Friday 17 February 2017

ஒளிப்படம் எடுப்போர்களின் சொர்கம்- வாகமண் (கேரளா) - Photographer's Paradise Vagamon (Kerala) Episode-4


        வாகமண் தங்கல் பாறை தலத்தை மகிழ்வுற கண்டு விட்டு பாலஸ்'டு பயணத்தை தொடர்ந்தோம். அங்கே ஒரு வாகனம் மட்டுமே சென்று வரக்கூடிய மண் பாதை தென்பட்டது, அவ்வழியே சென்ற பொது கண்களுக்கு விருந்தனாவை தான் கீழ் காணும் புல் நிறைந்த மலை,  வாகமண் புல்வெளிகள் என்று நாம் அழைப்போம்.  (Vagamon Meadows in Google Maps) என்று கூகிள்  மேப் அடையாளப்படுத்துகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதில்லை. அமைதியான சூழலில் இயற்கையின் எழில் கோலத்தை கண்டு வரலாம். வழி நடுவே காணும் செந்நீர் (தேயிலை) தோட்டங்களின்  அழகு நம் மனதிற்கு இன்பம் அளித்திடும். 
          
             ஒளிப்படம் எடுத்து எங்கள் காட்சி பேழை உறக்க நிலைக்கு சென்று விட்டதால் (புரியலையா கேமரா சார்ஜ் போச்சு ) எங்கள் கைபேசி பட பதிவுகள் இவை.. 














பசித்த போது ஒரு சிறிய கடையில் ஒரு சிற்றுண்டி, கப்பா அவித்து தாளித்தது, கூடவே சூடான கட்டஞ்சாயா. குடித்து விட்டு பயணம் தொடர்ந்தது. 



            வாகமண் புல்வெளி பகுதிகள் வனாந்திரம் போன்ற காட்சிகளாயிருந்தாலும், பல நிலங்கள் வேலி யால் சூழ்ந்துள்ளன. ஒவ்வொரு வேலிக்குள்ளும் பெயர் பலகைகள் அவரோட எஸ்டேட், இவரோட எஸ்டேட் என்று. எப்படி இந்த இடங்களை பட்டா போட்டாங்க னு நினைக்கவே ஒரு கிறக்கம் வந்தது. மலையில் சில இடங்களில் அதிக மரங்கள் இருந்தன. சில புல்வெளி தரைகள் மேய்ச்சலுக்காக இந்த இடங்கள் உள்ளன. என்பது எங்களுக்கு புரிய சில மாதங்கள் எடுத்துக்கொண்டது. உட்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளில்  பசு மாட்டினை காண முடிகிறது, இத்தனை பச்சை புல் இருந்தால் பால் வளம், கால்நடை செல்வங்கள்  அதிகமாவே இருக்கும். இதன் காரணமாகவே இங்குள்ள சாயா அவ்வளவு சுவையாக திகழ்கிறது. 











         தங்கல் பாறை வழியாக முதன்மை சாலை வந்து சேர்கையில் வலப்புற வழியே செல்லும் போது,  15 நிமிட பயணத்தில் வாகமண் பைன் மரக்காடுகளை (Pine  Valley ) சென்றடையலாம். வழியெங்கும் கடைகள், சூடான கப்பை கிழங்கு, அனல் பறக்கும் சோளப்பொறி, ஜிலென்ற ஐஸ் கிரீம் கடைகள் தாண்டி உள்ளே சென்றால், சூரிய ஒளி புகாத இருள் சூழ்ந்த இடமாய் தெரிகிறது பைன் மரக்காடுகள் வளைர்ந்திருக்கும் இடம், வான் தொடும் மரங்கள், உயரம் பார்க்க  முடியுமா?.. என்று நெட்டை மரங்களாய் நிற்கின்றன. செல்பி குச்சிகளோடும், விலையுயர்ந்த கேமராக்களோடும் சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். மலையாளத்தில்  வெற்றி (தமிழ்நாட்டிலும் வரவேற்பை) பெற்ற ப்ரேமம் படத்தின் மலரே பாடலின் சில காட்சிகள்  இங்கு தான் படமாக்கப்பட்டது என ஒருவர் நம்மிடம் சொல்ல, இடத்தை நம்மால் மறக்க முடியவில்லை. வாகமண் சென்றால் கண்டிப்பாக காணவேண்டிய ஒரு இடமாகும். பொதுவாய் காதலர்கள் அதிகளவில் வந்து தம்மி எடுத்து மகிழ்கின்றனர்.

