Friday 17 March 2017

தேக்கடி-வண்டிப்பெரியார்-தேயிலை தோட்டங்கள் & கப்பா பிரியாணி- Tea Plantation in Thekkady (Kerala) & Kappa Biriyani

      வரும் கோடை விடுமுறை நாட்களை கேரளாவின் தேக்கடி மற்றும் வாகமண் பகுதியில்  சுற்றலா செல்லலாம்.  நண்பர்களே..இந்த வலைப்பூவில் தேக்கடி பற்றிய பதிவுகள் இடம் பெற்றுள்ளன. 

பெரியாற்று நதி - A View of small River 
     
         வழிகள் எங்கும் பச்சை படர்ந்தும். ஆற்று நீரோசை நிறைந்தும் காணப்படும் ஒரு பகுதியாகும். வழியில் எங்கும் நம்மை வசீகரிப்பவை தேயிலை தோட்டங்களின் பசுமை, அழகு, அங்கே ஒளிப்படங்கள் எடுத்து, தம்மிகளோடு மகிழலாம். கண்ணன் தேவன், AVT  போன்ற பெயர் பெற்ற தேயிலை தோட்டங்கள், மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன, அது மட்டுமின்றி சிறு சிறு தேயிலை ஆலைகளும் உள்ளன. Factory  outlet என்று இருக்கும் கடைகளில் மலிவாக தேயிலை கிடைக்கின்றது, தேயிலை வாசம், ஏலக்காயின் மணத்தோடு இருப்பதால் மிக்க மகிழ்ச்சி கொள்கிறது மனம். சில ஆலைகளில் கட்டஞ்சாயா இலவசமாக வழங்கபடுகிறது, ஒரு கோப்பை பருகி விட்டு வீட்டுக்கும், அக்கம் பக்கத்துக்கு உறவினர்களுக்கும் வாங்கி கொண்டு வந்து கொடுத்து மகிழலாமே..!  தேக்கடி செல்லும் போது எல்லா இடங்களை சுற்றி பார்த்தாலும் நிறைய இடங்களை நாம் கண்டு வர இயலாமல் போகும், அதற்க்காக ஒரு திட்டமிட்டு எங்கெல்லாம் செல்வது, நேரத்தை கணக்கிட்டு சென்று வருகையில் எல்லாம் வெற்றியாக நிகழும். மழை  பெய்கின்ற நாட்களில் பார்க்கும் இடமெல்லாம் மிக அழகாக உள்ளது, சுவையான உணவு வகைகளும் கிடைப்பதால்.. சந்தோசத்தோடு சென்று வரலாம். எங்கள் பாலசோடு பயணிக்கயில் எடுத்த ஒளிப்படங்கள் இவை.


