Wednesday 15 February 2017

ஒளிப்படம் எடுப்போர்களின் சொர்கம்- வாகமண் (கேரளா) - Photographer's Paradise Vagamon (Kerala) Episode-2



         சென்ற பதிவின் தொடர்ச்சி....

                 வாகமண் நகர் நோக்கி செல்லும் சாலையில் அழகினை பார்த்தவாறு  சென்று கொண்டிருக்கையில் "கள்ளு" (കള്ളു)  என மலையாளத்தில் எழுதப்பட்ட (பார்த்திங்களா ..? கிட்டத்தட்ட தமிழ் எழுத்து போலவே உள்ளது ) போர்டை பாத்ததும் ஒரு ஆவல் ஏற்பட்டது. கள் போன்ற கண்கள் உடையவளே..! தேவை உந்தன் சேவை என்று இதழ் -"கள்" ஊறுமடி, என்ற           டி. ராஜேந்தரின் கவி வரிகள் மனதுக்குள் ஓடியது. கள்ளு உடலுக்கு நல்லது, உடலின் சோர்வை போக்க வல்லது, பழந்தமிழர்கள் கள் உண்டு கழித்திருந்தனர். என்று மனம் எண்ணுவதற்குள்,  கால் கடைக்குள் நுழைந்துவிட்ட்டது.  உள் நுழைந்ததும் ஒரு இன்முக வரவேற்பு கொடுத்தார் கடைக்காரர். பனை, தென்னை  என இருவகை கள்ளு  கிடைக்கும் என கடையின் பட்டியல் தெரிவித்தது. அங்கே இருந்த சேட்டன் "இப்போழ்  பன மாத்திரமே உள்ளு " என சொன்னார். சரி ருசி பார்த்து விட்டு செல்லலாமே என்று நினைத்து,  கொண்டு வரச்சொன்னோம், "பின்னே கழிக்கான் எதும் வேண்டே " என கேட்க பக்ஷணங்களை   கோர்வையாக பட்டியலிட்டார். கப்பா,  பீப் கறி, குடல் வறுவல், பிரெஷ் என தெரிந்ததும் அதை கொண்டு வர சொன்னோம், ஒரு லிட்டர் ஜக்கில் தொன்மைத்  தமிழரின் பானம் வந்தது,  அருமையான பனங்கள்,  வாசமே  கிறக்கத்தை உண்டாக்கியது. கடை நல்ல காற்றோட்டமாக, சுத்தமானதாக இருந்தது.  மலையாளத்தில் கள்ளு கடையினை "ஷாப்பு" என விளிக்கின்றனர். அதை பார்க்கையில் நம்ம ஊர் டாஸ்மாக் கடைகளின் பார்கள் கண் முன்னே வந்து போனது, நம்ம நேரம் அனுபவிச்சுதான் ஆகணும் என்று நினைத்து கொண்டே, கள் மாந்தினோம்.

மரச்சீனி கிழங்கு (கப்பா), குடல் வறுத்தது , பீப் கறி மற்றும் தமிழனின் தொன்மை பானம் பனங்கள்  

நாவில் ருசிக்கும் மரச்சீனி கிழங்கு- அவித்து தாளித்தது 

      கள்ளின் சுவையை விடவும், கூட்டுவான்களின் ருசி இன்றும் நாவில் நீர் ஊற வைப்பது (நினைக்கையில் உள்ளூர கள்ளூறுதே ), மரச்சீனி கிழங்கு (கப்பா) நன்றாக அவித்து, பின் ஈருள்ளி, வத்தல், கடுகு, குருமிளகு இட்டு தாளித்து, கொஞ்சம் மஞ்சள் பொடி  சேர்த்து, கிழங்கை சேர்த்து கொடுத்த விதம் நன்றாக இருந்தது, அதன் கூடவே பீப் கறி, கேரளாவில் பீப் அதிக ருசியுடன் சமைக்கப்படுகிறது, அதற்கென்றே சில தனிப்பட்ட வழிமுறைகள் உண்டு, என தோன்றியது. சொல்லி வைத்த "குடல் வறுத்து உலர்த்தியது", வந்தது. அதன் சேர்மான பொடிகளின் வாசமும் ருசியும், நாக்கை கட்டிப்போட்டன. சொல்லில்  முடியாத சுவை, உங்கள் கண்ணில் கள்ளு கடைகள் கண்டால் நீங்கள் குடிக்கும் விருப்பம் இல்லாதவராய் இருந்தாலும், அங்கு கிடைக்கும் பண்டங்களுக்காவே செல்லலாம், ருசித்து மகிழலாம்.             
             
நதியில் ஓய்வெடுக்கும் ஓர் ஓடம் 

உள்ளம் கவரும் உண்ணிப்பூ 

      பெரியாற்றின் அழகையும், வழி நடுவே  எழிலையும் கண்டு மகிழ்ச்சியோடு, மலையேற்றம் துவங்கியது, பாலஸ் தனது மலையேற்ற பயணத்திற்கு மறுபடி தயாரானது. சாலைகள் சில இடங்களில் சிதறுண்டு இருந்தது. மென் காற்று தேகத்தில் ஊசியாய் குத்தியது. மேல் நோக்கி செல்ல செல்ல கதிரவன் உயரே போய்க்கொண்டிருந்தது. வீடுகளின் எண்ணிக்கையும் வெகுவாய் குறைய தொடங்கியது. காட்டுப்பாதை, ஆனால் மரங்களில் எண்ணிக்கை குறைவு. எல்லா இடங்களிலும் மனிதனின் ஆசையால் ஆக்கிரமிப்புகள், நிலங்களில் கம்பி வேலிகள் ஆட்கொண்டிருந்தன. தூரத்தில்,  நீண்ட காலமாய்  மௌனப்போர் செய்வது போல் நின்றிருந்தன  மலை சிகரங்கள். பச்சை புல்வெளி பாதை மீதும், மலைதொடர்  மீதும் போர்த்தி கிடந்தன. அதன் காட்சிகள் இதோ...  