நாங்கள் சுட்ட சில ஒளிப்படங்கள்.......?!!


























ஒரு நாளைக்குள் இத்தனை இடத்தை  சுற்றி பார்த்தோம், என்ற மன நிறைவோடு வாகமண் சுற்றுலா தலத்திற்கு விடை கொடுத்தோம்...

வாகமண் பகுதி நிறைவுற்றது.

பயணம் தொடரும்........

வாகமண்- பைன் வேலி செல்லும் கூகிள் வரைபடம் 




நேசமுடன் 
இளங்கோ கண்ணன்  

Thursday 16 February 2017

ஒளிப்படம் எடுப்போர்களின் சொர்கம்- வாகமண் (கேரளா) - Photographer's Paradise Vagamon (Kerala) Episode-3

சென்ற பதிவின் தொடர்ச்சி..

         மண்பாதை கடந்து, தார் சாலை  சென்றதும் கண்களுக்கு விருந்தாய் சில இடங்கள் மனம் மயக்கின, இவை தான் தமிழ், மலையாளம், , தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களின் பிரதான படப்பிடிப்பு தலமாக (ஷூட்டிங் ஸ்பாட், Shooting  Spot )  திகழும் பகுதிகளாகும். இங்கு சுற்றுலாவாசிகளை கவருவது   மலைகள், மலைமீது தவழும் மஞ்சு, நம் தேகம் தீண்டும் அதிர வைக்காத குளிர், கண்களை வசீகரிக்கும் தேயிலை தோட்டங்கள். இப்பகுதி எக்கோ பாயிண்ட் என அழைக்கப்படுகிறது. இதன் நேரடி தமிழ்ச்சொல் எதிரொலி முனை  என வழங்கலாமா..? படித்துவிட்டு சொல்லுங்கள். 
இவ்விடத்தில் மேலும் நம்  நெஞ்சை கொள்ளையடிக்கும் தங்கல் பாறை (Thangal Paara)

         வாகமண் டவுன் பகுதியிலிருந்து,  5 கிலோமீட்டர் தொலைவில், பைன் வேலி  (Pine  Valley) செல்லும் சாலை வழியே செல்லும் போது  வலப்பக்கமாக பிரியும் கிளைச்சாலை வழியே சென்றால் தங்கல் பாறையை அடையலாம். இல்லையெனில் குரிசு மலை - தங்கல் பாறை வழியே பயணித்து இங்கு வந்தடையலாம்.  எக்கோ பாயிண்ட் பகுதி அடிக்கடி படப்பிடிப்பு  நடைபெறும் இடமாகயால் .  நம் மனதுக்கு பிடித்த நாயகர், நாயகிகளை   அங்கு  காண இயலும், நம் நல்ல நேரத்தை பொறுத்தது.     


மண் சாலையிலிருந்து தார் சாலைக்கு.. கொஞ்சம் ரெஸ்ட் எங்க பாலசுக்கு ..!