தேயிலை தோட்டங்கள் எழில்  - Beauty of Tea Plantation 
Beauty of Tea Plantation
   

A Church near Kuttikanam in Kerala



Beauty of Tea Plantation




மழை பெய்த நேரத்தில் 

A Rainy day
          தேக்கடி கேரள-தமிழக எல்லையாக திகழ்வதால், சாப்பாடு நம்மூர், மற்றும்  கேரளா மாநில சுவையோடு கிடைக்கிறது. காலை நேரத்தில் இட்லி, தோசை, புட்டு கடலை கறி, மதியம் சாதா  சாப்பாடு (4 வகை கூட்டு, பருப்பு, சாம்பார், ரசம், மோர், பப்படம்), மீன் கறி சாப்பாடு (கடல் மீன் மற்றும் அணை மீன் இவற்றில் தயார் செய்த கறிமீன், பொறித்த மீன் )
       இவை தவிர பிரியாணி வகைகள் அதிலும், சேர நாட்டு  தலைசேரி பிரியாணி, கிடைக்கின்றன, இறைச்சி வகைகளில், கோழி, நாட்டுக்கோழி, ஆடு, பீப், போத்து, பன்றி, நாவை எரித்துவிடும் சுவையில் கிடைக்கின்றன. தேக்கடி நகரில் பேருந்து நிலையம் அடுத்துள்ள, குட்டநாடன் ஹோட்டலில் (Kuttanadan Restaurant)  ஓர் நாள் உணவுகளை சாப்பிட்டோம், இங்கு பட்சணங்கள் கைக்கடிக்காத விலையில் கிடைக்கின்றன. மாலையில் வழங்கப்பட்ட சம்பா அரிசி கஞ்சி, நெஞ்சில் மறவாதது, அதனோடு தேங்காய் துவையல், பப்படம், அச்சாறு என்ற ஊறுகாய், இரண்டு பொரியல் கூட்டுகள். அதோடு கேரளாவின் சுவை நிறைந்த கப்பா பிரியாணி (Tapioca or Caasava Biriyani) (இடுக்கி மாவட்ட சிறப்பு) அவித்த மரச்சீனி கிழங்கில், பீப் கறி சேர்த்து,பப்படம் பொடித்து போட்ட, கப்பா பிரியாணி, அள்ளி எடுத்து திங்கயில் நாவில் கரைந்து செல்கிறது, அதனை சுவை, இடை இடையே இறைச்சி துண்டுகளும் சுவை மொட்டுகளை கிளர்ச்சி செய்கின்றன. மிச்சம் வைக்காமல் சாப்பிடலாம். மறக்காமல் சாப்பிட வேண்டிய ஒன்று.  

சுவை நிறைத்த கப்பா பிரியாணி -Tasty Kappa (Tapioca or Caasava ) Biriyani 

ஒரு மழைக்கால காட்சி- a Rainy day 


Rally of Mist


பயணம் தொடரும்...

நேசமுடன்
இளங்கோ கண்ணன்

தேக்கடி சுற்றுலா தலத்தோடு காணவேண்டியவை

1. தேக்கடி படகு குளம் அணை மற்றும் புலிகள் காப்பகம் (Thekkady Boat ride,Dam and Eco Tourism) Thekkadi
2. வண்டிப்பெரியர் தேயிலை தோட்டங்கள் (Vandiperiyar Tea Plantation)
3. பருந்தும்பாரா Parunthumpara
4. கவி அணை மற்றும் சூழல் சுற்றுலா (Gavi Dam and Eco Tourism)
5. வாகமண் Vagamon


Tuesday 14 March 2017

பாலருவி-பிரானுர் பார்டர் பரோட்டா கடை -தென்மலை- காட்டு மரங்களோடு ஒரு பயணம் ( Palaruvi- Piranur Border Protta Hotel-Thenmala Nature Tourism Ride)

         பங்குனி, சித்திரை மாதம் வருவதற்கு முன்பே வெயில் இந்த கொளுத்து கொளுத்துதே.. நம்ம செல்ல குழந்தைகளுக்கு பள்ளிக்கூட விடுமுறை வேற வரப்போகுது, என்ன செய்யலாம் என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கும், சூடான நேரத்தில் கொஞ்சம் குளிரான குளியல் போட்டுட்டே இடம் பாக்கணும் நினைக்கிறவங்களுக்கு. இந்த பதிவு பாலருவி, தென்மலை பயணம்.

