Friday 3 February 2017

ஒளிப்படம் எடுப்போர்களின் சொர்கம்- வாகமண் (கேரளா) -Photographer's Paradise Vagamon (Kerala) Episode-1


ஒளிப்படம் எடுப்போர்களின் சொர்கம்- வாகமண் (கேரளா) - Photographer's Paradise Vagamon (Kerala) Episode-1
கிளம்பிட்டான்யா ...  Ride  Starts  to VAGAMON (Kerala)

      இயற்கை அழகின் இருப்பிடமாய் திகழும் கேரளாவில், புகைப்பட கலைஞர்களின் சொர்கம், மலையாள, தமிழ் திரைப்பட, நேச்சர் ஷூட்டிங் ஸ்பாட், மேகங்களின் (மஞ்சு) குவியல்  என்று பன்முக சுற்றுலா இடமாக திகழும், வாகமண் பயணத்தில் இடம்பெற்ற, ஒளிப்படங்கள், நிகழ்வுகள் இப்பதிவை அலங்கரிக்கின்றன.

                  வாகமண் கேரளாவின் மலைவாழிடங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும், சீசன்  சமயங்களில் மஞ்சு (மேகம்) எப்போதும் அந்த மலை மேல் மையல் கொண்டிருக்கும், சுத்தமான ஆக்ஸிஜன் சுவாசிக்க, நம் நுரையீரலை புதுப்பிக்கவேனும் நாம் கண்டிப்பாய் வாகமண் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது எம் விருப்பம்..

            தமிழ் நாட்டில் இருந்து வாகமண் நோக்கி பயணம் மேற்கொள்பவர்கள் தேனி -கம்பம் -குமுளி வழியாக மலைமேல் பயணம் செய்து, தேக்கடி சுற்றுலா தலத்தை மகிழ்வுற கண்டுவிட்டு, வாகமண் செல்லலாம், இல்லையெனில் கம்பம் நகரில் இருந்து கம்பம் மெட்டு வழியாக, கட்டப்பனை வந்து வாகமண் வந்தடையலாம். இந்த வழி கொஞ்சம் சுத்து வழி ஆனால் பாதை எங்கும் பசுமை போர்த்திக்கிடக்கும், எனவே பாதை தேர்வு செய்வது உங்களின் விருப்பம்.

       குமுளி நகரில் இருந்து வாகமண் மலைவாழிடத்தை 2 மணி நேர மலை பயணத்தில் அடையலாம், பஸ் வசதி மிக குறைவே..! (வெறும் 44 கிலோமீட்டர் தான், அழகான மலைப்பாதை என்பதால் நம் நினைத்ததை விட அதிகமான நேரம் எடுத்துக்கொள்ளும்) பெரும்பாலும் கேரளாவில் பறக்கும்  ஜீப் பயணம் தான், மைனா படத்தில் பார்த்து ரசித்திருந்த காட்சிகள் பல கண்முன்னே வந்து போகும். எங்கள் பாலஸ் (பைக்)  மலையில் ஏற திணறியது, ஆனால் மக்கர் செய்யாமலேயே  ஏற்ற, இறக்கங்கள், கொண்ட மலை பாதை மீது கழுதை போல சுமந்து சென்றது, கேரளா வாகனங்கள் மலை பாதையில் பறக்கின்றன, அந்த டிரைவர்கள் தனி திறன்  வாய்ந்தவர்கள்.