            வழியில் ஒரு சேச்சி சொன்ன சினிமா ஷூட்டிங் எங்கே ? என்று தேடுகையில் பரபரப்பு ஏதுமின்றி படப்பிடிப்பு தளம் இருந்தது. என்ன படம்? யாரு நடிகர்? எந்த இயக்குனர்? ஒளிப்பதிவாளர் யாரு..? னு மனம் எங்கும் கேள்வி கோலம்.. அந்த இடத்தில ஒரு ஆடி கார் நின்றிருந்தது, மற்றபடி எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை. கொஞ்ச நேரத்தில் அங்கு நின்றிருந்தவர்கள் எங்களை மாறி போகும் படி  சொன்னார்கள். அப்போதுதான் பார்த்தோம் என்ன நடக்குதென்று. ..ஆமாங்க கேரளாவின் வசூல் நாயகன், அனைவரின் நெஞ்சம் நிறைந்த நடிகர், அபார நடிப்புத்திறன் கொண்ட "லாலேட்டன்" என்ற செல்லப்பெயரில் விளிக்கப்படும் "மோகன் லால்" (நம்ம ஊர்ல ஒரு சினிமா ஷூட்டிங் நடந்தா என்னலாம் ஆகும் நினைக்கையில் மனது நெகிழ்ந்தது, எந்த ஒரு ஆடம்பரம், செக்யூரிட்டி, கூட்டம் ஏதும் இல்லை, ஒரு இயல்பான சூழல் ) டிஸ்கஷனில் இருந்தார்,   அவரை கண்டதும் மனதுக்குள் ஒரே மகிழ்ச்சி, மக்கள் கூட்டம் குறைவு, ஒரு பள்ளிக்கூட குழந்தைகள் களரி உடையில் அவரை காண காத்திருந்தனர். பத்து நிமிட இடைவெளியில் படப்பிடிப்பு தொடர்ந்தது, கிளாப் போர்டு பார்த்த போது, மனம் படத்தின் எல்லாவித விபரத்தையம்  தந்தது, கேரளாவில் சமீபத்தில் (2016) வெற்றிக்கொடி நாட்டிய, நடிகர் மோகன் லாலின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்றான  ஒப்பம் ( OPPAM  படத்தின் ஷூட்டிங் தான் அது, தற்போதைய மலையாள திரை உலகில் குணச்சித்திர வேடம் ஏற்று நடிக்கும் சிற்ந்த நடிகர் நெடுமுடி வேணுவுடன் (தமிழில் இந்தியன், அந்நியன் படங்களில் நாம் இவரை பார்த்திருப்போம்)  மோகன்லால் பேசும் ஒரு இரண்டு நிமிட காட்சி மாத்திரமே படமாக்கப்பட்டது. இயக்குனர் ப்ரியதர்சன், ஒளிப்பதிவாளர். ஏகாம்பரம். ஆகியோரை பார்க்க முடிந்தது. காட்சி பதிவு செய்து முடித்ததும் ஒளிப்படம் எடுக்க அனுமதி வழங்கினர். மோகன் லால் கிட்ட நம்மள விடவே இல்ல, ரசிகர் கூட்டம் ஒரே ஊளை சத்தமும், ஹே லாலேட்டன் .. என்று மகிழ்ச்சி ஆரவாரத்தில் இருந்ததால். ஒரு ஒளிப்படம் மட்டுமே எடுக்க முடிந்தது.  



ஒப்பம் படப்பிடிப்பு தளத்தில் மோகன்லால் மற்றும் குழுவினர்  
ஒப்பம் படப்பிடிப்பு தளத்தில் மோகன்லால் மற்றும் குழுவினர் 
வெள்ளித்திரையில் வந்த காட்சி
       படத்தில் அந்த காட்சி வந்த விதம் எம்மை ஆச்சர்ய படுத்தியது. அப்போது புரிந்து கொண்டோம். படம் எடுப்பது ஒரு கடினமான கலை. கற்றுக்கொண்டவருக்கு கை வந்த கலை, படம் வெற்றிபெறும் நுட்பம் தெரிந்து விட்டால் புகழையும், செல்வத்தையும் வாரிக்  கொடுக்கும் கலை.