     பொதுவாக மழைக்கால பருவங்களில் குற்றால அருவியில் நாமெல்லாம் குளிக்க சென்றிருப்போம், ஒரு நெடிய வரிசை கால் கடுக்க நின்று, ஒருவர் மீது ஒருவர் மோதி, போலீஸ் காரரின் லத்தி வீச்சுக்கு இடையிலும் நின்று அருவி தண்ணீர் மேலே விழுந்தும் விழாமலும், பன்னீர் தெளித்தது போல் குளித்தவர்களும் உண்டு, விட்டா  போதும் குளிச்சது னு வந்தவர்களும் உண்டு, கூட்டம் அதிகமா இருந்தா கேக்கவே வேண்டாம், எப்படியோ குளிக்கணும் னு வந்தாச்சு நல்லா .. நின்னு பழைய அருவி, மெயின் அருவி, ஐந்தருவி, எல்லா இடத்துலயும் எண்ணெய், ஷாம்பு போட்டு குளிக்கலாம் என்ற கற்பனையோடு செல்ல வேண்டாம். நண்பர்களுக்கு தெரிந்த விஷயம் தான் , இப்போது எண்ணெய், ஷாம்பூ, சீயக்காய் பயன்படுத்தி அருவியில்  குளிக்க முற்றிலும்  தடை விதிக்கப்பட்டுள்ளது, மருந்துக்கு கூட அருவி பக்கத்திலிருக்கும் கடைகளில் தேங்காயெண்ணெய், நல்லெண்ணெய் கிடைக்காது. நாம முன்னேற்பாடா தேங்காயெண்ணை வச்சிருக்கோம், தேய்ச்சிட்டு போனாலும் கஷ்டம் தான், நம்மளை குளிக்க அருவி பக்கமே விடமாட்டாங்க,, கவனம் தேவை நண்பர்களே...! .  
A view of  Paalaruvi Water Falls
         அப்போ ? எங்கதான் போலாம் .. கொஞ்சம் வேகமா சொல்லுங்க என்கிற உங்க மனதின் குரல் எனக்கு கேக்குது, போலீஸ் லத்தி வீச்சு இல்லாத, சுகமான குளியல் போட, தென்காசி, செங்கோட்டை கடந்து, கடந்து தமிழக- கேரளா எல்லையோர வனப்பகுதியில் உள்ளது, பாலருவி (Paalaruvi) என்னும் இடம், உள்ளூர் காரர்களுக்கு பரிச்சயமான இடம், குற்றாலம் அருவி குளித்து முடித்தவர்களுக்கு, புதிதாய் காட்டுக்குள்ளே சென்று, அதிகளவு மக்கள் நெருக்கமின்றி, இயற்கையை ரசித்தவாறு, இன்ப குளியல் செல்ல சிறந்த இடம், பெண்கள், குழந்தைகளுக்கு தனி பகுதி, எப்போதும் பாதுகாப்பு நிறையவே உண்டு,   
A Highway to Paalaruvi- NH-744
          
   குற்றாலம் வழியே வருபவர்கள் பிரானுர்-செங்கோட்டை-புளியறை- ஆரியங்காவு- கடந்ததும் நம்மை சாலை பாலருவி நோக்கி அழைத்து செல்லும். கேரளா வனத்துறையினர் நபர் ஒன்றுக்கு ரூபாய்.25/- வீதம் கட்டணம் வசூலித்து உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். காட்டின் மரங்களை பார்த்தும், குரங்கு கூட்டம் நம்மை அழைக்கும், அவற்றிக்கு உணவு பண்டங்கள் கொடுக்கின்றனர், சுற்றுலா பயணிகள் (வனத்தில் உலவும் நம் முன்னோர்களுக்கு ஏதும் தின்பண்டங்கள் கொடுக்க வேண்டாம் என்பது வனத்துறையின்  அறிவுரை) அதோடு  மனம் மயக்கும் புள்ளினங்களின்  ஓசையில்  மயங்கியும், சூரிய கதிர் விழாத காட்டில் பைய பைய  .. செல்ல..செல்ல பாலருவியை அடையலாம். 

Cute Monkeys in Paalaruvi Forest

நம்மை வரவேற்கும் நம் முன்னோர்கள் 
     மலையில் பிறக்கின்ற கல்லடா நதி வெள்ளம், பாறைகளில் மீது  மோதி, தெறித்து பால் போன்ற நிறத்தில் அருவி வழிவதால் பாலருவி என பெயர் பெற்றது. மதியம் 12 வெயிலின் போதும் தண்ணீர் சில்லென்று இருக்கிறது. அருவியில் குளிக்கும் சுகம். குளித்து பார்த்து உணரவும், தண்ணீரின் சுவை சொல்லில் தீராது, அருவியில் வீழும் நீரை தண்ணீர் போத்தல்களில் பிடித்து செல்கின்றனர் பலர். கேரள மற்றும் தமிழக மக்களின் நோய்களை தீர்ப்பதிலும், உடல் நலம் பேணுவதிலும் ஒரு இன்றியமையாத இடம் இப்பாலருவிக்கு நிச்சயம் உண்டு..
Beauty of Paalaruvi (Milky Falls) with Cumulus 



