Saturday 26 November 2016

கடல் + காயல் = கொல்லம் ( A Trip to Kerala-Kollam- Munroe Island) Part-1

கடவுளின் சொந்தம் நாடு (Gods Own Country) என்று அறியப்படும் கேரளா மாநிலத்தின் கொல்லம் (Kollam or Quilon) நகருக்கு ஒரு பயணம்.

    கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து (65 கி.மீ )சுமார் ஒன்னரை மணிநேர பயணத்தில் நாம் கொல்லம் நகரை அடைந்து விடலாம். வழியெங்கும் நீர் நிறைந்த ஆறுகள் (புழைகள்), காயல் என்று தண்ணீர் கடல் போல் பரந்து, அகன்று, பச்சை பட்டாடை உடுத்த புல்வெளிகள், வானத்தை தொடும் உயரத்தில் தெங்குகள், நம் கண்களுக்கு விருந்து அளிப்பவை. உங்கள் கேமராவுக்கு அதிக ஒளிப்படங்களை தருவதில் கேரளம் முதலிடம் பிடிக்கும் என்பது திண்ணம். 

          கொல்லம் நகரை பற்றி கேரளத்தில் வழங்கும்  பழஞ்சொல் ஒன்றுண்டு     "கொல்லம் போயால் பின்னே இல்லம் வேண்டா"  இது கொல்லம் நகரின் அழகையும், உணவு முறைகளை பொறுத்தே அமைத்திருக்கும் என்பது என் எண்ணம். அழகிய தெருக்கள், காயல், மற்றும் ஆறுகளின் நீரோட்டம் என கொல்லம் மாநகர் அழகின் இருப்பிடமாய் திகழ்கிறது.

     கொல்லம் நதி தீரம் பார்த்து தீராது,  அடுத்து கொல்லம் கடற்கரை, கடற்கரையோரம் சிறுவர், இளையோர், முதியோர் அனைவரை கவரும் வகையில் மகாத்மா காந்தி பூங்கா உள்ளது, இங்கு அமர்ந்திருக்கும்  கடல் கன்னி சிலை (Mermaid Statue) நம்மை வசீகரிக்கின்றது, அலைகள் அதிகமாய் வீசும் ஆழம் மிகுந்த அரபிக்கடல், சுருட்டும் அலைகள், கடல் கண்ட மகிழ்ச்சியில் கடலாடும் ஆசைகள் நம்மை விடாது, பார்த்து ரசிக்க மட்டுமே இக்கடல், கடலில் குளிப்பது ஆபத்தானது, அங்கங்கே எச்சரிக்கை பலகைகள் உள்ளன. அதை மீறியும் ஆசை விடவில்லையானால் கடலில் கால் நனைத்து  இன்பம் கொள்ளுங்கள்,
     
       இந்த கடற்கரையில் உப்பு நீரிலிட்ட நெல்லிக்காய், மாங்காய், அன்னாசி, புளிச்சங்காய்,  (படிக்கும் போதே நாவில் நீர் ஊருதா ..) கிடைக்கிறது, வாங்கி கடித்து கொண்டே, கடல் மணலில் வெறும் காலுடன் நடக்கலாம், உங்கள் விருப்ப பண்டங்கள் அதிகமாய் கிடைக்கிறது, ஆகவே அதை சுவைத்து மகிழுங்கள். 


மகாத்மா காந்தி பூங்கா  கடல் கன்னி சிலை (Mermaid Statue in Kollam Mahatma Gandhi Park )

இரை  தேடும் வெண் கொக்கு

          கடற்கரையின் கிழக்கு பக்கம் நோக்கி பார்க்கையில் ஒரு பெரிய ! (சிறிய) கப்பல், (Dredger Hanista)  நம்மை வா. வா.. வென்று அழைக்கின்றது. நடந்து.. நடந்து.. கடல் அலையோடு பேசிக்கிட்டே ..  போனா ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரம், பக்கத்தில் இருப்பது போன்று இருக்கும், நடக்கையில் தூரம் போகும் ( தூரம் நீ இருக்கையில் பக்கமாய் தெரிகிறாய்.. பக்கம் நானும் வருகையில்.. தூரம் நீயும் போகிறாய்..ஏதோ சினிமா பாடலின் வரிகள் ஓடும்), அதனால் முடிவு உங்கள் கையில், எப்படியோ.. கப்பல் அருகில் போனா...!,  ஒரு பிரம்மாண்டம் ( அதை வார்த்தைகளால் எழுத முடியல கண்டிப்பா பார்த்து பாருங்க).. நம் கண்ணருகில் தரை தட்டி காணக்  கிடக்கிறது.. இதை ஏராளமானோர் பார்த்தும், படம் பிடித்தும் செல்கின்றனர்..   

தரை தட்டி நிற்கும் கப்பல் (Dredger Hanista)

கப்பலின் முன்னே 

ஆயிரம் படம் எடுத்தாலும் ஆசைகள் தீராது 

பிரமாண்டமாய் கிடக்கிறதே (Dredger Hanista on Mundakkal Beach in Kollam) 

கண்ணெதிரே ஒரு கப்பல் அழகு தோற்றம்

      கேரளாவில் பொதுவாக சாப்பாடு எல்லா இடத்திலும் சுவை மிகுந்ததாய் இருக்கிறது, சிறிய தட்டு கடை முதல் பெரிய உணவகங்கள் வரை கிடைக்கும் உணவு வகைகளின் ருசி நம் நாவை விட்டு அகலாது, விலை சற்று மாறுபடும். 

     எங்கள் பயணத்தில் கொல்லம் நகரில் ருசிக்கூட்டு (Ruchikootu) என்னும் பெயர் கொண்ட ஹோட்டலில் எம் மத்தியான  உணவை சாப்பிட முடிவெடுத்து சென்றோம், எல்லா  டேபிள்களிலும் மக்கள் அதிகமாய் அமர்ந்து ஒரு "கட்டு கட்டிக்"கொண்டிருந்தனர், காலியான ஒரு இடத்தில இடம் பிடித்து உட்கார்ந்தோம், பிரியாணி சாப்பிட தீர்மானித்தோம், ஒரு கணம் சுற்றி பார்க்கையில்,  கடையில் அனைவரின் தட்டுகளையும்   மீன் கறி ஊண் (சாப்பாடு) ஆக்கிரமிப்பு  செய்திருந்தது, நாங்களும் மீன் கறி ஊணையே ஆர்டர் செய்தோம், நல்ல சூடான சூறை மீன் கறி, அதுவும் கேரளாவில் ப்ரத்யேகமாய் (மீன் குழம்பு, மீன் புளிமுளம் கறிகளில்)  சேர்க்கப்படும் கொடம்புளி* (Garcinia gummi-gutta) இட்ட, செந்நிற, மீன் குழம்பு, (மணம் இன்னும் நாசியிலே  நிற்குதப்பா) கேரளாவின் ஸ்பெஷல்   சி ஓ அரிசி சோறு (பெரிய அரிசி) மற்றும் 5+1 வகை கூட்டுகள், பப்படம் இவையோடு,  மீன்குழம்புக்கு, பருப்புக்கு, சாம்பாருக்கு, ரசத்திற்கு, சம்பாரத்திற்கு (மோர்) என போதும் போதும் என்கிற அளவு சோறு கொடுக்கிறார்கள், குடிப்பதற்கு சூடான வெந்நீர் (கேரளாவின் எல்லா உணவகங்களில் வெந்நீர் மட்டுமே வைக்கப்படுகிறது) வயிறு புடைக்க  சாப்பிட்டு பில்லை பார்த்தால் கை கடிக்காத விலை தான். சோறு-60/- ரூபாய், கறி மீன் ரூபாய்.80/-, அப்போ மறக்காம இங்கேயும் ஒரு விசிட் அடிச்சிருங்க..

மீன் கறி ஊண் (சாப்பாடு)  (a Delicious Kerala Meals with 6 variety Side Dishes)

கொடம்புளி* (Garcinia gummi-gutta) இட்ட, செந்நிற, சூறைமீன் குழம்பு





*ருசிக்கூட்டு (Ruchikootu)  ஹோட்டல், கொல்லம் பீச் ரோடு சாலையிலிருந்து பள்ளிதோட்டம் -திருமுல்லாவரம் பீச் செல்லும் சாலையில் அமைத்துள்ளது, Land Mark- SBI Atm.



கொடம்புளியின் மருத்துவ குணங்கள் மற்றும்  மேலதிக விவரங்களுக்கு கிளிக்குக..
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF             

        அடுத்த இடம் காயலின் ஆதிக்கமாய் திகழும் கொல்லம்- மன்றோ தூரத்து (Munroe Island or Muntrothurthu)  என்னும் தணுத்த பிரதேசம், அஷ்டமுடி காயல், பல கிலோமீட்டர் நீளத்திற்கு பரந்து கிடக்கிறது, காயல் கரை கடக்க படகு சேவை உள்ளது, பெருமண்- பேளும் தூரத்து வழியே எங்கள் பைக் சென்றது, காயல் வழியே படகில் பயணிப்பது நமக்கு "அதி" ரசமானது, டிக்கெட் 13 ரூபாய், இக்கரையிலிருந்து அக்கரை செல்ல, பைக் முதல் கார், லோடு ஆட்டோ, மற்றும் பயணிகளை சுமந்தபடி ஒரு பத்து நிமிட நீர்வழி பயணம், காயல் முழுவதையும்,             கேமராவில் சுட்டுத்தள்ளலாம், காயலின் நடுவே ரெயில்வே பாலம் உள்ளது, அதன் மேல் ட்ரெயின் வந்தால்  உங்கள் ஒளிப்படங்கள் எண்ணிக்கை சற்று அதிகமாகும்.. இதை தவற விடாதீங்க..   