         எங்கள்  வாகமண் பயணமானது சற்றே மாறுபட்டு அமைந்திருந்தது. கூகிள் மேப்பில் இடத்தை பார்த்து விட்டு பின் சாலை வழியே பயணிக்கையில் குறுக்கும் நெடுக்கும் கடக்கும் சாலை வழியே பயணித்து, கடைசியில் எந்த இடம் செல்ல வேண்டுமோ அங்கே சரியாய் (...?) சென்று சேருவது, பயணம் மிகவும் சுவாரஸ்யமாய் அமைந்தது, என்றே சொல்லவேண்டும். நாங்கள் மேற்கொண்ட பாதை குமுளி-ஆனவிலாசம்-புல்லுமேடு-அய்யப்பன்கோவில்-மேரிகுளம்-ஆலடி-சின்னார்- வழியாக வாகமண் அடைந்தோம். (Our Via from Kumily-Aanavilasam-Pullumedu- Ayyappankovil-Marykulam-Aalady-Chinnar Through Vagamon)
   
           கேரளா மாநிலம் முழுதும் பச்சைப் போர்த்தி கிடக்கிறது. நாங்கள் மேற்கொண்ட மலைப்பாதைகளில்  கூட வன்மரங்களும், பணப்பயிர்களான ரப்பர், வாழை மரங்களும், நறுமண பயிர்களான தேயிலை, காபி, குருமிளகு, ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு,  இஞ்சி, போன்ற பயிர்கள் விளையும் தோட்டங்களை தாண்டியே பயணம் தொடர்ந்தது, வீடுகளில் கமுகு மரங்களில் வெற்றிலை கொடி போல் பற்றி படர்ந்திருக்கிறது குருமிளகு கொடி, தெங்கின் தோப்பில் நீள பச்சை குச்சி போல் இலைகள் எதிரெதிர் அமைத்திருக்கும் ஒரு செடியை பார்த்து பாலஸ் நின்றது. தோப்பில் (விளையில் ) சென்று  பார்த்த போது,  பூ பூத்திருக்கும் செடியோடு வாசனையும் வந்தது, ஆம் நண்பர்களே ஏலக்காய் தோட்டம்.  மெல்லிய கருநீல வரிகள் படர்ந்த வெண்ணிற ஏல மலர் நம்மை வெகுவாக கவர்ந்தது. அந்த அழகை விட்டுவைப்போமா? நாம் உடனே அஞ்சாறு கிளிக்குகள் விளைவால்  சில ஒளிப்படங்கள்.


ஒரு ஏலப்  பூவின் தனி அழகு - A Cardamom Flower

ஏலத்தோட்டத்தில் rider  இளங்கோ-  in Cardamom Plantation
         இயற்கை எழில் படர்ந்த கேரளா மாநிலத்தின் சாலைகள் வழியே பயணிப்பது, உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி அளிப்பதாக உள்ளது. வெயிலின் வெக்கை அவ்வளவாக நம்மை தாக்காது, எங்கும் நீர் நிரப்பும் ஆறுகள் ஓடிபாய்வதால் நா வறட்சிக்கு வாய்ப்பில்லை, வெண் மணல் தெரியும் ஆற்று நீரை அள்ளி அள்ளி குடிக்கலாம், தணுத்த தண்ணீர் நம் தாகம் தீர்ப்பது ஒரு தனி சுகம். அய்யப்பன் கோவில்- மேரி குளம் சாலையில் கேரளா வீடுகள் தனது பழைய பாரம்பரியம் மறந்து புதுயுக கோலம் பூணுகின்றன. ரெட்டை மூன்றடுக்கு, கான்கிரிட் மாடி வீடுகள், வீடுகளின் வாயில்கள் இரும்பு கம்பிகளால் வேயப்பட்டு இருக்கின்றன. பார்ப்பதற்கு ஒரு சிறிய அரண்மனை போல் இருக்கின்றன. இவற்றின் காரணம் அறிய முற்படுகையில் இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பான்மை  வளைகுடா நாடுகள், மற்றும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்  வேலை பார்த்து வருவதாகும். அங்கு சம்பாதித்த செல்வம் இங்கு வீடுகளாய் விளைகிறது.  நம் மக்களின் முன்னேற்றமே நம்  நாட்டின் முன்னேற்றம் .   

