Sunday 9 April 2017

முட்டம் கடற்கரைக்கு ஓர் இன்ப சிற்றுலா - A Picnic to Muttom Beach in Kanyakumari District

கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்பு மிக்க சிற்றுலா தலமான "முட்டம் " கடற்கரை பற்றிய தொகுப்பு இந்த பதிவு நண்பர்களே..!

         மாவட்ட தலைநகர் நாகர் கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், அலை அதிகம் வீசும் அரபிக்கடலோரம் உள்ளது இக்கடற்கரை. நாகர்கோவில் நகரில் இருந்து பேருந்து மார்கமாக செல்ல விருப்பம் உள்ளவர்கள் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து 14, 14d , 5C  முட்டம்  கடற்கரை செல்லும், அந்த பேருந்து கிடைக்காத போது  குளச்சல் செல்லும் 5d,  பேரூந்தில்  பயணித்து பின் அம்மாண்டிவிளை   சந்திப்பில் இருந்தும் முட்டம்  செல்லலாம், மகிழ்வுந்து மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்ல நாகர்கோவில் -செட்டிகுளம்-கோணம்-இராஜாக்கமங்கலம்- அம்மாண்டிவிளை வழியாகவும் , கேரளா மார்கமாக வரும் நண்பர்கள் மார்த்தாண்டம்-குளச்சல்-மணவாளக்குறிச்சி வழியாக முட்டம்  கடற்கரை அடையலாம் . 

                         "முட்டம்" என்ற பெயரை கேட்டதுமே நமக்கு தமிழ் திரைப்பட இயக்குனர். பாரதி ராஜாவின் கடலோர கவிதைகள் படம் தான் நினைவுக்கு வரும், கடல் பூக்கள், கடல், மற்றும் பல தமிழ் திரைப்படத்தில் இக்கடற்கரை வந்துள்ளது,  இவ்வூரை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்த பெருமை பாரதிராஜாவை  சாரும். நடிகர்கள் .ரேகா, சத்யராஜ்  நடந்து திரிந்து, டூயட் பாடிய  மணல்கள், பார்க்க பரவசம் தரும் இடம், ஆனால் படத்தில் பார்த்தது போல் முட்டம்  நகருக்கு தொடரி  வசதி ஏதும் இல்லை,    தமிழக அரசு பேருந்து மற்றும் நமது சொந்த மகிழ்வுந்து, ஈருருளி அல்லது நடை. இவற்றில் நமது வசதியை பொறுத்து பயணிக்கலாம்.

A Scenery from Muttom Beach 

          முட்டம் , கடல் என்றதுமே நமக்கெல்லாம் ஆனந்தத்திற்கு அளவே கிடையாது, இங்கும் விருப்பப்படி கடலில் கால் நனைக்கலாம் , மணல் அள்ளி  விளையாடலாம், குளிக்கும் ஆசை  இருப்பின் அதை விட்டு விடலாம் (நீச்சல் தெரிந்தால் கரையில் நின்று குளிக்கவும்), இங்கு அடிக்கும் அலைகள் மிகுந்த ஆக்ரோஷம் உடையவை, இறக்கம்  மற்றும் பாறைகள் மிகுந்த  அபாய பகுதி , நாம் இதை பார்க்கையில் நமக்கு அது தெரிவதில்லை,   எனவே கடலில் இறங்கும் முன் மிகுந்த கவனம் தேவை, 

            கடலின் காட்சியை  பலவாறு ரசித்தும் ஒளிப்படங்கள் எடுத்தும், மகிழலாம், உங்கள் இஷ்டப்படி ஒரு தம்மி தூணோடு எக்கச்சக்க ஒளிப்படம் எடுத்து பகிரலாம்  இங்கு அலையோடு கதைபேசவும், மாலை நேரத்தில் கதிரவன் கடலில் வீழும் காட்சியையும் காண்பதற்கு குமரி மாவட்டமட்டுமின்றி அண்டை மாநிலமான கேரள சுற்றுலா பயணிகளின்   வார இறுதி நாள் சிற்றுலா இடமாகவும் , கல்லூரி மாணவர்களின்  வகுப்பறை சுமையை குறைக்கும் தலமாகவும்  விளங்குகிறது,... கடற்கரையின் அழகில் சில ஒளிப்படங்கள்.

A Scenery from Muttom Beach 
-முட்டம்  கடலின் எழில் 








கடலின் அழகை கண்டும், கால் நனைத்து, சுத்தமான காற்றை கொஞ்சம் சுவாசித்து மகிழும் போதே, கடற்கரை பாறைகள் உங்களை வரவேற்கும், இவற்றின் மீது  ஏறி மகிழ்வது தனி சுகம், நண்பர்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்குள் அலைவீசி நனைக்கும் பாறையில் ஏற வேண்டாம், ஆக்ரோஷ அலைகள் நம்மை சுற்றி வளைத்து கடலுக்குள் இழுத்து செல்ல நேரிடும். என்னடா கடல்ல கொஞ்சம் சந்தோசமா போகலாம் னா  ஒரே பயமுறுத்தும் கதையை சொல்றனே னு நினைக்கவேண்டாம், நமக்கு பாதுகாப்பு தான்  முக்கியம்.



கடற்கரை உப்புக்காற்றில் மலரும் கடல் குவளை  

Catching Crab from sea shore in Muttom   
- கடற்கரையில் நண்டுகள் தேடும் வேட்டை






Light House in Muttom- கலங்கரை விளக்கம்   

         கடற்கரை நகரத்தின் எழில் சொக்கிப்போய் சோர்ந்தும் உங்களை குஷிப்படுத்த கடலின் உயர காட்சியை காண கலங்கரை விளக்கத்திற்கும்  சென்று வரலாம்,  உழைப்பின் சிகரமாய் விளங்கும் கடற்புறத்து மக்களின் வீடுகளை, தெருக்களை கண்டுவரலாம்,  மற்றும் அருள் புரியும் அன்னையின் தேவாலயத்தையும் பார்வையிடலாம், படகுகளில் அமர்ந்து கடல் திரையினையும், கால்  சுற்றி வரும் நண்டுகளை பிடித்து விளையாடியும்  மனமகிழ்வோடு விடைகொடுக்கலாம் முட்டம்  கடற்கரைக்கு.

 Bye..Bye.. Muttom Beach- கிளம்புறோம் டோய்... 


பயணம் தொடரும்...

நேசமுடன் 
இளங்கோ கண்ணன்.

Bus Route: 

From Nagercoil : 5C, 14A, 14C, 14DV,14EV,5F, SSS Muttom, 

From Trivandrum: Marthandam to 46C