From Prumon to Pezhumthuruthu Ferry


இக்கரையிலிருந்து அக்கரைக்கு 


பெருமண் முதல் பேளும் துருத்து தோணி பயணம் 


 From Perumon to Pelum thurthu


பெருமண் முதல் பேளும் துருத்து தோணி பயணம்


பெருமண் முதல் பேளும் துருத்து தோணி பயணம் பைக் முதல் கார், லோடு ஆட்டோ மற்றும் பயணிகளுடன்.
 

 

 From Perumon to Pelum thurthu Ferry with Travelouge, Car, and Heavy Vehicles
          


போட் அக்கறையிலிருந்து இக்கரை 

மேலும் ருசிகரமான கொல்லம் மன்றோ- தூரத்து நிகழ்வுகள், ஒளிப்படங்கள் அடுத்த பதிவில் இடம் பெறும் ...

நேசமுடன் 
இளங்கோ கண்ணன்.

Wednesday 23 November 2016

மகா கவி பாரதியின் இல்லம் தேடி... ( A Trip to Maha Kavi Bharathiyar's House)

தமிழ்க்கவிதையின் தலை மகன் பாரதி ...

"அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லயே 
உச்சிமீது வான் இடிந்து விழுகின்ற போதிலும்"...
என்று   வீரம்  கொண்டு பாடி, நாட்டு மக்களின் விடுதலை உணர்வை தூண்டி, சுதந்தர போராட்டத்தில் தமிழக மக்களை பங்கு கொள்ள செய்ததில் பாரதிக்கு ஒரு தனி இடம் உண்டு... 

தமிழகத்தின், நெல்லைச்  சீமையில் ( தற்போது தூத்துக்குடி மாவட்டம்) எட்டையபுரம் ஊரில் டிசம்பர் 11, 1882ல் பாரதி பிறந்தார், இவரின் தாய்: இலக்குமி அம்மையார், தந்தை: சின்னசாமி அய்யர், இயற்பெயர்: சுப்பையா, என்ற சுப்பிரமணியன்,  தனது ஐந்து வயதில் தாயை இழந்த அவர் தனது பாட்டி பாகீரதி அம்மாவின்  அரவணைப்பில் வளர்ந்து வந்தார்..சிறு வயதில் பள்ளிப் பாடங்களில் விருப்பு இல்லாமல் இருந்து வந்தார்  , உழைக்கும் மக்கள் பாடும் வயலோர பாடல்கள், சுண்ணாம்பு இடிப்போரின் சுவை மிகுந்த பண்களிலும் , இனிய குயிலின் கூக்கூ வெனும் ஒலியினிலும், வண்டிக்காரர் பாடும் பாட்டினிலும், கோலமிடும் பெண்கள் பாடும் கும்மிப்பாடல்கள், கீர்த்தனைகள் போன்றவற்றில் மனதை பறிகொடுத்து, கவி புனையும் திறனை வளர்த்துக் கொண்டார்..

எட்டையபுரம் ஜமீனின், அன்புக்கு பாத்திரமாய் திகழ்ந்தார், தனது பதினோரு வயதில் கவி புனையும் ஆற்றலால் பாரதி என்னும் பட்டம் பெற்றார், இந்த பட்டத்தை அவருக்கு கொடுத்தவர் எட்டையபுரம் ஜமீன்.  பாரதி சின்னப்பயல் என்று ஈற்றடியில் முடியுமாறு ஒரு பாடல் சொல்லு என காந்திமதிநாதன் கூற, எட்டையபுரம் மன்னர் முன்னிலையில், பாரதியின் டைமிங்  வரிகள் இவை  

காரது போல் நெஞ்சிருண்ட  
காந்திமதி நாதனைப் பார்-அதி (பாரதி) சின்னப்பயல்.

மரபு கவிதை பாடிவந்த, தமிழ் இலக்கியத்தில்  புதுக்கவிதை   என்ற அத்தியாயம் பாரதியோடு துவங்குகிறது, எனலாம், உயர் மேடைகளில் முழங்கி வந்த கவிதை கருவியை எளிய மக்களை நோக்கி திசை திருப்ப செய்தவர் பாரதி..


அக்கினி குஞ்சொன்று கண்டேன், 
அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் 
வெந்து தணிந்தது காடு..வெந்து தணிந்தது காடு...
தழல் வீரத்தில் குஞ்சென்றும், மூப்பென்றும் உண்டோ..?... 

என தத்தரிகிட... தத்தரிகிட.. தித்தோம் என முழக்கமிட்டவன்.. தமிழகத்தின். அக்கினி குஞ்சாய் கவிதைகளை நமக்கு கொடுத்தவன்...

நல்லதோர் வீணை செய்தே- அதை 
நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ..

சொல்லடி சிவசக்தி என்னை சுடர் மிகும் 
அறிவுடன் படைத்தது விட்டாய்..
வல்லமை தாராயோ.. இந்த மாநிலம் 
பயனுற வாழ்வதற்கே... 

என்று முழு வாழ்வையும் நாட்டுக்கே வாழ்வதற்கு, வல்லமை கொடு என சிவசக்தியை கேட்டவன் பாரதி ஒருவனே..


Bharathi's House a View 


      கோவில் பட்டி நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில், கரிசல் வயல் பூமிகளை கடந்து சென்றால், எட்டையபுரம் நகரை அடையலாம், ஊரின் வரவேற்பாய், தமிழக அரசின் பல் தொழில்நுட்ப கல்லூரியின், வாயில் மதில்களில் பாரதியின் கவிதைகளும், அரிய வகை படங்களின் ஓவியங்களும் நம்மை கவர்ந்து, பாரதியின் தீப்பொறி பாடல்கள், நம் உதடுகளில்  உச்சரிக்க துவங்குகின்றன ..

    எட்டையபுரம் பள்ளிக்கூடத்தின் மைதானம் அருகில், மகாகவி பாரதியின் மணி மண்டபம் உள்ளது. அங்கு  பாரதியின் முழு உருவச்சிலை, கம்பீரமாக நிற்கின்றது. பாரதியின் வீடு அமைந்துள்ள தெரு இன்றும் பழமை மாறாமல் இருக்கின்றது. ஊரெங்கும் மணம் வீசும் வேப்ப மரங்கள் தரும் இனிமையான காற்றும், சில நிழல் தரும் மரங்களின் நிழலும் நம்மை வழி நடத்துகின்றன .. அவர் நடந்த மண்ணில் நாமும் நடப்பது ஒரு பெருமை தரும் அம்சமாகும்... 

      பாரதியின் தெருவில் (பாரதி வீதி ) நடந்து, அவர் வீட்டை பார்க்கையில் ஒரு பெருமிதம் ஏற்படுகிறது நமக்கு, அது ஏன்...? கவிதையில் காதல் கொண்டு, நாட்டு விடுதலைக்கு பாடு பட்டு, பெண்ணுரிமையின் பெரும் குரலாய் ஒலித்து, சாதி கொடுமைக்கு எதிராய் பாடிய பாரதியின் இல்லம், எளிமையின் அடையாளமாய் திகழ்கிறது, ஓட்டுப்பணி செய்த பனங்கம்புகள், மோட்டு ஓடுகளை தாங்கி நிற்கின்றன.. திண்ணை அமைத்து பெரிய ஜன்னல்களோடு, அய்யர் வீடுகளை போன்றே அழகாய்  இருக்கின்றது..

  வீட்டில் அவரது மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது, நாங்கள் அவ்வீட்டிற்கு சென்ற நேரத்தில், ஒரு குடும்பத்தினர் (தாத்தா,பாட்டி, பேரன்) பாரதியின் பாடல்களை பாடி நம்மை பரவசப்படுத்தினர், நாம் அங்கு செல்லும் போது அவரின் பாடல்களை பாடி அவருக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்பது எம் அன்பான வேண்டுகோள்..  ...
எங்கள் காதினில் ஒலித்த பாடல்  

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா 
செல்வக்களஞ்சியமே..
என்னைக் கலி தீர்த்தே உலகில்
ஏற்றம்  புரிய வந்தாய்...

பாடலின் இனிய வரிகள் சில  

உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி 
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி 


கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான் 
கள்வெறி கொள்ளுதடி..
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா
உன் மத்தம் ஆகுதடி..

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி..
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா
என் உயிர் நின்னதன்றோ..

 படித்த பாடலின் வரிகள் தமிழ் திரைப்படத்தின் பாடல்களிலும், சில படத்தின் தலைப்புகளாகவும் வந்து நமது நெஞ்சங்களின் பதிந்துள்ளது.

பாரதி சுதந்தர தாகம் கொண்டு பாடிய பாடலின் வரிகள் இன்றும் நடைமுறைக்கு ஒத்துப்போகின்றன
அன்று அவன்
"சொந்த சகோதர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இறங்காரடி   கிளியே...
செம்மை மறந்தாரடி: ...
என்று நமது மக்களின் எண்ணத்தை படம் பிடித்தவன் ..