வாகமண் செல்லும் வழியில்- ஒரு கேரளா நகர காட்சி-  a Kerala Road nr. Mary Kulam 
                        அழகிய இடங்களை கடந்து சென்ற  போது, கண்கள் நிறைந்தது, வயிறு பசித்தது.  மேரி குளம் என்ற ஊர் கடந்து சாலையோர கடையில் கொதிக்கும் சாயாவின் மணம் வரவே அங்கே பாலஸ் ஐ நிறுத்தி விட்டு சென்றோம். ஓட்டுக்கூரை அதனுள் மரப்பலகையில் செய்த கண்ணாடிப்பெட்டிக்குள் இருந்த பலகாரங்கள் எம்மை அழைத்தன. ஆளுக்கொரு சாய், மற்றும் ரெண்டு பிளேட் பரோட்டா சாப்பிட்டோம், அதன் கூட்டுவான் முட்டைக்கறி, அதன் வாசமும் சுவையும், மனதிற்குள்ளே கிடக்கிறது. இந்த வட்டாரத்தின் சிறப்பு நம்ம ஊர் உளுந்து வடை வடிவில் சுடப்படும் உள்ளிவடை . இதன் ருசி முற்றிலும் வேறானது, நீங்க போனால் கண்டிப்பா தின்று பார்த்து சொல்லுங்க..!  வித்யாசத்தை உணர்வீங்க..!

மேரி குளம்- வழியோரக்கடை - A Road Side Motel in Mary Kulam Kerala
         

ப்ரோட்டா + முட்டை கறி- Parotta with Kerala Style Egg Curry

உளுந்த வடை அல்ல இது மேரி குளம் உள்ளி வடை - Mary Kulam (Idukki District)  Style Onion Vada ( Ulli Vada)

              காலை பலகாரம் தின்று முடித்து, பாலசுடன் பயணம் தொடர்ந்தது, ஆலடி என்ற ஊர் நெருங்குகையில், பெரும் சலங்கை சத்தத்துடன் ஓடி வந்த பெரியாற்றை சந்தித்தோம், அமைதி, ஆர்ப்பரிப்பு, பேரோசை என்று பருவங்களுக்கு ஏற்றபடி தவழ்ந்து கொண்டே இருந்தது தங்க நதி.மழை குறைவானதால் நதியில் வெள்ளம் வரத்து குறைவு, மழை காலங்களில் கரைகளை தொட்டு ஓடும் என்று தெரிந்து கொண்டோம். இடுக்கி மாவட்டத்தின் பல இடங்களை செழிப்புற செய்வதில் பெரியாறின்  பங்கு சொல்லில் தீராது. இதன் காரணமாகவே சேர நாட்டவர் தம் வீடுகளை சுற்றிலும் பயன் தரும் மரம், செடிகளை வளர்க்கிறார்கள், தம் வீடுகளில் மீந்து போகும் கழிவுகளை,  அச்செடிகளுக்கு உரமாக மாற்றி,  தமக்கு தேவையான காய்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொண்டு, இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்கிறன்றனர். தற்போது நம்மிடையே மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் வைத்து காய்கறிகளை இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் முயற்சி தொடங்கி இருக்கிறது. இது மென்மேலும் தொடர வேண்டும் என்பது எம்  ஆசை.

ஆலடி ஒரு அழகான வளைவுச் சாலை - A Road to Vagamon

சலசலக்கும் பெரியாறு - Periyar River

அமைதியாக ஒரு குழந்தை போல் தவழ்ந்து வரும் பெரியாறு 


பெரியாற்று பாலத்தில் 

ஒரு வீட்டில் நின்ற காபி செடியில்  பழம் பெயர்?  காபி பழம் ?-  Coffee Fruit

பூத்து குலுங்கும் தெற்றி பூ (அ) இட்லி பூ-  a Jungle Geranium Flower

பயணம் தொடரும்....



நேசமுடன்
இளங்கோ கண்ணன்.


அடுத்த பதிவில் கேரள கள்ளுடை, ஒப்பம் பட ஷூட்டிங்கில் மோகன்லால் ..

No comments:

Post a Comment