Thursday 2 March 2017

பெரியார் சூழல் சுற்றுலா (காட்டுக்குள்ளே ஒரு பயணம்- Periyar Eco-Tourism- Thekkady-01



     தேக்கடி நகரில் பெரியார் புலிகள் பூங்கா, தோணி சுற்றுலா (போட்டிங்), யானை சவாரி, நறுமண பொருட்கள் கடைகள், என்று எல்லாவற்றையும் கண்டு மகிழ்ந்த போதும்,  மனதை வசப்படுத்தும் சுற்றுலாவான  காட்டுக்குள்ளே அழைத்து சென்று வனத்தின் முழுமையான அழகையும் கண்டு வருவதாகும்.  இதற்கு முன்னரே பணம் கட்டி பதிவு செய்துகொள்ளவேண்டும். இந்த சுற்றுலாவிற்கு  கேரளா அரசின் வனத்துறை அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகிறது, விளக்கம் மற்றும் பயண குறிப்புகள் நாம் தேர்வு செய்து கொள்ளலாம், மேகத் தோடு நடை பயணம் (Cloud Walk), எல்கை வரை பயணம் (Border Hiking), காட்டுக்குள்ளே ஒரு நாள் (Jungle Inn). மூங்கில் தோணி பயணம் ( Bamboo Rafting) போன்ற பலவகை உள்ளன. எந்த சுற்றுலா என்பதை நம்மிடம் உள்ள பணத்தை பொறுத்தது. 

     எங்கள் தேர்வு மூங்கில் தோணி பயணம் (Rafting) காட்டுக்குள்ளே ஒரு யாத்திரை. என்ற நோக்கோடு ஆளுக்கு 1500 கொடுத்து பதிவு செய்தோம், மொத்தம் 3000 ரூபாய் . முந்தய நாள் பதிவு செய்துவிட்டு, அடுத்த நாள் காலை 8 மணிக்கு வன அலுவலகம் சென்றுவிட்டோம். அங்கிருந்தவர்கள் எம்மை இன்முகத்துடன் வரவேற்று,  எங்கள் டிக்கெட்டை பார்த்துவிட்டு, அங்குள்ள காத்திருப்பு அறையில் அமர வைத்தனர். தமிழ் தெரிந்த வன காவலர்கள் அங்கிருந்தனர். அந்த அறையில் அழகான   ஆதிவாசிகளின் வாழ்க்கை முறையினை ஓவியமாக தீட்டி வைத்துள்ளனர். எளிமையான கூரைகள், நெட்ட நெடுவென வளர்ந்திருக்கும் மரங்களில் எவ்வாறு தேன் எடுப்பது, ஆற்றில் மீன் பிடிப்பது, கானகத்தில் தாக்கவரும் விலங்குகளிடமிருந்து தற்காத்து கொள்வது. , கடுங்குளிரை எதிர்த்து தீமூட்டி வாழ்தல், பசிக்கு புசிக்க விவசாயம் செய்தல்  (நெல், கிழங்கு, கனிகள்)  என்ற இயற்கையோடு இணைந்த வாழ்வு. நாகரிகம் இந்த முறையை எங்கே கொண்டு விட்டது ?...

         ஆகவே நாமும் எத்தனை உயரத்தில் இருந்தாலும், நமது தொன்மம் என்பது வனத்தில் இருந்தே துவங்குகிறது, அதற்காகவேனும் ஒருமுறை இக்காட்டு பயணம் செய்ய வேண்டும் என்பது எம் பெரு விருப்பம்.