மகாகவி பாரதியின் இல்லத்திலுள்ள மார்பளவு சிலை 
"சாதி மதங்களைப் பாரோம்- உயர் 
ஜன்மம்  இத்தேசத்தில் எய்தினர் ஆயினும் 
வேதியர் ஆயினும் ஒன்றே அன்று 
வேற்று குலத்தினர் ஆயினும் ஒன்றே"..
என்று அப்போதே நிலவி வந்த சாதி கொடுமை வேரறுக்க பாட்டு என்னும் தீப்பொறியால் சாதி வைக்கோலை சாம்பலாக்க சபதம் பூண்டவர் பாரதி.

சாதி, பேதம், பார்ப்பது கிள்ளை பருவத்திலே நுள்ளி ஏறிய வேண்டும் என்பதன் அவசியம் உணர்ந்து பாப்பா பாடலை எழுதினார்..
"சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"

என எழுதியதோடு மட்டுமின்றி, சாதி கொடுமை தீர  புரட்சியும் செய்து காட்டியவர், என்ன புரட்சி செய்தார் என கேள்வி எழுகிறதா..?
ஆதி திராவிட இனத்தை சேர்ந்த ரா. கனகலிங்கம் என்பவருக்கு உயர் பிராமணர்கள் அணியும் பூணூலை அணிவித்து, மக்கள் அனைவரும் சமம், ஏற்றத் தாழ்வுகள், என்று ஏதும் இல்லை என முழங்கியவர்,  இந்த வாட்ஸப் காலத்திலே சாதியின் கொடூரம் குறைந்த பாடில்லை, அக்காலத்தே புதுமை புரிந்த பாரதியின் இந்த தீரச்செயல் போற்ற தக்கதே..! 

"சாதிப்பிரிவுகள் சொல்லி அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார் 
நீதிப்பிரிவுகள் செய்வார் அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார் 
சாதிக்கொடுமைகள் வேண்டாம் அன்பு தன்னில் செழித்திடும் வையம்"

சாதியை  அழித்து ஒழிக்க அன்பு  ஒன்றே போதும் என அறைகூவல் விடுத்தவர். 

ஆதி திராவிட இனத்தை சேர்ந்த ரா. கனகலிங்கம்- பாரதியின் வீட்டிலுள்ள படம் 


A Set of Photos 1st Ira. Kanagalingam

சாதி கொடுமையை எதிர்த்த  பாரதி, அந்நாளில் நிலவி வந்த  பெண்ணடிமை என்னும் பெருங்கொடுமையை முதல் ஆளாய் கண்டித்தார்.
" பெண்ணுக்கு ஞானத்தை  வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவை கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றை குத்தி காட்சி கெடுத்திடலாமோ..?
பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் காணீர்.."

பெண்கள் ஆனந்த கும்மியில்

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்று
எண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்..

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு 
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் 
வற்புறுத்தி பெண்ணைக் கட்டிக்கொடுக்கும் 
வழக்கத்தை தள்ளி மிதித்திடுவோம்... 

காத லொருவனைக் கைப்பிடித்தே அவன் 
காரியம் யாவினும் கைகொடுத்து 
மாதர றங்கள் பழமையைக் காட்டிலும் 
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி... 
                                        

      
ன பெண்களின் கற்பு, காதல் மணம், ஆண்  பெண் சமம் என்னும் புதிய விதி செய்தவர் பாரதி, 

      தனது எழுத்துக்களை, சுதேச மித்ரன், இந்தியா  போன்ற பத்திரிகைகளில் வெளிப்படுத்தி, கருத்துப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர், கவிதைகள் மட்டுமின்றி, உரைநடை, மரபு, புதுக்கவிதை, விருத்தம், கட்டுரை, என்றும் தமிழ் உலகில் அனைவரும் அறிந்த கீதையை புதிய எளிய நடையில் மொழி பெயர்த்து பாஞ்சாலி சபதம் எனும் காப்பியம் செய்து தமிழ் அன்னைக்கு பெருமை சேர்த்தவன்...
      
       வால்ட் விட்மன், கலீல் ஜிப்ரான் போன்ற  மேலை நாட்டு கவிஞர் களுக்கு  நிகராக தமிழில் வசன கவிதையை உருவாக்கியவன்.   

Bharathi's Hand Written Letters


பாரதி எழுதிய வசன கவிதை

இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை
யுடைத்து; காற்றும் இனிது.
தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று; திங்களும் நன்று.
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது
கடல் இனிது. மலை இனிது. காடு நன்று.
ஆறுகள் இனியன.
உலோகமும், மரமும், செடியும், கொடியும், மலரும்
காயும், கனியும் இனியன. 
பறவைகள் இனிய. ஊர்வனவும் நல்லன. விலங்குகளெல்லாம் 
இனியவை. நீர்வாழ்வனவும் நல்லன.
மனிதர் மிகவும் இனியர்.
ஆண் நன்று. பெண் இனிது.
குழந்தை இன்பம். இளமை இனிது. முதுமை நன்று.
உயிர் நன்று. சாதல் இனிது.


செத்துப் போவதை  இனிது என போற்றிய முதல் கவி பாரதி ஒருத்தன் மட்டுமே 


         செல்ல சிட்டுகளுக்காக (குழந்தைகள்) பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி படைத்தளித்தவன்.

        இன்று கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடும் குழந்தைகளை காக்க அன்றே பாடல் எழுதியவன், ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற அயல் மொழி பயின்றாலும் தமிழை உயர்வாய்  எண்ண வேண்டுமென எடுத்துரைத்தவன், வீட்டில் வளரும் கோழி, பசு, நாய், நம்மை தேடிவரும் காக்கை, இவற்றிற்கும்  அன்பு செலுத்துவாய், பண்பாய்   வளருவாய்.. என பாடம் படிப்பித்தவன்,  வரிகள் சில 

ஓடி விளையாடு பாப்பா, -- நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, -- ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.
1

சின்னஞ் சிறுகுருவி போலே -- நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வன்னப் பறவைகளைக் கண்டு -- நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.
2

கொத்தித் திரியுமந்தக் கோழி -- அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் -- அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.
3

பாலைப் பொழிந்துதரும், பாப்பா, -- அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் -- அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.
4

வண்டி இழுக்கும்நல்ல குதிரை, -- நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, -- இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.
5

காலை எழுந்தவுடன் படிப்பு -- பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு -- என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.
6

பொய்சொல்லக் கூடாது பாப்பா -- என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா -- ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.
7

பாதகஞ் செய்பவரைக் கண்டால் -- நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா -- அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.
8

துன்பம் நெருங்கிவந்த போதும் -- நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு -- துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.
9

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, -- தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, -- நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.
10

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற -- எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, -- நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.
11

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே, -- அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் -- அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.
12

வடக்கில் இமயமலை பாப்பா -- தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் -- இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.
13

வேத முடையதிந்த நாடு, -- நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் -- இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.
14

சாதிகள் இல்லையடி பாப்பா; -- குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி -- அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
15

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; -- தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; -- இது
வாழும் முறைமையடி பாப்பா.

புதிய ஆத்திசூடி அனைவரும் படித்து பயன்பெறவேண்டிய நூலாகும்...
http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=145&pno=153
Bhathiyar's  Used Ragas in His Poems


பாடல்களில் நெஞ்சை பறிகொடுத்த பாரதி இசையிலும், இசை நுணுக்கங்களை, பாடலில் புகுத்தி, உயர் சாதியினர் கேட்டு ரசிக்கும் கர்நாடக இசை பாடல்களை, பாமரரும் பாடும் வண்ணம் தமிழில் பாடல் வரிகளை எழுதி ராகங்களை எளியவர் நாவில் நடம் புரிய வைத்தவர் ,

பாரதி எழுதிய  யது குல காம்போதி ராகத்தில் புகழ் பெற்ற பாடல் ஒன்று

காக்கை சிறகினிலே நந்தலாலா.. நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா..

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா.. நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா..

கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா.. நின்றன்
கீதம் இசைக்குதடா, நந்தலாலா...

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா... நின்னை
தீண்டும் இன்பம் கிடைக்குதடா நந்தலாலா..


Bhathi's House Wall Phots

பாரதியின் புரட்சி பாடல்கள் பற்றி எழுதிவிட்டு, அவன் கவிதை காதலி கண்ணம்மாவைப் பற்றி எழுதாது போனால் பல ஏச்சுகளை நான் வாங்க வேண்டியிருக்கும். செல்லம்மாவை மணந்த போதும் அவன் மனம் கண்ணம்மா என்கிற  காதலியோடு அவன் கவிதை பயணித்தது.. (ஒரு வேளை செல்லம்மாவையே கண்ணம்மா என கொள்ளலாமோ..!) நண்பர்களே இனி தொடர்வது பாரதி- கண்ணம்மா கவிதைகள்.

காற்று வெளியிடை கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்..

நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி கண்ணம்மா..
தன்னையே சசி என்று சரணம் எய்தினேன்..

மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீசடி ..
வந்து சேராயோ.. கண் பாராயோ...
கண்ணம்மா... கண்ணம்மா....

நின்னை சரண் அடைந்தேன் கண்ணம்மா..
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன கொன்றவை போ என்று
நின்னை சரண் அடைந்தேன் கண்ணம்மா..

வெண்ணிலவு நீயெனக்கு மேவு கடல் நானுனக்கு
பண்ணுசுதி நீயெனக்கு பாட்டினிமை நானுனக்கு
எண்ணி எண்ணி பார்த்திடிலோர்
எண்ணமில்லை நின் சுவைக்கு
கண்ணின் மணி போன்றவளே
கட்டியமுதே கண்ணம்மா.....

