பேருந்து.  a Tamil Nadu State Bus is Going to Madurai

 மதயானைக் கூட்டம் படத்தில் பார்த்த இடம்.. Infront of gigantic Pipes

வானம் பார்த்த போது 
               குமுளி மலைப்பாதை மிக அழகாக உள்ளது, மழைக்காலங்களில் இன்னும் அதிக அழகுடன் திகழ்கிறது, வளைவு கொண்ட பாதையில் கார், மற்றும் சுற்றுலா வாகனங்களில் பயணிப்போர் இயற்கையின் எழிலை கண்டு மகிழ்ந்து,  மலைக் காற்றையும் மனதார நேசித்து செல்வது நம் பயணத்தை ரசிக்க வைக்கின்றன..வழியோரம் சாயாக்கடைகள், சிற்றுண்டி சாலைகளும் இருக்கின்றன.. இம்மலைப்பாதையில் பதிக்கப்பட்டிருக்கும் ராட்சத குழாய்களை நாம் ஒரு சமீபத்திய  படத்தில் பார்த்திருப்போம்.. இயக்குனர் பாலு மகேந்திராவில் பட்டறையில் உருவான விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், இளம் நடிகர் கதிரின் இயல்பான நடிப்பில் வெளியான மதயானைக் கூட்டம் திரைப்படத்தில் இடம்பெற்ற எங்க போற மகனே.. நீ எங்க போற மகனே* ... பாடலில் இந்த மலைப்பாதையை அழகாக காட்சிப்படுத்தி இருந்தார்  ஒளிப்பதிவு கலைஞர் ராகுல் தர்மன் . அதை காணுங்கள் இணைப்பு கீழே ...


* எங்க போற மகனே.. நீ எங்க போற மகனே- பாடல் 
பாடியவர்: தஞ்சை செல்வி
பாடல் உருவாக்கம்: ஏகாதசி 
பாடல் இசை : என் ஆர் ரகுநந்தன் 
( தேசிய விருது திரைப்படமான தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, சுந்தரபாண்டியன், கிருஷ்ணவேணி பஞ்சாலை , மஞ்சப்பை, புலிவால், சிவப்பு, மாப்ள சிங்கம்  போன்ற திரைப்படங்களுக்கு இசை அமைத்த இளம் இசை அமைப்பாளர் என் ஆர் ரகுநந்தனின் தந்தை கடந்த வாரம்  மரணம் எய்தினார் .. அவரை பிரிந்து வாடும் அன்னாரின் குடும்பத்திற்கும், சொந்தங்களுக்கும் ..  எங்கள் வலைப்பூ சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள் )

பாடலை காண....

 
                   

             பயணத்தில் ஏற்பட்ட களைப்பு போக்க, மதியம் சாப்பிட இருக்கையில் மணி 3 ஆகிவிட்டதால், சோறு ஒரு ஹோட்டலிலும் இல்லை எனவே, கேரளா ஸ்டைல் முட்ட கறியும், இடியாப்பமும் தின்று பசியாற்றினோம்.. கேரளாவில் சிறு ஹோட்டல்களிலும் சாப்பாடு மிக ருசியாக உள்ளது, விலையும் கட்டுப்படியாகும் விலை தான்.. இடியப்பம் ஒன்றுக்கு 5 ரூபாய் , முட்டை கறி 15 ரூபாய்.. அப்புறம் என்ன ஆளுக்கொரு  5 இடியாப்பமும்,  கேரளா கட்டஞ்சாயாவும்  குடித்து குமுளி நகரை அடைந்தோம். 
(பயணம் தொடரும்)...
  மத்திய உணவு, முட்டைக்கறியுடன் கூடிய  இடியாப்பம். Our Mid-day Meal Idiyappam with Egg Curry
      கழிந்த 2016ஆம் வருடம் சிலருக்கு  மகிழ்ச்சியாகவும், பலருக்கு எரிச்சலாகவும் (பணம் மாற்ற வரிசையில் நின்றது), சில மாதங்கள் கசப்பாகவும் கழிந்திருக்கும், சில நினைவுகளை, மனம் வருத்தும் கவலைகளை சவுட்டி தள்ளுவோம்.. புத்தாண்டில் புதிய சிந்தனைகளை வரவேற்போம்.. புத்தாண்டு அனைவருக்கும் இனிய நாட்களை தரவேண்டும் என்று அனைவர்க்கும் வாழ்த்துக்களோடு..

என்றும்
இளங்கோ கண்ணன்.


புத்தாண்டில் சந்திப்போம்..

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 
Wish you a Happy New Year- 2017

2 comments:

  1. அழகின் வளைவுகள் மலைகளாக ���� keepjourney

    ReplyDelete
  2. நன்றி தோழமையே..

    ReplyDelete