                மோகன் லாலை பார்த்த மகிழ்ச்சியில், மலை பாதையில் (சாலை நன்றாகவே உள்ளது) செல்ல, ஒரு பெரிய உருண்டையான பாறை தென்பட்டது, அதன் அருகே செல்ல ஆச்சர்யம் காத்திருந்தது. அதன் பெயர் தங்கல் பாறை (Thangal  Para ) சுற்றுலா பயணிகள் குவியும் இடமாகவும், கேரள முஸ்லீம் மக்கள் புனித யாத்திரை மேற்கொள்ளும் இடமாகவும் அமைந்துள்ளது. செங்குத்தான பாறை ஆனால், ஏறுவதற்கு மிக எளிதாகவே உள்ளது. தேகம் கனத்தவர்கள் கூட ஏற்  தடை ஏதுமில்லை, படிகள் இல்லா பாறையில் மிக எளிதாக ஏறிவிடலாம். இப்பாறைகள்  மீது நடந்து செல்வது ஆனந்தமான தருணம், .  சில்லென்ற மஞ்சு துகள்கள் நம்மை முத்தமிடும், மென்காற்று உடல் தழுவி செல்லும், இயற்கையை முழுவதுமாய்  அனுபவிக்கலாம். இந்த மேக குவியலில் குளிப்பதற்க்காகவே பலர் குடும்பமாக வந்து செல்கின்றனர்.  தவறாது நீங்களும் செல்ல வேண்டும் என்பதே எம் விருப்பம்.

தங்கல் பாறை செல்கையில் சுட்ட சில ஒளிப்படங்கள்..

தங்கல் பாறை ஏறும் தங்கத் தருணம் 

தங்கல் பாறை ஏறும் தங்கத் தருணம் 

தங்கல் பாறை பிடிமானத்திற்கு வலுவான இரும்பு வடமும் உண்டு  

தங்கல் பாறையில் இருந்த எடுத்த ஒளிப்படம் 
மலையிலிருந்து ஓடி வரும் மஞ்சு பொதி 



இயற்கையோடு கலந்த தருணம் 


எழிலான காட்சி 


முத்தமிட வரும் மஞ்சு குவியல் 


தங்கல் பாறை அழகில் 

      தங்கல் பாறையின் மற்றொரு சிறப்பம்சம்,  நாம் காணவேண்டியது, இங்கு உள்ள தர்கா, முஸ்லீம்கள் புனித யாத்திரை மேற்கொள்ளும் இடம் என முன்னர் குறிப்பிட்டதன் காரணம், இங்கு சூபி துறவி. ஹஸ்ரத் ஷேய்க் பஹ்ரி துதீன் பாபா (Sufi saint Hasrath Sheikh Fariduddin Baba) என்பவரின் நினைவிடம் (அவர் துயில் கொள்ளும் இடம் ) அமைந்துள்ளது. இத்துறவி ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து 800 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டிற்கு வந்து இறைத்தொண்டு புரிந்து, இறுதியில் தங்கல் பாறையில் இறையோடு கலந்து விட்டவர். இங்கு வரும் இஸ்லாமிய தோழர்கள் இந்த நினைவிடத்தில் மரியாதையை செலுத்திவிட்டு செல்கின்றனர்.வெள்ளிக்கிழமைகளில் இந் நினைவிடம் அத்தர் வாசனையால் நிரம்பி வழிகிறது.
       
            சுற்றுலா செல்லும் அன்பர்கள் காலை 7 மணிமுதலே மலை ஏறலாம், மாலை 6 மணிக்குள் திரும்பிவிட வேண்டும். இருள் சூழ்ந்து விட்டால் திரும்ப வருவது சற்றே கடினம். இதை மட்டும் கவனத்தில் வைத்துக்கொண்டால் போதுமானது. 

தங்கல் பாறை- சூபி  ஹஸ்ரத் ஷேய்க் பஹ்ரி துதீன் பாபா (Sufi saint Hasrath Sheikh Fariduddin Baba) அவர்களின் நினைவிடம் வலது பக்கம் தெரிவது 


           மலையில் திரிந்த மஞ்சு குவியலோடு கதை பேசி, ஒளிப்படம் எடுத்து, தங்கல் பாறை யை தரிசித்து விட்டு, இறங்க மனமில்லாமல், நேரம் இருட்டி விட்ட காரணத்தினால் அங்கிருந்து விடை கொடுத்தோம்...