சுட்டும்விழிச்சுடர் தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ...
வட்டக்கரியவிழி கண்ணம்மா..
வானக் கருமை கொல்லோ...

என பாரதியின் தாக்கத்தால் வந்த கண்ணம்மா என்னும் பெயர் தமிழ் பாடல்களில் பல வடிவிலும் வந்து நம்மை ரசிக்க வைத்தது.

கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி.. (வண்ண வண்ண பூக்கள்)
கண்ணம்மா.. கண்ணம்மா.. (சேவல்)
சின்ன சின்ன கண்ணம்மா (பாரதி கண்ணம்மா)
கண்ணம்மா கனவில்லையா ...(விஷ்வ துளசி)

தற்போதைய ஹிட் நம்ம யுக பாரதியின்
கண்ணம்மா.. கண்ணம்மா அழகு பூஞ்சிலை.. (றெக்க )பட பாடல்..


பாரதியின் கவித்துமான வரிகளில் மனதிற்கு பிடித்தது..

கூடிப்பிரியாமலே ஓரி ராவெல்லாம்
கொஞ்சி குலாவி ஆங்கே ..
ஆடி விளையாடியே உந்தன்
மேனியை ஆயிரம் கோடி முறை
நாடித் தழுவி மனக்குறை தீர்ந்து நான்
நல்ல கலி எய்தியேன்.
பாடி பரவசமாய் நிற்கவே தவம்
பண்ணிய தில்லையடி..

வறுமையில் வாழ்ந்த போதும் பொதுமையை போதித்த கவி பாரதி

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் -- இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து -- இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.


என்றும் 
பல மொழிகளை  கற்றுணர்ந்த  போதும் 
"யாமறிந்த மொழிகளிலே 
தமிழ் போல இனிதாவதெங்கும் 
காணோம்" என முழங்கியவன்.

(A Photo Frame of Maha Kavi Bharathi)

           பாரதி வீட்டை பார்க்கப்போய் பல பக்கம் அவரின் பாடல்களால் இக்குறிப்பை எழுதிவிட்டேன். கருத்தை  நீங்கள் தான் தெரிவிக்க வேண்டும், நாம் நாட்டு விடுதலை, நாட்டுவளம், கவிதை, சுதந்திர தலைவர்களின் வரலாறு, போன்றவற்றை விளக்கும் நம் முண்டாசு கவிஞன் வீட்டுக்கு குடும்பத்துடன், குழந்தைகளுடன் சென்று வாருங்கள் நண்பர்களே... 

      மேலும் எட்டயபுரத்தில், இஸ்லாமிய கம்பர் என அழைக்கப்படும் உமறுபுலவரின் மணி மண்டபமும் உள்ளது, அதைக் கண்டு தமிழ் மணம் நிறைந்து கிடைக்கும் ஊரில் தமிழை சுவைத்து வாருங்கள்.. 


கோல் கைக்கொண்டு நடை போட்ட பாரதி Bharthi's Photo

நிறைவாக பாரதியின் பாடலில் பல அன்பர்களால் அடிக்கோடிட்ட கவிதை ஒன்று..

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்..

இக்கவிதையை பாடல் வடிவில் கேட்க 
படம்: மகாநதி 
பாடல்- தன்மானம் உள்ள நெஞ்சம் 
பாடியவர்: உலகநாயகன் "கமல் ஹாசன்"
இசை: இளையராஜா 

http://www.starmusiq.com/tamil_movie_songs_listen_download.asp?MovieId=677


நேசமுடன்
இளங்கோ கண்ணன்.

Wednesday 16 November 2016

கிழக்கு கடற்கரையின் சொர்க்கம் - தனுஷ்கோடி ( Bay of Bengal's Coastal Paradise- Dhanushkodi)

   
கிழக்கு கடற்கரையின் சொர்க்கம் - தனுஷ்கோடி ( A Ride to Dhanuskodi & Rameshwaram)

  இந்தியாவின் சிறந்த புண்ணியத்தலங்களில் ஒன்று இராமேஸ்வரம். இந்துக்களின் புனித நீராடலில் முக்கியத்துவம் வாய்ந்தது  காசி கங்கை நீராடல், இராமேஸ்வரம் கடல் நீராடல், முக்கடல் சங்கமம் என்று அழைக்கப்படும் கன்யாகுமரி புனித கடல் நீராடல். இந்த முறை எங்கள் பயணம் இராமேஸ்வரம் மற்றும் ஒரு முறை சென்றால் நம் மனதில் பல முறை அசைபோடவைக்கும், இந்திய & தமிழக சுற்றுலா இடங்களில் ஆகச்சிறந்த இடமான தனுஷ்கோடி .

இராமேஸ்வரம் இராமநாத சாமி கோவில் (Rameswaram Ramanthasamy Temple)*

         பொதுவாக இராமேஸ்வரம் என்றாலே நம் மனதில் முதலில் மையமிடுவது "கடலுக்கு நடுவில டூ பாயிண்ட் பைவ் கிலோமீட்டர் பாம்பன் பாலம் ஏதாவது ஆகுமானு சந்தேகம் இருக்கா" னு சங்கர் சிமெண்ட் விளம்பரத்தில் பார்த்த பாம்பன் பாலம், பாம்பன் பாலத்தில் ட்ரெயின் போகும் காட்சி தமிழ்  திரைப்பட இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவான  "நந்தா" திரைப்படத்தில் "முன்பனியா.. முதல் மழையா"  பாடலில் மிக அழகாக ஒளிப்பதிவு இயக்குனர் ரத்னவேலு காட்சிப்படுத்தியிருப்பார். பாம்பன் பாலம் பாக்கணும் என்கிற ஒரு கொதி எல்லாருக்கும் இருக்கும், அந்த பாம்பன் பாலத்தின் மையப்பகுதில் நின்று கடலில் அசைந்தாடும் படகுகளை பார்த்தவாறே... சுற்றுலா பயணிகளின் சிறு பசியை போக்க நடை வியாபாரிகள் வைத்திருக்கும் வறுத்த நிலக்கடலை, வத்தல் பொடி  உப்பு சேர்த்த மாங்காய், வெள்ளரிப்பிஞ்சு, சோளம், அன்னாசிப்பழம், ஐஸ் கிரீம் இவற்றை தின்று கொண்டே கடல் அழகை ரசிக்கலாம், காலையில் கதிரவன் உலா வரும் காட்சி, மலையில் கடலுக்குள் விழும் காட்சி, இவை மனதை கொள்ளை கொள்ளும், பாம்பன் பாலம் எந்நேரமும் ( நடுப்பகல் பன்னிரண்டு மணியிலும் கூட ) ஆள் கூட்டமாய் இருப்பதே அதன் தனி  அழகு. பாம்பன் பாலத்தில் தொடர் வண்டி ( ட்ரெயின்) வரும் நேரத்தை தெரிந்து வைத்து கொண்டு சென்றால் பல ஒளிப்படங்கள் உங்கள் கேமரா வில் பதிவு செய்து கொள்ளலாம்.  ...      ..

கடல் நடுவே பாம்பன் பாலம் (India's Best Pamban Sea Bridge*)
       

கடல் நடுவே பாம்பன் ரயில்  பாலம் (India's one of the Beautiful Railway Bridge)*
                                         
ஓர்  அரிதான காட்சி (A Rare Beautiful Secen)*
         Image courtesy: Google Image*                         

           எங்கள் பைக் பயணம் கோவில்பட்டியிலிருந்து துவங்கியது, வழியெங்கும் கரிசல் மண் பூத்திருக்கும் வயல்களை (மானம் பாத்த பூமி ) கடந்து, அந்த கரிசல் காட்டினிடையே ஒத்தையில் நின்றிருக்கும் வேப்ப மரங்களை  ரசித்தபடியே சென்றோம்,

           சாலை "மாக்கவி பாரதி" பிறந்த எழுச்சி மண் எட்டையபுரம் நகரை  கடந்து சென்றது (அடுத்த பதிவில் அது இடம்பெறும்), விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகில் காலை டீ குடித்துவிட்டு, பைக்  விரைந்தது. விளாத்திகுளம் சூரன்குடி சாலையில் சென்று கொண்டிருந்த போது,  காலை பயினி (பதநீர்) வாசம் எங்கள் பைக்கை நிறுத்த செய்தது. சாலை எங்கிலும் அதிகமாய் வளர்ந்திருந்த நமது மாநில மரமான "பனை" (கற்பகத்தரு) மரங்களிருந்து, உடலெல்லாம் உரமாகி வலுப்பெற்றிந்த ஒரு அண்ணன்,  பனைமரத்தில் பயினி எடுப்பதற்காக பனை மரத்தில் கட்டப்பட்ட மண் கலயங்களில் இருந்து  பதநீர் எடுத்துக்கொண்டிருந்தார்.   அருகில் நின்றவர்களிடம் விசாரித்த போது  " தம்பி நல்ல ருசியான பயினி தான் கலப்படம்* ஏதும் இருக்காது வாங்கி குடிக்கலாம்"  என்று சொன்னதை கேட்டுக்கொண்டே பயினி எடுத்துக்கொண்டிருந்த அண்ணனிடம் சென்றோம், ஒரு புன்னகையோடு வரவேற்ற  பின்னர், கொஞ்சம்  நில்லுங்க அடுத்த  மரத்தில இருந்து பதநீ எடுத்து தரேன், என்று கூறியவாறு மரத்தில் ஏற தொடங்கி விட்டார், அவர் மரம் ஏறுவதை பார்க்க நமக்கு வியப்பு,  பனை மரத்தில் "ஸ்ரா"  நெஞ்சில் உரசி காயம் ஏற்படாமல் இருக்க ஒரு கவசம் அணிந்து விரைவாய் ஏறி, பதநீ கொண்டு வந்து தந்தார், மனதை கிறங்க வைக்கும் பயினி மணம், உடனே ஒரு பனை ஓலையில் பட்டை முடைந்து, அதில் சுண்ணாம்பு சேர்த்த பயினி ஊற்றி கொடுத்தார், இன்றும் அடி நாக்கில் இனிக்கும் ஒரு ருசி, ஆளுக்கு இரண்டு பட்டை பதநீ குடித்து விட்டு, கையில் இருந்த தண்ணீர் போத்தலில் ஒரு பாட்டில் முழுவதும் பதநீ நிரப்பி விட்டு கிளம்ப தயாரானோம், என்னடா ஓசியிலேயே பயினி குடிச்சிட்டு எஸ்கேப் ஆயிட்டோம் னு நினைக்கிறீங்களா?