           சாலை மேல் நோக்கி சென்றதும் மனதுக்குள் புத்துணர்ச்சி ஏற்பட்டது. எங்கள் பார்வையில் மீண்டும் ஒரு ஏலத்தோட்டம் தென்பட்டது. அப்போதுதான் நிலம்  உழுது, எல் பொடி உரம் (தூளாக்கப்பட்ட எலும்பு)  சேர்த்து பண்படுத்தப்பட்ட   மண்ணில் நடவு செய்திருந்த சில ஏலச்செடிகள்  கன்னிப்பூவை பூக்க தொடங்கியிருந்தன. இவ்வழியில் நின்று இயற்கை அழகை காண்பதே தனி சுகம்.. ஆட்கள் இல்லாத அமைதியான சூழல்.. தூரத்தில் தென்படும் பச்சை போர்த்திய மலைத்தொடர்கள் மனதை ஆர்ப்பரிக்க செய்பவை... 

ஏலப்பூ 

வாகமண்  தோட்டத்தில் 

            வாகமண் செல்லும் ஒரு வழியில் எம்மை சாலை கொண்டு சேர்த்தது, வாகமண் டவுண் செல்லும் பாதை முன்பாகவே குரிசு மலை (Kurishu Mala) எங்கள் கண்களில் பட்டது , அங்கே செல்வது என முடுக்கினோம் பாலஸை ஏற்றம் போல் இருந்த பாதை, சில இடங்களில் இறக்கமாய் இருந்தது, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் நடந்தே செல்ல வேண்டும் என்று தெரிந்து கொண்டோம். போகணுமா? வேண்டாமா? என்று சிந்திப்பதற்குள் மேகம் சில துளிகளை தூவியது, அதன் காரணமாய் குருசு மலை பயணம் தடைபட்டது. கண்டிப்பா நண்பர்கள் போய் பார்க்க வேண்டும் என்பது எம் தாழ்மையான வேண்டுகோள்.

                 பின்னர் அவ்வழியே பிரியும் மிக இறக்கமான சாலையில் பயணித்தோம். பாலஸை ஸ்டார்ட் செய்யாமலே (ஆமாங்க பைக் இறக்கத்துல செம்ம ஸ்பீடா போனது). கடைசியில் பாதை முடிவாராகியது. எங்கு செல்ல வேண்டும் என்ற குழப்பம். மறுபடி மேலே ஏத்ததில் பைக்கை கொண்டு செல்வது கடினமான காரியம். என்ன செய்வதென்ற யோசனை ஓடுகையில், மலை பாதைகளுக்கு நடுவே ஒரு அக்கா மாடுகளை மேய்த்துக்கொண்டு வந்தார்கள். அவர்களிடம் விசாரிக்கையில், "ஈ வழி போகாம் பற்றும், அவிடே சினிமா  ஷூட்டிங் எடுக்குன்னுதுண்டு" என்று சொன்னதும், மகிழ்ச்சி பொங்க, சேச்சிக்கு ஒரு நன்னி தெரிவித்து விட்டு பாலசோடு பயணித்தோம். க்ரீம், க்ரீம், என்ற வண்டுகளின் முரலலும், காட்டு பறவைகளின் சத்தமும் ஒரு அச்சத்தை ஏற்படுத்தின.. தூரத்தில் ஒரு ஓடையின் சலசலப்பு, மனதை ஏதோ செய்தது.. கொஞ்ச தூரம் சென்றதும், அங்கிருந்து ஒரு ஜீப் ஹாரன் சத்தம் கேட்டதும் மனதிற்கு தைரியம் வந்தது, அப்பா.. மக்கள் நடமாடும்                              இடம் தான்-னு, பாதை செல்ல செல்ல இயற்கையின் அழகு, சில்லிடும் சிறு தூரல், உற்சாகப்படுத்தியது, சிற்றோடையில் தணுத்த தண்ணீர் குடித்து, சுகம் பொங்க வழி எத்தினோம்.       

 ஒரு வாகமண்  காட்சி
 மஞ்சு புகையில் மலைத்தொடர்
 ஒரு வாகமண்  காட்சி 

மேகம் சூழ்ந்த பச்சை மலை 

உயரத்தை அடையும் காட்டுப்பாதை

 இந்த வழி எங்கு போகுமோ ? குழப்பத்தில் ..


பயணம் தொடரும்....


நேசமுடன்
இளங்கோ கண்ணன்.




இறுதியாக...
         சேர நாட்டு   கள்ளு கடைகளின் தனித்தன்மை, அங்கு உண்டாக்கப்படும் சிறப்பான பட்சணங்களை உலகுக்கு  உணர்த்தும் நிகழ்ச்சி, ஏசியாநெட் பிளஸ் சேனலில், தொகுப்பாளர் கிஷோரின் கைவண்ணத்தில் சுவைக்கும்  "ஷாப்பிலே கறியும் நாவிலே ருஜியும்"  (Shoppile Kariyum Naavile Ruchiyum) பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரியும் நான் சொன்னது. 
காணொலி இணைப்பு இதோ..


மேலும் "கள்" பற்றிய நாஞ்சில் நாடன் அவர்களின் கட்டுரை இணைப்பு 
 தமிழாசான் வள்ளுவனின் குறள் ஒன்று 
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் 
எண்ணப் படவேண்டா தார்.

No comments:

Post a Comment