பயணம் தொடரும்.....


நேசமுடன் 

இளங்கோ கண்ணன். 


அடுத்த பதிவில் வாகமண் புல்வெளிகள் (Meadows) மற்றும் பைன் மர பள்ளத்தாக்கு  (Pine  Valley) 

Wednesday 15 February 2017

ஒளிப்படம் எடுப்போர்களின் சொர்கம்- வாகமண் (கேரளா) - Photographer's Paradise Vagamon (Kerala) Episode-2



         சென்ற பதிவின் தொடர்ச்சி....

                 வாகமண் நகர் நோக்கி செல்லும் சாலையில் அழகினை பார்த்தவாறு  சென்று கொண்டிருக்கையில் "கள்ளு" (കള്ളു)  என மலையாளத்தில் எழுதப்பட்ட (பார்த்திங்களா ..? கிட்டத்தட்ட தமிழ் எழுத்து போலவே உள்ளது ) போர்டை பாத்ததும் ஒரு ஆவல் ஏற்பட்டது. கள் போன்ற கண்கள் உடையவளே..! தேவை உந்தன் சேவை என்று இதழ் -"கள்" ஊறுமடி, என்ற           டி. ராஜேந்தரின் கவி வரிகள் மனதுக்குள் ஓடியது. கள்ளு உடலுக்கு நல்லது, உடலின் சோர்வை போக்க வல்லது, பழந்தமிழர்கள் கள் உண்டு கழித்திருந்தனர். என்று மனம் எண்ணுவதற்குள்,  கால் கடைக்குள் நுழைந்துவிட்ட்டது.  உள் நுழைந்ததும் ஒரு இன்முக வரவேற்பு கொடுத்தார் கடைக்காரர். பனை, தென்னை  என இருவகை கள்ளு  கிடைக்கும் என கடையின் பட்டியல் தெரிவித்தது. அங்கே இருந்த சேட்டன் "இப்போழ்  பன மாத்திரமே உள்ளு " என சொன்னார். சரி ருசி பார்த்து விட்டு செல்லலாமே என்று நினைத்து,  கொண்டு வரச்சொன்னோம், "பின்னே கழிக்கான் எதும் வேண்டே " என கேட்க பக்ஷணங்களை   கோர்வையாக பட்டியலிட்டார். கப்பா,  பீப் கறி, குடல் வறுவல், பிரெஷ் என தெரிந்ததும் அதை கொண்டு வர சொன்னோம், ஒரு லிட்டர் ஜக்கில் தொன்மைத்  தமிழரின் பானம் வந்தது,  அருமையான பனங்கள்,  வாசமே  கிறக்கத்தை உண்டாக்கியது. கடை நல்ல காற்றோட்டமாக, சுத்தமானதாக இருந்தது.  மலையாளத்தில் கள்ளு கடையினை "ஷாப்பு" என விளிக்கின்றனர். அதை பார்க்கையில் நம்ம ஊர் டாஸ்மாக் கடைகளின் பார்கள் கண் முன்னே வந்து போனது, நம்ம நேரம் அனுபவிச்சுதான் ஆகணும் என்று நினைத்து கொண்டே, கள் மாந்தினோம்.