          பயினி விலை குறைவு தான் ஒரு பட்டை ஒரு சின்ன கலயம் பத்து ரூபாய் தான்,  ஒரு லிட்டர்  தண்ணீர் பாட்டில் நிரம்ப இருக்கும் பயினி முப்பது ரூபாய்க்கு தான் அந்த அண்ணன் கொடுத்தாரு, நம்மளோட இயற்கை தந்த ஆற்று, ஊற்று தண்ணீரை அதிவேகமா உறிஞ்சி நம்ம விவசாயத்தை காவு வாங்கும் பன்னாட்டு  அரை லிட்டர் "7அப், மிரிண்டா,பாண்டா ஸ்ப்ரைட்" போன்ற பன்னாட்டு குளிர் பானம் முப்பது ரூபாய், அதுலயும் கூலிங் இருந்தா ரெண்டு ரூபா எக்ஸ்ட்ரா, வாங்கி நம்மள கேனயன் ஆக்குறாங்க, நாமளும் ஒண்ணும் சொல்லாம கொடுக்குறோம், முழு உடல் உழைப்பை கொடுத்து தினம் பிரெஷ் ஆ கிடைக்கிற பயினி குடிக்க யோசிக்கிறோம், கொஞ்சம் நம்ம நாட்டு சத்தான இளநீர், பதநீர் பருகும் பழக்கம் அதிகரிக்கணும் என்கிறது தான் என் எண்ணம்.

* ( சில இடங்களில் கலப்பட பதநீர் கிடைக்கின்றது, சுத்தமான பதநீர் என்றால் காலை ஆறு மணியிலிருந்து மூன்று மணி நேரம் வரைக்கும் சுவையாக இருக்கும் நேரம் செல்ல செல்ல நுரைத்து புளித்து சலிக்க ஆரம்பித்து விடும், பயினி பொடி சேர்க்கப்பட்ட பதநீர் நாள் முழுவதும் அப்படியே இருக்கும், சில இடங்களில் மாலை பதநீர் கிடைக்கின்றது, இதுவும் மிகுந்த சுவை நிறைந்ததே. )
பனை மரத்தில் கட்டப்பட்டிருக்கும் பயினிக்  கலயங்கள் ( Palm Juice Collected in Mud Pots)

மண் கலயங்களில் இருந்து எடுத்த புதிய பிரெஷ் -ஆன  வாசம் மிகுந்த பதனீர் ( A Sweet Smelled Palm Juice) 


     பயினி குடித்து விட்டு பைக் வேகமாய் சென்றது, வேம்பார், சாயல்குடி, சாலையில் பறந்தது, வழி எங்கும் சாலை நன்றாகவே இருந்தது, கிராம மக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள், உற்சாகமாய் புறப்பட்டு, பேருந்துக்கு காத்து  நிற்கும்  காட்சிகள், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்பவர்கள், பயினி எடுக்க பனைமரம் ஏற செல்பவர்கள்,   என காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தன, இங்கு வாழும் மக்களின் வீடுகளில் மதில்கள் (Compound Wall) நம்மை ஆச்சர்ய பட வைத்தன, காரணம் இவை பனை மரத்தில் இருந்து கிடைக்கும் கருக்கு மட்டைகளை வரிசையாக நிரல் செய்து ஒரு அரண், வேலி போல அமைத்திருந்ததே ஆகும். சாலை தமிழகத்தின்  முக்கிய தர்காவான ஏர்வாடி நகரை கடந்து சென்றது (பார்க்க வேண்டிய தர்காவாகும்), தொடந்து கீழக்கரை, எங்கள்    பயணத்தில் நங்கள் பார்க்க தவறிய இடமாக அமைந்தது. பின்பு கீழக்கரை நகரின் சிறப்புகளை அறிய முடிந்தது, அழகான வங்க கடல் கரை, முகமதிய நண்பர்கள் அதிகம் வாழும் பகுதி, சுற்றிலும் பிரியாணி மணம். திருநெல்வேலிக்கு "அல்வா" எவ்வளவு சிறப்போ அது போல் கீழக்கரை "துதல் அல்வா " (kilakarai thothal) அத்தனை ருசி நிறைத்த பண்டம் ஆகும், இராமேஸ்வரம் போனீங்கன்னா கண்டிப்பா கீழக்கரை  துதல் சாப்பிட மறக்காதீங்க...!

 கீழக்கரை பற்றிய மேலும் பல சுவையான தகவல்கள்  http://www.kovaineram.in/2014/12/blog-post.html

சுவை நிறைந்த கீழக்கரை துதல் அல்வா ( A Sweet Meat name as Thuthal Halwa in Kilkarai)*

கீழக்கரை துதல் கிடைக்கும் சிறப்பிடம் (Famous Thuthal Halwa Shop in Kilakarai)*

சுவை நிறைந்த கீழக்கரை துதல் அல்வா ( A Sweet Meat name as Thuthal Halwa in Kilkarai)*
*Image courtesy: Google Image  & Kovai Nearam.Blogspot.com
     
        இராமேஸ்வரம் செல்லும் பாதையில் தான் எத்தனை சுவையான நிகழ்வுகள். எங்கள் பயணத்தின் நோக்கமே இது தான் வழக்கமான சுற்றுலாவாக இல்லாமல் கொஞ்சம் புதிதாய் யோசித்த வழி தான் இது, சாலையில் போகும் பொது கூட நம்ம ஊரு மக்களை சந்திக்கணும் அவங்க வாழ்கை முறைகளை தெரிஞ்சிக்கணும் என்பதற்காக எங்கள் தேர்வு கிராம சாலைகள் வழியாகவே அமைந்திருந்தது. பைக் திருப்புல்லாணி வழியே சென்றது திருப்புல்லாணியில்  அமைந்துள்ள கோவில் பார்க்கவேண்டிய ஒன்றாகும், அவ்வூரினை சுற்றி நீர் நிறைத்த குளங்கள், ரம்மியமானவை நீங்கள் ஒரு போட்டோ பிரியர் என்றால் நீங்கள் பயணப்பட குறிப்பிட்ட இந்த பாதையில் தான்.

             இரகுநாதபுரம் ஊரில் ஒரு சிறிய வழியோர கடையில் காலை உணவு சாப்பிட சென்றோம், பொதுவாக இந்த வழியில் உள்ள ஹோட்டல்களில் புரோட்டா, சால்னா அதிகமாய் கிடைக்கின்றது, டிபனை முடித்து பைக், பிரப்பன் வலசை முக்கிய சாலையில் விரைந்தது, மண்டபம் கேம்ப், கடந்தால் நாம்  வியக்கும் பாம்பன் பாலம், ஒரு பேர் அதிசயமாய் நம்மை பிரமிக்க வைக்கின்றது, கடல் நடுவே கம்பிரமாய் நின்று காட்சி அளிக்கின்றது.

பாம்பன் கடல் ரெயில் பாலம் 


     பாம்பன் பாலத்தின் மத்தியில் நின்று  நீல கடல் அழகை ரசிக்கும் போதே நம்மை ஒரு சோகம் ஆட்கொண்டு விடுகின்றது. 1964ம் ஆண்டு *(டிசம்பர் 22-25) ஏற்பட்ட சூறாவளி புயல் காற்றால் பெயர்த் தெடுக்கப்பட்ட  ரெயில்வே பாலத்தின் துண்டுகள் கடலில் காண கிடைக்கின்றன. அன்றைய தினம் இரவு 11.50க்கு புறப்பட்ட இராமேஸ்வரம் பயணிகள் ரெயில் (தொடரி) சூறாவளி புயல் உருவாக்கிய ஒரு பேரலையால் (சுனாமி)  கவிழ்க்கப்பட்டு அனைத்து பயணிகளும் உயிர் விட்டனர். இந்த செய்தியை படித்த பின்னர் நாம் அந்த பாலத்தில் நிற்கும் போது சோகங்கள் நம் மனதோடு உலவுகின்றன...

