Thursday 16 February 2017

ஒளிப்படம் எடுப்போர்களின் சொர்கம்- வாகமண் (கேரளா) - Photographer's Paradise Vagamon (Kerala) Episode-3

சென்ற பதிவின் தொடர்ச்சி..

         மண்பாதை கடந்து, தார் சாலை  சென்றதும் கண்களுக்கு விருந்தாய் சில இடங்கள் மனம் மயக்கின, இவை தான் தமிழ், மலையாளம், , தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களின் பிரதான படப்பிடிப்பு தலமாக (ஷூட்டிங் ஸ்பாட், Shooting  Spot )  திகழும் பகுதிகளாகும். இங்கு சுற்றுலாவாசிகளை கவருவது   மலைகள், மலைமீது தவழும் மஞ்சு, நம் தேகம் தீண்டும் அதிர வைக்காத குளிர், கண்களை வசீகரிக்கும் தேயிலை தோட்டங்கள். இப்பகுதி எக்கோ பாயிண்ட் என அழைக்கப்படுகிறது. இதன் நேரடி தமிழ்ச்சொல் எதிரொலி முனை  என வழங்கலாமா..? படித்துவிட்டு சொல்லுங்கள். 
இவ்விடத்தில் மேலும் நம்  நெஞ்சை கொள்ளையடிக்கும் தங்கல் பாறை (Thangal Paara)

         வாகமண் டவுன் பகுதியிலிருந்து,  5 கிலோமீட்டர் தொலைவில், பைன் வேலி  (Pine  Valley) செல்லும் சாலை வழியே செல்லும் போது  வலப்பக்கமாக பிரியும் கிளைச்சாலை வழியே சென்றால் தங்கல் பாறையை அடையலாம். இல்லையெனில் குரிசு மலை - தங்கல் பாறை வழியே பயணித்து இங்கு வந்தடையலாம்.  எக்கோ பாயிண்ட் பகுதி அடிக்கடி படப்பிடிப்பு  நடைபெறும் இடமாகயால் .  நம் மனதுக்கு பிடித்த நாயகர், நாயகிகளை   அங்கு  காண இயலும், நம் நல்ல நேரத்தை பொறுத்தது.     


மண் சாலையிலிருந்து தார் சாலைக்கு.. கொஞ்சம் ரெஸ்ட் எங்க பாலசுக்கு ..!

            வழியில் ஒரு சேச்சி சொன்ன சினிமா ஷூட்டிங் எங்கே ? என்று தேடுகையில் பரபரப்பு ஏதுமின்றி படப்பிடிப்பு தளம் இருந்தது. என்ன படம்? யாரு நடிகர்? எந்த இயக்குனர்? ஒளிப்பதிவாளர் யாரு..? னு மனம் எங்கும் கேள்வி கோலம்.. அந்த இடத்தில ஒரு ஆடி கார் நின்றிருந்தது, மற்றபடி எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை. கொஞ்ச நேரத்தில் அங்கு நின்றிருந்தவர்கள் எங்களை மாறி போகும் படி  சொன்னார்கள். அப்போதுதான் பார்த்தோம் என்ன நடக்குதென்று. ..ஆமாங்க கேரளாவின் வசூல் நாயகன், அனைவரின் நெஞ்சம் நிறைந்த நடிகர், அபார நடிப்புத்திறன் கொண்ட "லாலேட்டன்" என்ற செல்லப்பெயரில் விளிக்கப்படும் "மோகன் லால்" (நம்ம ஊர்ல ஒரு சினிமா ஷூட்டிங் நடந்தா என்னலாம் ஆகும் நினைக்கையில் மனது நெகிழ்ந்தது, எந்த ஒரு ஆடம்பரம், செக்யூரிட்டி, கூட்டம் ஏதும் இல்லை, ஒரு இயல்பான சூழல் ) டிஸ்கஷனில் இருந்தார்,   அவரை கண்டதும் மனதுக்குள் ஒரே மகிழ்ச்சி, மக்கள் கூட்டம் குறைவு, ஒரு பள்ளிக்கூட குழந்தைகள் களரி உடையில் அவரை காண காத்திருந்தனர். பத்து நிமிட இடைவெளியில் படப்பிடிப்பு தொடர்ந்தது, கிளாப் போர்டு பார்த்த போது, மனம் படத்தின் எல்லாவித விபரத்தையம்  தந்தது, கேரளாவில் சமீபத்தில் (2016) வெற்றிக்கொடி நாட்டிய, நடிகர் மோகன் லாலின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்றான  ஒப்பம் ( OPPAM  படத்தின் ஷூட்டிங் தான் அது, தற்போதைய மலையாள திரை உலகில் குணச்சித்திர வேடம் ஏற்று நடிக்கும் சிற்ந்த நடிகர் நெடுமுடி வேணுவுடன் (தமிழில் இந்தியன், அந்நியன் படங்களில் நாம் இவரை பார்த்திருப்போம்)  மோகன்லால் பேசும் ஒரு இரண்டு நிமிட காட்சி மாத்திரமே படமாக்கப்பட்டது. இயக்குனர் ப்ரியதர்சன், ஒளிப்பதிவாளர். ஏகாம்பரம். ஆகியோரை பார்க்க முடிந்தது. காட்சி பதிவு செய்து முடித்ததும் ஒளிப்படம் எடுக்க அனுமதி வழங்கினர். மோகன் லால் கிட்ட நம்மள விடவே இல்ல, ரசிகர் கூட்டம் ஒரே ஊளை சத்தமும், ஹே லாலேட்டன் .. என்று மகிழ்ச்சி ஆரவாரத்தில் இருந்ததால். ஒரு ஒளிப்படம் மட்டுமே எடுக்க முடிந்தது.  