மரச்சீனி கிழங்கு (கப்பா), குடல் வறுத்தது , பீப் கறி மற்றும் தமிழனின் தொன்மை பானம் பனங்கள்  

நாவில் ருசிக்கும் மரச்சீனி கிழங்கு- அவித்து தாளித்தது 

      கள்ளின் சுவையை விடவும், கூட்டுவான்களின் ருசி இன்றும் நாவில் நீர் ஊற வைப்பது (நினைக்கையில் உள்ளூர கள்ளூறுதே ), மரச்சீனி கிழங்கு (கப்பா) நன்றாக அவித்து, பின் ஈருள்ளி, வத்தல், கடுகு, குருமிளகு இட்டு தாளித்து, கொஞ்சம் மஞ்சள் பொடி  சேர்த்து, கிழங்கை சேர்த்து கொடுத்த விதம் நன்றாக இருந்தது, அதன் கூடவே பீப் கறி, கேரளாவில் பீப் அதிக ருசியுடன் சமைக்கப்படுகிறது, அதற்கென்றே சில தனிப்பட்ட வழிமுறைகள் உண்டு, என தோன்றியது. சொல்லி வைத்த "குடல் வறுத்து உலர்த்தியது", வந்தது. அதன் சேர்மான பொடிகளின் வாசமும் ருசியும், நாக்கை கட்டிப்போட்டன. சொல்லில்  முடியாத சுவை, உங்கள் கண்ணில் கள்ளு கடைகள் கண்டால் நீங்கள் குடிக்கும் விருப்பம் இல்லாதவராய் இருந்தாலும், அங்கு கிடைக்கும் பண்டங்களுக்காவே செல்லலாம், ருசித்து மகிழலாம்.             
             
நதியில் ஓய்வெடுக்கும் ஓர் ஓடம் 

உள்ளம் கவரும் உண்ணிப்பூ 

      பெரியாற்றின் அழகையும், வழி நடுவே  எழிலையும் கண்டு மகிழ்ச்சியோடு, மலையேற்றம் துவங்கியது, பாலஸ் தனது மலையேற்ற பயணத்திற்கு மறுபடி தயாரானது. சாலைகள் சில இடங்களில் சிதறுண்டு இருந்தது. மென் காற்று தேகத்தில் ஊசியாய் குத்தியது. மேல் நோக்கி செல்ல செல்ல கதிரவன் உயரே போய்க்கொண்டிருந்தது. வீடுகளின் எண்ணிக்கையும் வெகுவாய் குறைய தொடங்கியது. காட்டுப்பாதை, ஆனால் மரங்களில் எண்ணிக்கை குறைவு. எல்லா இடங்களிலும் மனிதனின் ஆசையால் ஆக்கிரமிப்புகள், நிலங்களில் கம்பி வேலிகள் ஆட்கொண்டிருந்தன. தூரத்தில்,  நீண்ட காலமாய்  மௌனப்போர் செய்வது போல் நின்றிருந்தன  மலை சிகரங்கள். பச்சை புல்வெளி பாதை மீதும், மலைதொடர்  மீதும் போர்த்தி கிடந்தன. அதன் காட்சிகள் இதோ...  










           சாலை மேல் நோக்கி சென்றதும் மனதுக்குள் புத்துணர்ச்சி ஏற்பட்டது. எங்கள் பார்வையில் மீண்டும் ஒரு ஏலத்தோட்டம் தென்பட்டது. அப்போதுதான் நிலம்  உழுது, எல் பொடி உரம் (தூளாக்கப்பட்ட எலும்பு)  சேர்த்து பண்படுத்தப்பட்ட   மண்ணில் நடவு செய்திருந்த சில ஏலச்செடிகள்  கன்னிப்பூவை பூக்க தொடங்கியிருந்தன. இவ்வழியில் நின்று இயற்கை அழகை காண்பதே தனி சுகம்.. ஆட்கள் இல்லாத அமைதியான சூழல்.. தூரத்தில் தென்படும் பச்சை போர்த்திய மலைத்தொடர்கள் மனதை ஆர்ப்பரிக்க செய்பவை... 