கடல் அழகை ரசித்தபடி ( பாம்பன் பாலம் மய்ய பகுதி ) 
கடலாடும் படகுகள் ( A Sea View on Pamban Bridge)
கடலாடும் படகுகள்

 
   பாம்பன் பாலம் அழகை ரசித்தது முழுமை அடையாமலே, இராமேஸ்வரம் நகருக்குள் செல்ல பைக்கை முடிக்கினோம், தங்கச்சிமடம், அக்காள் மடம் என்ற ஊர்களின் பெயர்களை நினைத்து வியந்து சென்று கொண்டிருந்த பொது வழியில் "பேக்கரும்பு" என்ற இடத்தில் பைக்கும் மனதும் நிலை குத்தி நின்றன.. அதன் காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும்,  இளைஞர் எழுச்சி நாயகன், ஏவுகணை வல்லரசன் , குழந்தைகள் முதல் முதியவர் வரை விரும்பும் எளிமை உள்ளத்தின் சொந்தக்காரர் "அ ப ஜெ . அப்துல் கலாம்" அவர்களின் நினைவிடம் இங்கு தான் அமைந்துள்ளது.

அய்யா அப்துல் கலாம் அவர்களின் நினைவிடம் ( Great Man APJ Abdul Kalam's Cemetery)*
Image courtesy: Google Image*

   அய்யா அப்துல் கலாம் அவர்கள் நினைவிடத்தை வணங்கி விட்டு, இராமேஸ்வரம் நோக்கி பயணம் தொடர்ந்தது, வழியெங்கும் பெரிய பதாகைகள் சுற்றுலா காணவேண்டிய இடங்கள், உண்டிவில் தீர்த்தம், பாண தீர்த்தம், மிதக்கும் கல் என்று பல விடயங்கள் இராமேஸ்வரம் நகரில் உள்ளன. இராமேஸ்வரம் நகரில் பல தங்கும் விடுதிகள் உள்ளன (நமது பட்ஜெட் தீர்மானித்து தங்கி கொள்ளலாம்.) 

      இராமேஸ்வரம் நகரில் முதலில்  நாங்கள் சென்றது நம் எழுச்சி நாயகர் "அப்துல் கலாம்" அய்யா அவர்களின் வீட்டிற்கு, அவரது இல்லம் சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது, அந்த இல்லத்தை பார்க்கையில் நமக்கு வியப்பு ஏற்படுகிறது, நம் நாட்டின்  குடியரசு தலைவராய், ஏவுகணை அரசராய், பல பெருமை மிகு பதவிகள் வகித்த நம் பேரன்பிற்கு பாத்தியமான அய்யா அவர்களின் இல்லம் மிக எளிமையாக இருந்தது, அங்கு அவர் படித்த புத்தகங்கள், இராணுவ உடை, பல அரிய  ஒளிப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன, தினமும் பல நாட்டவர் அதை பார்த்து ஆச்சர்யம் கொள்கின்றனர், பள்ளி மாணவ, மாணவியர்கள்   அய்யாவிற்கு மரியாதையை செலுத்திவிட்டு அவர்கள் நமக்கு ஆக்கி அளித்த அக்கினி சிறகுகள், திருப்புமுனை, எனது பயணம், நீ ஒரு தனிப்பறவை, இந்தியா 2020, ஆகிய புத்தகங்களை   விரும்பி வாங்கிச் செல்கின்றனர்,


A Navigation Board of Dr. APJ. Abdul Kalam's House*




அப்துல் கலாம் அவர்களின் வீட்டின் முகப்பு   (Front view of  APJ Abdul Kalam's Home*)

அப்துல் கலாம் அவர்களின் வீட்டின் உட்பகுதி  (Interior view of  APJ Abdul Kalam's Home*)
Image courtesy: Google Image*

   மத்தியான உணவை ஒரு சின்ன கடையில் முடித்தோம், விலையை, ருசியை, நன்றாக விசாரித்து கடையை முடிவு செய்து சாப்பிட செல்லுங்கள் நண்பர்களே, எங்கள் அனுபவம் கடல் மீன் திங்கும் ஆசையில் எங்கள் பைசாவை நஷ்டப்படுத்திக் கொண்டோம். திட்டமிட்டபடி வெயில் தாழ்ந்த   நேரத்தில், தனுஷ் கோடி செல்ல ஆரம்பித்தோம், மீனவ குடிசைகள் பெரிய வீடுகள், தாண்டி கடல் மையமிட்ட இடங்களில் சவுக்கு (காத்தாடி) மர தோப்புகளுக்கு நடுவே சாலை அமைந்திருக்கின்றது, வண்டிகள் அதிகம் வராத சாலை, பைக்வேகம்  100 ஐ தொட்டது, தனுஷ் கோடி சாலையில்   சில தீர்த்த கோயில்கள் அமைத்துள்ளன, நிழலுக்கு சவுக்கு மர தோப்பில் சற்று இளைப்பாறலாம், கடல் தீரங்களில் கால் நனைக்கலாம், 

    சாலையில் வலது பக்கத்தில் மணல் மேடுகளை அடுத்து அலையடிக்கும் (அதிகம் அலை இல்லை ) கடல், இடது பக்கத்தில் காயல் போன்ற பரந்து அகன்ற நீர் தடாகம்.. உள்ளே சிறு கெட்டு வள்ளங்கள், கூகிள் மேப் அந்த பகுதியை பழைய யாழ் - தனுஷ் கோடி துறைமுகம் என்று குறிப்பிட்டது, தெரிந்த உள்ளூர் நண்பர்கள் இருந்தால் அங்கு சென்று வரலாம், நமக்கு அந்த கொடுப்பினை இல்லை, வேகம் தொட்ட பைக் கோதண்ட ராமர் கோவில் வாசலில் நின்றது, ரம்மியமான இடம், கோவில் செல்லும் சாலையில் இரு புறமும் தண்ணீர் பரந்துள்ளது, ஒரு தீவிற்கு செல்வது போன்ற இன்பத்தை அளிக்கின்றது, இராமேஸ்வரம் நகரில் வெயில் கொளுத்துவது கொஞ்சம் அதிகமா இருக்கும், ஆகையால் கையில் எப்போதும் தண்ணீர்  போத்தல் வைத்துக்கொள்வது அவசியம்.

கோதண்ட ராமர் கோவில் செல்லும் சாலை ( Way to Sri Gothanda Ramar Temple*) 

கண்ணருகில் தெரிவது கோதண்ட ராமர் கோவில் ( a View of Sri Gothanda Ramar Temple*) 

கோதண்ட இராமர் திருக்கோவில்  (Front View of  Sri Kothanda Ramar Temple, Dhanuskodi, Rameswaram*)
Image courtesy: Google Image*

ரம்மியமான இராமேஸ்வரம் கடற்கரை  (Sandy Beach in Rameswaram)

    கோதண்ட ராமர் கோவில் கும்பிட்டு முடித்து தனுஷ் கோடி செல்லும் சாலையில் பயணித்தோம் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில்  முகுந்தரையர் சத்திரம் என்னும் ஊர் வருகிறது, சாலையின் முடிவாய்  அமைந்திருக்கின்றது. சுற்றுலா செல்லும் பயணிகளின் நிறைவிடம் அதுவே, அதற்கப்பால் சாலையில் செல்ல அனுமதி இல்லை, போலீஸ் செக் போஸ்ட் உள்ளதால் நம்மை விட மறுக்கின்றார்கள்.. அப்போ எப்படி தான் தனுஷ் கோடி போறது-னு கேக்குறீங்களா.. நம் வசதிக்காக நிறைய உள்ளூர் வேன் சர்வீஸ் வண்டிகள் உள்ளன ஆள் ஒன்றுக்கு ரூபாய் 150 வசூல் செய்கின்றனர், கடல் தீரம், தண்ணீர் இவைகளின் நடுவில் பயணப்பட்டால் இந்தியாவில் கிழக்கின் எல்லை என்று நாம் சொல்லிக்கொள்ளலாம், தனுஷ் கோடி சென்று அடையலாம். வழி நடுவில் வேன் ரிப்பேர் ஆகிவிட்டால்  ... உங்களுக்கு கடல் அழகை முழுவதும் கண்டு ரசிக்கும் யோகம் அடித்திருக்கிறது என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள் நண்பர்களே...!.. 
முகுந்தரையர் சத்திரம் ( The Last Stop of Rameshwaram*)
Image courtesy: Google Image*
    எங்களுக்கு வேன் பயணத்தில் விருப்பம் இல்லை, செக் போஸ்ட் போலீஸ் கிட்ட பெர்மிஷன் கேட்டும் அவங்க விடறது மாதிரி தெரியல...அங்க கடை வச்சிருந்தவர்களிடம் கேட்டோம், அவங்க "எதுக்குப்பா கஷ்ட படுறீங்க ஒரு நூத்தம்பது ரூபா கொடுத்த வேன்-ல கூட்டிப்போய் காட்டுவாங்க" என்று சொல்ல ..    என்னடா இப்படி  பண்ணுறீங்களே ..? என்று சலித்து விட்டு கடலில் கொஞ்ச நேரம் கால் நனைத்து விட்டு ஒரு குளியல் போட்டுவிட்டு திரும்பினோம். எப்படியாவது தனுஷ் கோடிக்கு நடந்தாவது போய் தீரணும் என்கிற முடிவோடு திரும்பினோம்...