ஒப்பம் படப்பிடிப்பு தளத்தில் மோகன்லால் மற்றும் குழுவினர்  
ஒப்பம் படப்பிடிப்பு தளத்தில் மோகன்லால் மற்றும் குழுவினர் 
வெள்ளித்திரையில் வந்த காட்சி
       படத்தில் அந்த காட்சி வந்த விதம் எம்மை ஆச்சர்ய படுத்தியது. அப்போது புரிந்து கொண்டோம். படம் எடுப்பது ஒரு கடினமான கலை. கற்றுக்கொண்டவருக்கு கை வந்த கலை, படம் வெற்றிபெறும் நுட்பம் தெரிந்து விட்டால் புகழையும், செல்வத்தையும் வாரிக்  கொடுக்கும் கலை.

                மோகன் லாலை பார்த்த மகிழ்ச்சியில், மலை பாதையில் (சாலை நன்றாகவே உள்ளது) செல்ல, ஒரு பெரிய உருண்டையான பாறை தென்பட்டது, அதன் அருகே செல்ல ஆச்சர்யம் காத்திருந்தது. அதன் பெயர் தங்கல் பாறை (Thangal  Para ) சுற்றுலா பயணிகள் குவியும் இடமாகவும், கேரள முஸ்லீம் மக்கள் புனித யாத்திரை மேற்கொள்ளும் இடமாகவும் அமைந்துள்ளது. செங்குத்தான பாறை ஆனால், ஏறுவதற்கு மிக எளிதாகவே உள்ளது. தேகம் கனத்தவர்கள் கூட ஏற்  தடை ஏதுமில்லை, படிகள் இல்லா பாறையில் மிக எளிதாக ஏறிவிடலாம். இப்பாறைகள்  மீது நடந்து செல்வது ஆனந்தமான தருணம், .  சில்லென்ற மஞ்சு துகள்கள் நம்மை முத்தமிடும், மென்காற்று உடல் தழுவி செல்லும், இயற்கையை முழுவதுமாய்  அனுபவிக்கலாம். இந்த மேக குவியலில் குளிப்பதற்க்காகவே பலர் குடும்பமாக வந்து செல்கின்றனர்.  தவறாது நீங்களும் செல்ல வேண்டும் என்பதே எம் விருப்பம்.

தங்கல் பாறை செல்கையில் சுட்ட சில ஒளிப்படங்கள்..

தங்கல் பாறை ஏறும் தங்கத் தருணம் 

தங்கல் பாறை ஏறும் தங்கத் தருணம் 

தங்கல் பாறை பிடிமானத்திற்கு வலுவான இரும்பு வடமும் உண்டு  

தங்கல் பாறையில் இருந்த எடுத்த ஒளிப்படம் 
மலையிலிருந்து ஓடி வரும் மஞ்சு பொதி 



இயற்கையோடு கலந்த தருணம் 


எழிலான காட்சி 


முத்தமிட வரும் மஞ்சு குவியல் 


தங்கல் பாறை அழகில் 

      தங்கல் பாறையின் மற்றொரு சிறப்பம்சம்,  நாம் காணவேண்டியது, இங்கு உள்ள தர்கா, முஸ்லீம்கள் புனித யாத்திரை மேற்கொள்ளும் இடம் என முன்னர் குறிப்பிட்டதன் காரணம், இங்கு சூபி துறவி. ஹஸ்ரத் ஷேய்க் பஹ்ரி துதீன் பாபா (Sufi saint Hasrath Sheikh Fariduddin Baba) என்பவரின் நினைவிடம் (அவர் துயில் கொள்ளும் இடம் ) அமைந்துள்ளது. இத்துறவி ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து 800 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டிற்கு வந்து இறைத்தொண்டு புரிந்து, இறுதியில் தங்கல் பாறையில் இறையோடு கலந்து விட்டவர். இங்கு வரும் இஸ்லாமிய தோழர்கள் இந்த நினைவிடத்தில் மரியாதையை செலுத்திவிட்டு செல்கின்றனர்.வெள்ளிக்கிழமைகளில் இந் நினைவிடம் அத்தர் வாசனையால் நிரம்பி வழிகிறது.
       
            சுற்றுலா செல்லும் அன்பர்கள் காலை 7 மணிமுதலே மலை ஏறலாம், மாலை 6 மணிக்குள் திரும்பிவிட வேண்டும். இருள் சூழ்ந்து விட்டால் திரும்ப வருவது சற்றே கடினம். இதை மட்டும் கவனத்தில் வைத்துக்கொண்டால் போதுமானது. 

தங்கல் பாறை- சூபி  ஹஸ்ரத் ஷேய்க் பஹ்ரி துதீன் பாபா (Sufi saint Hasrath Sheikh Fariduddin Baba) அவர்களின் நினைவிடம் வலது பக்கம் தெரிவது 


           மலையில் திரிந்த மஞ்சு குவியலோடு கதை பேசி, ஒளிப்படம் எடுத்து, தங்கல் பாறை யை தரிசித்து விட்டு, இறங்க மனமில்லாமல், நேரம் இருட்டி விட்ட காரணத்தினால் அங்கிருந்து விடை கொடுத்தோம்...


பயணம் தொடரும்.....


நேசமுடன் 

இளங்கோ கண்ணன். 


அடுத்த பதிவில் வாகமண் புல்வெளிகள் (Meadows) மற்றும் பைன் மர பள்ளத்தாக்கு  (Pine  Valley) 

No comments:

Post a Comment