ஏலப்பூ 

வாகமண்  தோட்டத்தில் 

            வாகமண் செல்லும் ஒரு வழியில் எம்மை சாலை கொண்டு சேர்த்தது, வாகமண் டவுண் செல்லும் பாதை முன்பாகவே குரிசு மலை (Kurishu Mala) எங்கள் கண்களில் பட்டது , அங்கே செல்வது என முடுக்கினோம் பாலஸை ஏற்றம் போல் இருந்த பாதை, சில இடங்களில் இறக்கமாய் இருந்தது, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் நடந்தே செல்ல வேண்டும் என்று தெரிந்து கொண்டோம். போகணுமா? வேண்டாமா? என்று சிந்திப்பதற்குள் மேகம் சில துளிகளை தூவியது, அதன் காரணமாய் குருசு மலை பயணம் தடைபட்டது. கண்டிப்பா நண்பர்கள் போய் பார்க்க வேண்டும் என்பது எம் தாழ்மையான வேண்டுகோள்.

                 பின்னர் அவ்வழியே பிரியும் மிக இறக்கமான சாலையில் பயணித்தோம். பாலஸை ஸ்டார்ட் செய்யாமலே (ஆமாங்க பைக் இறக்கத்துல செம்ம ஸ்பீடா போனது). கடைசியில் பாதை முடிவாராகியது. எங்கு செல்ல வேண்டும் என்ற குழப்பம். மறுபடி மேலே ஏத்ததில் பைக்கை கொண்டு செல்வது கடினமான காரியம். என்ன செய்வதென்ற யோசனை ஓடுகையில், மலை பாதைகளுக்கு நடுவே ஒரு அக்கா மாடுகளை மேய்த்துக்கொண்டு வந்தார்கள். அவர்களிடம் விசாரிக்கையில், "ஈ வழி போகாம் பற்றும், அவிடே சினிமா  ஷூட்டிங் எடுக்குன்னுதுண்டு" என்று சொன்னதும், மகிழ்ச்சி பொங்க, சேச்சிக்கு ஒரு நன்னி தெரிவித்து விட்டு பாலசோடு பயணித்தோம். க்ரீம், க்ரீம், என்ற வண்டுகளின் முரலலும், காட்டு பறவைகளின் சத்தமும் ஒரு அச்சத்தை ஏற்படுத்தின.. தூரத்தில் ஒரு ஓடையின் சலசலப்பு, மனதை ஏதோ செய்தது.. கொஞ்ச தூரம் சென்றதும், அங்கிருந்து ஒரு ஜீப் ஹாரன் சத்தம் கேட்டதும் மனதிற்கு தைரியம் வந்தது, அப்பா.. மக்கள் நடமாடும்                              இடம் தான்-னு, பாதை செல்ல செல்ல இயற்கையின் அழகு, சில்லிடும் சிறு தூரல், உற்சாகப்படுத்தியது, சிற்றோடையில் தணுத்த தண்ணீர் குடித்து, சுகம் பொங்க வழி எத்தினோம்.       

 ஒரு வாகமண்  காட்சி
 மஞ்சு புகையில் மலைத்தொடர்
 ஒரு வாகமண்  காட்சி 

மேகம் சூழ்ந்த பச்சை மலை 

உயரத்தை அடையும் காட்டுப்பாதை

 இந்த வழி எங்கு போகுமோ ? குழப்பத்தில் ..


பயணம் தொடரும்....


நேசமுடன்
இளங்கோ கண்ணன்.




இறுதியாக...
         சேர நாட்டு   கள்ளு கடைகளின் தனித்தன்மை, அங்கு உண்டாக்கப்படும் சிறப்பான பட்சணங்களை உலகுக்கு  உணர்த்தும் நிகழ்ச்சி, ஏசியாநெட் பிளஸ் சேனலில், தொகுப்பாளர் கிஷோரின் கைவண்ணத்தில் சுவைக்கும்  "ஷாப்பிலே கறியும் நாவிலே ருஜியும்"  (Shoppile Kariyum Naavile Ruchiyum) பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரியும் நான் சொன்னது. 
காணொலி இணைப்பு இதோ..


மேலும் "கள்" பற்றிய நாஞ்சில் நாடன் அவர்களின் கட்டுரை இணைப்பு 
 தமிழாசான் வள்ளுவனின் குறள் ஒன்று 
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் 
எண்ணப் படவேண்டா தார்.