     மாலை 7மணி அளவில் இராமநாத சாமி கோயிலுக்கு சென்று கோவில் அழகையும் அங்கு குடியிருக்கும் தெய்வங்களையும் பார்த்தது தரிசனம் செய்து திரும்பினோம், இராமேஸ்வரம் கோயிலில் புண்ணிய தீர்த்தங்கள் ஆடுவது தனி சிறப்பு, அதை நம்மில் பலரும் அறிந்த ஒன்று. மக்கள் கூட்டம்  குறைவாக உள்ள நேரங்களில் செல்வது சிறந்தது, கோவிலின் சுற்று பிரகாரம் இந்தியாவில் மிகப் பெரியது ஆகும் (India's Longest Corridor). நடந்து செல்வதும் கோயிலின் சிற்பங்களை ரசிப்பதுமாய் குறைந்தது இரண்டு மணி நேரம் எடுத்துக்கொள்ளும். கோவிலினுள் ஒளிப்படக்கருவி, கேமரா போன், எடுத்துச் செல்ல அனுமதி இல்லை, கோவிலின் புறப்பகுதியில் அதற்கென தனி கடைகள் அமைந்துள்ளன, அங்கு பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம். மிக சிறந்த வழி நாம் தங்கி இருக்கும் அறைதனில் வைத்துச் செல்வது ஆகும். 

கோவில் பூஜை நேரம் மற்றும் தகவல்களுக்கு ...


இராமநாத சாமி கோவில் நுழைவு தோற்றம் ( Front View of Ramanathasamy Temple)

இராமநாத சாமி கோவில் சுற்று நடை பாதை   ( Longest Corridor of  Ramanathasamy Temple)

இராமநாத சாமி கோவில் சுற்று நடை பாதை   ( Longest Corridor of  Ramanathasamy Temple)


    கோவிலின் அருகில் பல கடைகள் இருக்கின்றன, கடல் சங்கு, முத்து, கிளிஞ்சல்கள்,சோழி, போன்ற பல பொருட்கள் கிடைக்கின்றன, குறிப்பாக ஸ்படிக லிங்கங்கள் எக்கச்சக்கமாய் காண கிடைக்கின்றன..அவற்றை விசாரித்து வாங்குவது நல்லது, போலிகளை கண்டு ஏமாற வேண்டாம், 

     வடக்கு வாசல் கோபுரத்தில் அருகில் ஒரு டீக்கடையில் வார்ப்பு போன்ற பாத்திரத்தில், பாத்திரத்தின் விளிம்புகளில் பாதம், பிஸ்தா, அரைத்த விழுது சுற்றி அலங்கரிக்க கொதிக்க கொதிக்க சூடான பசும் பாலில் அதை சேர்த்து இனிக்க இனிக்க தருகின்றார்கள்... அதை மாலை வேளையில் பருகலாம், 

      சாலையோர கடைகளில் இரவில் இட்லி, முறுவல் தோசை, சூடாக கிடைக்கின்றது, உடன் சாம்பார், தக்காளிச்சட்னி, காரச்சட்னி, தேங்காய் சட்னி, என நான்கு வகை பதார்த்தங்களுடன் கிடைக்கிறது... அதை ருசித்து சாப்பிடலாம். 




       மறு நாள் காலை டிபனை முடித்து விட்டு, ஒரு இரண்டு பார்சல் இட்லி சாம்பார் வாங்கி வைத்து கொண்டு, இரண்டு போத்தல் தண்ணீர் நிரப்பிக்கொண்டு, முகுந்தரையர் சத்திரம் சென்று, பைக்கை வைத்து விட்டு தனுஷ் கோடி சாலையில் நடக்க ஆரம்பித்தோம், நடக்கையில் ஒருவர் எதிர்ப்பட்டு " என்ன வேன் ல போகலாமே "என்றார் .. இல்லண்ணே நடந்து போறதுன்னு முடிவு பண்ணிட்டோம் னு சொல்ல, போய்ட்டு வர 10 கிலோமீட்டர் ஆகுமே னு சொல்லி வழி  அனுப்பி வைத்தார்,  வங்க கடல் அழகை ரசித்து, ஒளிப்படம் எடுத்து, சின்னச்சின்ன  நண்டுகள் பிடித்து, நடந்து செல்ல செல்ல, தனுஷ் கோடியில் முகம் காட்டியது நம் மனதை விட்டு விலகாத கிருஸ்துவ தேவாலயம், 

கடலோரம் நடைபோடு ... கண்ணருகே  தெரிகிறதே .. தனுஷ் கோடி 


சிதைந்த கிருஸ்துவ தேவாலயம் (  Beautiful
Damaged Cathedral) 
                                   
   புயலில் சேதம் அடைந்தும், சிதைந்தும் கிடைக்கிறது தனுஷ் கோடி ஊர், இன்னும் அந்த சோக வடுக்கள் மாறாமலே இருக்கின்றன, இவற்றை நம்மவர்கள் புதிப்பிக்கவும் இல்லை, சுற்றுலா இடமாக மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதற்கு  இங்கு நாம் பயணப்படும்  சாலையே போதுமானது, பலமுறை பல தரப்புகளால் கோரிக்கை வைக்கப்பட்டும் எப்போது விடிவு வருமோ..? பதில்  காலத்தின்  கைகளில்..!.


புயலில் உருக்குலைந்த ஒரு கட்டிடம் ( A damaged building by the Dhanuskodi Cyclone)

     தனுஷ் கோடி ஊரில் சுற்றுலா பயணிகளுக்கான பெரிய வசதிகள் ஏதும் இல்லை, இங்கு வரும் சுற்றுலா வாசிகளை நம்பியே சிறு வியாபாரிகள் தொழில் செய்து வருகின்றனர், சின்ன சின்ன சர்பத் கடைகள், இங்கு குடிநீர் கிடைப்பது மிக கடினம் ஆகும், அதனால் சர்பத் விலை கொஞ்சம் அதிகம் தான் (15 ரூபாய்) வெயில் சூடு அதிகம் என்பதால் இவை நமக்கு அவசியமானது, நீர் வேட்கையில் இருந்து தப்பிக்க போஞ்சி அருந்தலாம் மேலும் நமக்காக பல மைல் தொலைவில் இவர்கள், மாங்காய், அன்னாசி, பிஸ்கட், போன்ற நொறுக்கு தீனிகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர். அதனால் கண்டிப்பாக ஒரு ஐம்பது  ரூபாய்க்காவது  எதாவது வாங்கி சாப்பிடுங்கள் நண்பர்களே...!, ,   . 

   தேவாலயம் அமைந்துள்ள பகுதியில் உடைந்த ரயில் நிலையம், இடிந்த தபால்  நிலையம், இவற்றை பல கோணங்களில் ஒளிப்படம், தம்படம், எடுத்து முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், போன்றவற்றில் வெளியிட்டு மகிழ்ச்சி கொள்ள  பல நண்பர்கள் குடும்பம் குடும்பமாய்  குவிகின்றார்கள்...  


தேவாலயத்தின் உள்பகுதியில் ( an Interior View of The Cathedral)

ரசிக்க ரசிக்க...

a Different Pose 



a Part of Dhanush kodi Railway Station Building 



வெயிலுக்கு கொஞ்சம் மறைவான இடம் 

தனுஷ் கோடி புயல் தகர்த்த தபால் நிலையம் ( Dhanuskodi Post Office Building)
தனுஷ் கோடி புயல் தகர்த்த தபால் நிலையம் ( Dhanuskodi Post Office Building)
புயல் பாதிப்பில் ஒரு இந்து கோயில் 

புயல் பாதிப்பில் ஒரு இந்து கோயில் ( A Hindu Temple )

Hindu temple Side View

Dhanush Kodi White Sand Beach
    தனுஷ் கோடி புயல் பாதிப்பில் எத்தனை மக்கள் அந்த ராத்திரியில் மரித்தனரோ..என்று ஒரு சோக கவிதை எழுதும் அளவுக்கு அந்த புயலில் தாக்கம் நம்மை பீடிக்கின்றது, இன்றும் அவற்றை காணச் செல்லும் சுற்றுலா பயணிகளை, புயலின் கோர தாண்டவம் என்ன..? என்பதை உணர செய்யும் விதமாய் திகழ்கிறது இந்த உருக்குலைந்த கட்டிடங்கள்.,

  இங்கு சுற்றுலா தவிர்த்து,  பெரும்பாலும் வருபவர்கள் தங்கள் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைய தர்ப்பணங்கள், பலி கர்மம் செய்து கடலில் நீராடி, தங்கள் பாவங்களை தம் முன்னோர்களிடம் மன்னிக்க செய்யுமாறு வேண்டி செல்கின்றனர். 