பாலருவியின் எழில் 

        குற்றாலம், பாலருவி சுற்றுலா என்றதும் அருவியில் குளித்து முடித்ததும், சுவையா சாப்பிட ஒரு கடை தேடுவீங்க? அப்டினா  நீங்க மறக்காம  செல்ல வேண்டியது பிரானுர் ரஹ்மத் பார்டர் பரோட்டா கடை, சுற்று வட்டத்தில் மட்டுமல்லாது உலக தமிழர்களுக்கு தெரிந்த ஒரு அடையாளம், இந்த புரோட்டா கடை, அத்தனை ருசி, சுவை, இங்கு புகழ் பெற்ற புரோட்டா மட்டுமல்ல வீச்சு பரோட்டா, முட்டை பரோட்டா, கொத்து பரோட்டா, என பல வகைகள் உண்டு, மதியம் எங்களுடைய பயணத்தில் இடம் பெற்றது நாவில் சுவை நிற்கும் நாட்டுக்கோழி பிரியாணி, மற்றும் காலத்தை வெல்லும் சுவையில் காடை பிரியாணி. இங்குள்ள உணவு வகைகள் இதனை சுவையாக திகழ காரணம் இக்கடையில் தயாரிக்கப்படும் தனிவகை மசாலாக்கள், இவர்களே பொடிகளை தயார் செய்வதால் இக்கடை சால்னா, பொரியல், அரப்பு எல்லாமே, தமிழகம் கடந்தும் மக்கள் மனதில் நிலை பெற்றுள்ளது. கடையினை கண்டுபிடிப்பது எளிது, செங்கோட்டை-பிரானுர் சாலையிலே உள்ளது. யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள். பார்டர் பரோட்டா கடை என்று பல பெயரில் கடைகள் இருந்தாலும் தனித்துவம் வாய்ந்தது "ரஹ்மத்" கடை தான். இந்த பக்கமா போனீங்கன்னா ஒரு விளாசு விளாசுங்க..!
  
Piranur (Shenkottah) -  Famous Border Parotta Hotel  Pic from Youtube page

பிரானுர் - பார்டர் பரோட்டா கடையின் உள்தோற்றம் 

Piranur (Shenkottah) -  Special Urban Chicken Biriyani & Quil Bird Biriyani


பிரானுர் - பார்டர் பரோட்டா கடையின் சுவைமிகு நாட்டுக்கோழி, காடை பிரியாணி பொட்டலங்கள் 
       பாலருவி கண்டு முடித்து, அதன் அருகே வன மகன்கள் வாழும் ஒரு இடம் உள்ளது. ரோஸ் மலை  முடிந்தால் இங்கு சென்று தென்மலை அணையின் அழகை பார்த்து  வரலாம்.. கொல்லம் -புனலூர் சாலையில் செல்லும் போது  ஒரு சிற்றுலா இடமான அம்பநாடு ஹில்ஸ் அமைந்துள்ளது இங்கும் நாம் போய்  வரலாம். நங்கள் இவ்விரு இடங்கள் பற்றி அறியாததால் அங்கு சென்று வர இயலவில்லை, நண்பர்கள் கண்டிப்பா சென்று வரவேண்டும் என்பது எம் விருப்பம். 
     
          மலை மீது பயணத்தோடு சாலையோடு துணை வரும் ரயில் தண்டவாளம் உள்ளது, தென்மலை 16 கண்ணு பாலம்  தற்போது புதுப்பொலிவு பெற்று திகழ்கிறது, அதையும் ரசித்து விட்டு, அங்கு சில தம்மிகளை எடுத்துவிட்டு, பகிரி, முகப்புத்தகத்தில்  பதிவேற்றம் செய்து மகிழலாம்.