புயலில் மீண்ட ஒரு கிருஷ்ணர் சிலை 

அழகு கொஞ்சும் கடல் 
      பல நினைவுகளை பற்றி பேசிக்கொண்டே தனுஷ் கோடி கடல் கடந்து, இறுதி எல்லையான ராம் சேது பாயிண்ட் நோக்கி கடல் எங்களை கூட்டிப் போனது, பக்கத்தில் இருப்பது போல் தெரிந்த கடல் போக போக தள்ளிப்போனது... (மனதுக்குள் தள்ளிபோகாதே... என்ற பாடல் கேட்கிறதா..?) அனால் பயணத்தை ருசிகரம் ஆக்கியது கடல் நண்டுகள்.. அவற்றை பிடித்து விளையாடியும், மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் வருவது போல பச்சை நண்டை தின்று, கடல் நீர் குடித்து (மிக அருமையான சுவை) நடை பயணம் இனிதாய் சென்றது..
கடல் நண்டுகளை பிடித்து விளையாடும் அலவன் ஆட்டு 

      நடந்து போகையில் எத்தனை ரம்மியமான காட்சிகள் அவற்றில் ஒன்று இதோ.. போட்டோ பிரியர்கள் அனைவரும் செல்ல வேண்டிய இடம் இது
அலை அடிக்காத கடல் மணல் இடைவெளிகளில் கடல் நீர் 

அலை அடிக்காத கடல் மணல் இடைவெளிகளில் கடல் நீர் 

ஒரு அழகிய கடல் மணல் மேடு 

a Different Still 

Blue Sky with Sandy Hill
      மணல் மேடுகள், சூடான கடல் கற்று, இவற்றை தணிக்கும் கடல் தண்ணி, என்று நடந்து நடந்து ராம் சேது பாயிண்ட் என்று கூகிள் மேப் காட்டும் பகுதியை வந்தடைந்தோம்... மகிழ்ச்சி.. வெற்றி வெற்றி... என்று உற்சாக கூச்சலோடு... கடலில்  இறங்கினோம்.... அப்போது மணி பகல் ஒன்று.. அந்நேரம் எங்கள் மொபைலில் ஒரு எஸ் எம் எஸ் வெல்கம் டு ஸ்ரீலங்கா என்று... அப்போது மனம் அடைந்த மகிழ்ச்சி எல்லை இல்லாதது...

இது தாங்கோ அந்த எண்டு பாயிண்ட் (Ram Sethu Point)

கடலின் கடைசி நிலப்பரப்பு  (Ram Sethu Point)

இது தாங்கோ அந்த எண்டு பாயிண்ட் இந்த இடத்தில் அலைகள் வேகமா மோதும் ஆபத்தான பகுதியாகும்  (Dangerous zone of  Ram Sethu Point)
    இராமாயணத்தில் இராமர் இலங்கைக்கு செல்ல கடலுக்குள் அமைத்த பாலம் என்று சொல்லப்படும் பகுதி இதுவாகும்..இந்த இடத்தில் கடலில் இறங்கும் பொது மிக கவனத்தோடு செயல்படவும், கடல் நீச்சல் தெரியாதவர்கள் தயவுசெய்து கடலுக்குள் இறங்க வேண்டாம், அலைகள் வலுவாகவும், நீரோட்டம் மிகுந்த, ஆபத்தான இடமாக அறியப்படுகிறது. இங்கிருந்து நாம் பார்க்கையில் கடலுக்குள் திட்டு திட்டாக மணல் மேடுகள் தென் படுகின்றன. இவை இலங்கை கடல் பகுதியில் மணல் பாறைகளாகவும், பவள பாறைகளாகவும், கடல் வளத்தை காக்கும் பகுதியாகவும் அறியப்படுகின்றன. இப்பகுதி "மன்னார் வளைகுடா " உயிரியாளர்களின் சொர்கம் என்று அழைக்கப்படுகிறது இது யுனெஸ்கோ வால் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.....


கடலின் துவக்கத்தில், நிலத்தின் முடிவில் 

    நிலத்தின் முடிவில் இருந்து விடை பெற்று, அலை சிறிதும் அடிக்காத கடல் கரையில் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம், இக்கடற் கரையில் நிறைய வண்ண வண்ண சங்குகள், கடல் சிப்பிகள், கிளிஞ்சல்கள், ஏராளமாய் கிடைக்கின்றன.. அவற்றை பொறுக்கிக்கொண்டே நடக்கையில், பசி எடுக்க தொடங்கியது, பார்சல் வாங்கி வைத்த இட்லியும், எலுமிச்சை போஞ்சியும் கொளுத்திய வெயிலில் போன இடம் தெரியவில்லை, தூரத்தில் மீண்டும் கடல் கரை கடைகளில் சிறிய உணவுகள் வாங்கினோம்.. நடக்கையில் எம்மிடம் கடை நண்பர்கள் கேட்டார்கள் ஏன் இப்டி நடக்கிறீங்க வேன் ல போயிருக்கலாமே னு ..ஒரு சிறிய புன்னகை செய்துவிட்டு.. இது ஒரு அனுபவம் தானே னு பதில் சொல்லிவிட்டு தூரத்து, கடற்கரை கிராமம் பார்த்து நடக்க ஆரம்பித்தோம்,

    சுமார் 100 வீடுகள் இருக்கின்ற கிராமம் அது, கெட்டு வள்ளங்கள், சிறிய மீன்பிடி மடிகள் கடலாடிக் கொண்டிருந்தன.. மீனவ சிறுவர்கள் கடலில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர், ஓய்வில் இருந்த மீனவர்கள் வலையில் தெத்து எடுத்து சுவாரஸ்ய கதை பேசிக்கொண்டே இருந்தனர், அவர்களில் வாழ்வியல்..மிக துயரமானது  பக்கத்தில் கடைகளோ, மருத்துவமனைகளோ, எதுவும் இல்லை, எப்பிடியும் 10 கிலோமீட்டர் தாண்டி இராமேஸ்வரம் நகருக்கு தான் செல்ல வேண்டும்.. கரண்ட் கூட இல்லனா பாத்துக்கோங்க.. குடி தண்ணீர் தேடி ..அன்றாடம் அவர்கள் மணற்கேணியில்  (மணல் ஊற்று)  பல மணிநேரம் செலவழித்து ஒரு குடம் நிரப்பி வீடு செல்வது..  அவர்களின் வாழ்வில் ஒரு தனிக்  கதை....

     அங்கிருந்த ஒரு கடையில் சர்பத் குடித்தோம், அன்பாய் விசாரித்து, போகும் வழியை இன்னும் அழகாக்கி சொல்லி தந்தார் அந்த நண்பர்.. அவருக்கு நன்றி சொல்லி விட்டு.. கடல் நீர் கால் முட்டளவு மட்டுமே ஒரு இரண்டு கிலோமீட்டர் பரந்து விரிந்து கிடைக்கும் பாதையில் வெறும் காலோடு நடக்கும் சுகம்..எத்தனை கோடி கொடுத்தாலும் கிட்டாத ஒன்று...   
கடல் நீர் கால் முட்டளவு மட்டுமே (Water Walking A Superb Experience) 

நடக்க வேண்டும் இந்த தண்ணீரில்  (Must Walk this Sea Bed)


மறக்க இயலாத கடற்கரை (Unforgettable Dhanuskodi Beach)

ராமேஸ்வரத்தின் ஒரு அழகிய அடையாளம் 

Highest Tower in Rameswaram

     கடற்கரை பயணம் முடித்து விட்டு, இராமேஸ்வரத்தில் பார்க்க வேண்டிய இடமான இராமர் பாதம் கோவில், கிருஷ்ணா லீலா, மிதக்கும் கல் போன்ற இடங்களை பார்த்துவிட்டு  நிறைய இடங்களை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தோடு .....இராமேஸ்வரம் நகருக்கு விடை கொடுக்க தயார் ஆனோம்.. 
மீன்களுக்கு கொஞ்சம் பொரி இடுவோம் (மிதக்கும் கல், கிருஷ்ணா லீலா கோவில் )




பிரியா விடை (Bye Bye Rameshwaram, Dhanuskodi, & Pamban )


சில முக்கிய தகவல்கள் 
* பயணம் செல்கையில் உங்கள் நேரம், பணம் போன்றவற்றை தீர்மானித்து செல்ல திட்டமிடுங்கள்.
* சாப்பிட செல்லும் முன் விலை நிலவரங்களை கேட்டு ஹோட்டலுக்குள் செல்லுங்கள்.
* எங்கள் பயணத்தில் சில கடைகளில் எலுமிச்சை போஞ்சிக்கு ரூபாய்.30 வசூலித்த சம்பவம் நடந்தது. எனவே விலை கேட்டு பொருள் வாங்குங்கள்.
* இராமேஸ்வரம் கோவில் நகரம் ஆனதால் மதுபான கடைகள் சற்று தள்ளியே அமைந்துள்ளது.
* கடலில் குளிக்கும் முன் அலை அடிப்பதை பார்த்து, அதை சமாளிக்கலாம் என்ற தைரியத்தோடு குளியுங்கள். நீச்சல் தெரியாதவர்கள் கடலின் இறங்க வேண்டாம்..
* கோவில் பூஜை நேரங்களை கோவிலின் இணைய தளத்தை பார்த்து அறிந்து கொள்ளவும்.
* தனுஷ் கோடி செல்ல ஆட்டோ வசதிகள் உள்ளன, அரசு பேருந்து வசதியும் உண்டு, முகுந்தரையர் சத்திரத்தில் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி, அதனால் இருட்டுவதற்கு முன்பே கிளம்பிவிடவும்.
* இராமேஸ்வரத்தில் நாங்கள் தவற விட்ட ஒரு விஷயம், இராமேஸ்வரம் தொடர் வண்டி நிலையத்தில் இருந்து இராமநாதசாமி கோவில் வரையிலான, குதிரை வண்டி சவாரி.. கண்டிப்பாக அனைவரும் விரும்பும் ஒரு பயணம்.. இதன் தற்போதைய நிலையை சமகால எழுத்தாளர்..சமஸ் அவர்கள் எழுதி உள்ளார்.. படிக்க கீழ்கண்ட லிங்க்ஐ  கிளிக்கவும்.
 http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/article7821734.ece


என்ன இராமேஸ்வரம், தனுஷ் கோடி செல்ல பிளான் போட்டாச்சா..?

உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ..!
நேசமுடன்
இளங்கோ கண்ணன்.