Thenmala (Aryankavu) Railway Bridge

a View of Thenmala Water Reservoir 

In front of the Reservoir

Thenmala Dam View
தென்மலை அணையின் அழகு காட்சி  

       இவ்வழியில் அடுத்த சுற்றுலா இடம் தென்மலை அணை. இங்கு அணைக்காட்சி, பூங்கா மற்றும்   இந்தியாவின் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட  சூழல் சுற்றுலா (Eco Tourism) திட்டம்,  சுற்றுலா பயணிகள் காட்டுயிர் சோலைகள் கண்டுவரும் பயண திட்டம் போன்றவை  உள்ளன . இயற்கையோடும், வனங்களை பார்வையிடும், மனதிற்கு ஒரு புது பொலிவு தரும் விதமாய் இப்பயணம் அமையும் என்பது எம் விருப்பம்.. உங்கள் விருப்பம் அது தானே..! 

பயணம் தொடரும்....

நேசமுடன் 
இளங்கோ கண்ணன். 


சில முக்கிய குறிப்புகள்
via to Paalaruvi 

from Madurai (Tamil Nadu)  (by Road-NH-744)
Madurai-Thirumangalam-T.Kallupatti-Srivilliputhur-Puliyankudi- Ilanji-Shenkottah-Puliyarai-Aryankavu- Palaruvi (Kerala)

Nearest Railway Station : Shenkottah

1. பாலருவி சுற்றுலா செல்ல நீங்கள் முடிவெடுத்ததும் அருவியில் தண்ணீர் விழுகிறதா?  என்று விசாரித்து செல்வது முக்கியம் .
கேரளா பாலருவி வனத்துறை இணையம் சொடுக்குக
(for more Informations Click Below Links)

Kerala-Palaruvi- Water Falls

2. தென்மலை அருவி- சூழல் சுற்றுலா விவரங்கள்
Thenmala- Tourist Places

Thenmala -Eco Tourism

Thenmala - Attractions

3. பிரானுர் ரஹ்மத் பார்டர் பரோட்டா கடை காணொலி காட்சி.
Piranur- Rahmath Border Parotta



Monday 13 March 2017

பெரியார் சூழல் சுற்றுலா (காட்டுக்குள்ளே ஒரு பயணம்)- Periyar Eco-Tourism- Thekkady-02

       (சென்ற பதிவின் தொடர்ச்சி..)
        தேக்கடி புலிகள் காப்பகத்தின் குறுங்காடு முடிவடையும் இடத்தில் முல்லை பெரியாறு அணையின் ஒரு பகுதி எம்மை வரவேற்றது. அங்கு சென்ற போது தான் கண்டோம்.. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களின் பல பாடல் காட்சிகள் பதிவு செய்யப்பட்ட இடம், உயிரே படத்தின் நெஞ்சினிலே பாடலின் சில காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டவையே..மேலும் இந்த அணை காட்சி எதாவது சினிமா பாடலில் பார்த்தால் நீங்கள் மகிழ்ச்சி கொள்வீர்கள்.. எங்களை போலவே...

      வனத்தில் நின்ற மரங்களை விட, அணை முகத்தில் நின்ற பட்ட மரங்களின் அழகே தனி .. நீருக்குள் மூழ்கி, இலை, கிளைகளை, மறந்து ஒற்றையாய் நீரில் நின்று தவம் புரியும் சித்தர்கள் போலே  தெரிந்தன.. இம்மரங்கள். அதை ஒளிப்படமாய் பதிவு செய்தோம் ..

அணையின் ஒரு எழில் தோற்றம் - A Beautiful View of Periyar Tiger Reserve 

அணையின் ஒரு எழில் தோற்றம்A Beautiful View of Periyar Tiger Reserve 

நீரில் தவம் செய்யும் ஒற்றைக்கால் மரங்கள்- A Beautiful trees like Penance Saints 

நீரில் தவம் செய்யும் ஒற்றைக்கால் மரங்கள் - A Beautiful trees like Penance Saints 



மூங்கில் மரத்தெப்பம்  - A Bamboo Raft

       இவ்வன விலங்கு காப்பகத்தில் நாங்கள் தேர்ந்தெடுத்த பயணம் ஆதிவாசி மக்கள் தங்களது தொன்மை காலத்தில் நதியில் பயணித்த மூங்கில் தோணி, காட்டில் எங்கேயும் காண கிடைக்கும் மூங்கில் மரங்களை ஓன்றிணைத்து கட்டு மரமாய் செய்து, சிறு துடுப்பின் உதவியால்  ஆற்றை கடக்கவும், இதில் அமர்ந்து மீன் பிடிக்கவும் பயன்படுத்தியது . தோணியில் பயணிக்க வன காவலர்கள் தயாரானதும். எமக்கு பாதுகாப்பு உடைகள் கொடுத்து அணிய சொன்னார்கள், உடைகள் பொருத்தி முடிந்ததும், பயணம். தொடர்ந்தது. வன காவலர்களிடம் நாங்களும் துடுப்பு போடலாமா? என கேட்டதும், சரி என சொல்லி, ஆளுக்கொரு துடுப்புகளை கொடுத்தார்கள். துடுப்பின்  விசைக்கேற்ப மூங்கில் கட்டுமரம் வெள்ளத்தை தழுவி சென்றது, எல்லாருக்கும் ஒரு பெஞ்ச் போன்ற இருக்கை  அமைக்கப்பட்டிருந்தது. அதனால் தண்ணீர் நம் மீது பட வாய்ப்பில்லை. நீரை நாமும் கையில் கோரி குடித்தும், சிதறியும் விளையாடலாம், கட்டுமரத்தோடு பயணிக்கையில் நம் உதடு முணுமுணுக்கும் பாடலை பாடியும், சந்தோசத்தோடு பயணிக்கலாம், இவ்வேளையில், மான், யானைகூட்டம், வனவிலங்குகள் நீர் அருந்த வரும் காட்சியையும் காணலாம்.





மூங்கில் மரத்தெப்பம்A Bamboo Raft Small 



மூங்கில் மரத்தெப்ப சவாரி-  with Forest Rangers

பைக் ரைடர் மட்டுமல்ல இப்போ  படகு ரைடர் - not a Bike Rider now Raft Rider

     ஒரு கால் மணிக்கூர்  கட்டு மரத்தோடு பயணம் செய்து முடித்தும், நீர் வற்றி கிடந்த இடத்தில் கட்டுமரம் நின்றது. உள்ளே கொஞ்சம் நடக்கலாம் என்று அழைத்து சென்றனர். புல்வெளி மேடுகளை தொடர்ந்த ஆற்று நீர்தேங்கி கிடந்த இடத்தில் வனமகன்கள், மற்றும் மகள்கள்   தூண்டில் வைத்து அன்றைய சமையலுக்கு தேவையான மீன்களை பிடித்து கொண்டிருந்தனர். இம்மக்களின் அன்றாட உணவில் கிழங்கு , மீன் கண்டிப்பாய் இடம்பெறும்.
   
         தூண்டில் வைத்து மீன் பிடிக்க பொறுமை நிறைய அவசியம் என்பதை ஆற்றிலோ, குளத்திலோ, கிணற்றிலோ, மீன் பிடித்து பார்த்த நண்பர்கள் அறிவர். இத்தொன்ம குடிகள் மீன் பிடிக்கும் முறை சற்றே புதிது. நீண்ட குச்சி கம்புகளில் (நொச்சி, பூவரசு) நுனியில் கங்கூஸ் கட்டி நடுவில் மிதக்கும் கட்டையோடு முடிவில் மீன் கடிக்கும் கொழு, அதில் மீன் கடிக்க கொழுவில் மண்புழு கொருத்து தண்ணீருக்குள் வீசி புழுவை மீன் எப்போது கடிக்கும், என்று ஏங்கி பார்த்து,   கம்பை கையோடு பிடித்துக்கொண்டே இருப்போம் நாம் , கை  அசையும் போது  நீருக்குள் இருக்கும் கொழுவும் அசையும் அதனால் மீன் கடிக்காது, மீனை பிடிக்கவும் முடியாது. இதுல கவனிக்கணும் இம்மக்களோ தூண்டில் கம்பு   அசையாமல் இருப்பதற்கு ஒற்றை கவுளி கம்பால் இரு புறமும் பிடிமானம் வைத்துள்ளனர், அதனால், கம்பும் அசைவதில்லை, மீனும் எளிதில் சிக்கி கொள்ளும் (ஒளிப்படம் கீழே), அணையில் அதிகம் மீன்கள் இருந்தாலும், தூண்டில் முள்ளில் சிக்கும் மீனினங்கள் (சிலேபி, விரால் , கரிமீன்) சிலவே. இதை எழுதுங்காலை அண்ணன் கவிஞர். கபிலனின் வரி ஒன்று ஓடியது,

நூறு முட்கள் இருந்தும்
ஒரு தூண்டில் முள்ளில்
சிக்கி கொள்கிறதே - மீன்

இதே கவிதை வரியை யாரோ... நீ.... பிஞ்சு நிலவா ?.. என்ற திரைப்பாடலிலும் சிதையாமல்   வைத்திருந்தார், மெல்லிய இசையால் வித்யாசாகர் அழகூட்ட, பாடகர் ஹரிஹரனின் தேன் குரலில் செவியில் இன்றும் இனித்துக்கொண்டே இருக்கின்றது.
முல்லை பெரியாறு அணையில் - Another View of the Lake

பொறுமையோடு மீனை பிடிக்கும் முயற்சி- Fish Catching a New Method from the Tribal Peoples

பொறுமையோடு மீனை பிடிக்கும் முயற்சி-  ish Catching a New Method from the Tribal Peoples

மீன் பிடிக்கும் தொன்ம குடியினர் 

       இந்த பயணத்தில், எம்மோடு பயணம் செய்த கேரளா வனத்துறையினர், இந்த தோணி பயணத்தை சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்தனர், அணையில் சில இடங்களில் தண்ணீரில் மூங்கில் மரம் சிக்கிக்கொண்ட போது அதை சரி செய்து, பயணத்தை பாதுகாப்பாக முடித்து வைத்தனர்.. வன ஜீவன்களை காண முடியவில்லை என்ற ஒரு குறையை தவிர..!
 
      மூங்கில் மர பயணம் மதியம் 12.30  மணியளவில் நிறைவுற்றது, பின்னர் காட்டு வழி பாதையோடு அழைத்து வந்தனர். இவ்வழி  ஆளுயர புற்கள் நிறைந்த மற்றொரு வழி இங்கும் வனஜீவன்கள் இல்லை, பறவைகளின் பாட்டொலி கேட்டு, இறந்து கிடந்த எருது கொம்பில் ஒரு ஒளிப்படம் எடுத்து. வன காவலர்களுக்கும் , சக பயணியார்க்கும் நன்றி தெரிவித்து மகிழ்வோடு  விடை பெற்றோம்..

எங்கள் குழுவினர் - Our Team


இறந்து கிடந்த ஒரு காட்டெருமை கொம்பின் அருகே- A Bison's Horn 

பயணம் தொடரும்...

நேசமுடன்
இளங்கோ கண்ணன்


வனத்தில் உலவ, முன்பதிவு செய்து கொள்ளவேண்டிய
பெரியார் புலிகள் காப்பக இனைய தளம்
(Periyar Eco Tourism - Official Website link is below )


Periyar -Tiger-Reserve-ECO Tourism