                 எங்கள் பயணத்தில், ஒரு வட மாநில குடும்பத்தினர் (அப்பா, அம்மா, மகன்), தற்காப்பு துப்பாக்கி ஏந்திய ரேஞ்சர், இரண்டு துணை வன காவலர்கள். இந்த கானகம் உடலோடு ஓட்டி ரத்தம் குடிக்கும் அட்டைகள் நிறைந்தது என்பதால், நமது காலில் காக்கி துணியுறை கட்டப்பட்டு, அதை சுற்றி புகையிலை பொடி (மூக்குப்பொடி) தூவி, ஒரு தோள் பை அதனுள், தண்ணீர் போத்தல், சிற்றுண்டி தரப்படுகிறது (இதற்கு தனி கட்டணம் இல்லை) . எல்லாம் சரி ஆனதும் பயணம் தொடங்கியது.

வனத்திற்குள்ளே செல்கிறோம் நாம் - Into Wild


ஒரு மூலிகை மரத்தில் உள்ள காய்கள் - A Medicinal Value fruit

          ஆரண்யத்தில் தான் எத்தனை அதிசயங்கள். கொஞ்சும் குயிலின் கீதம் எங்கோ இசைக்க கேட்டது, வனாந்திரத்தில் பாடும் பாடல் எமக்கானதாகவே இருந்தது, மெல்லிய சில்லென பனிக்காற்று தீண்டி போனது, உள்ளே அங்கு வசித்து வரும் பழங்குடியினர் (பளியர்) குடியிருப்பை தாண்டி நடந்து கொண்டிருந்த போதே, கூட வந்திருக்கும் காவலர்களிடம் (நன்றாக தமிழ், ஆங்கிலம், ஹிந்தி பேசுகிறார்கள்) காட்டை பற்றி கேட்க தொடங்கினோம், முல்லை பெரியார் அணை கட்ட துவங்கிய காலம் முன்பே இந்த மக்கள் இங்கே வசித்து வருகின்றனர், அப்போதே மனம் எண்ண துவங்கியது, நமது தொன்ம குடிகளில் நமது முன்னோர்களின் சாயலில் இருப்பவர்கள் என்று தெரிந்து கொண்டோம், நம் நாடு சுதந்திரம் அடைந்த பின்பு, நமது ஆட்சியாளர்கள் அவர்களிடம் பேசி அடர்ந்த வனத்திற்குள் வாழ வேண்டாம், உங்களுக்கு தனி குடியிருப்பு அமைத்து, கல்வி, சுய தொழில் வாய்ப்பு வழங்குவோம் என்று பேசி அவர்களை இங்கு தங்க வைத்திருக்கின்றனர். இந்த காட்டின் காவலர்கள் அவர்கள் தான். காட்டின் எல்லா கூறுவகைகள் அவர்களுக்கே தெரியும்.

மெல்லிய குடை காளான் - Soft Umbrella mushrooms (Not for Eat) 

உதிரம் உறிஞ்சும் அட்டை - Leech
   
      எங்களோடு பயணத்தில் வந்த ஒரு காவலர் கூட இந்த வனத்தின் மகன் தான். அவரது பெற்றோர்கள் வனத்தின் அத்தனை விஷயங்களை கற்று கொடுத்ததாக சொன்னார். ஒரு வேளை கொடிய விஷமுள்ள பாம்பு உங்களை கடித்தால் கூட அந்த நஞ்சு உங்களுக்குள் ஏறாமல் இருக்க என்ன மூலிகை கொடுக்கவேண்டும் என்பது எனக்கு தெரியும் என்று அவர் கூறிய போது, திக் என்றிருந்தது, அதெல்லாம் வராது, நான் பாத்துக்கிறேன் என்று சொன்னதும் பயம் விலகியது,

     காட்டு மரங்கள்  எங்களை வரவேற்பது போல் நின்றன, அதில் கிளைக்குகிளை சாடும் மலபார் அணில், எங்களை பார்த்து வேகமாய் போனது. உள்ளே ஒரு வன் பறவையின் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது. அது என்ன என கேட்க.. அது தான் கேரளா மாநில பறவையான மலை இருவாச்சி

மலை இருவாட்சி -Great Hornbill- Image Courtesy-Google Images


  (Great Horn Bill)  அதன் சத்தம் தான் என்றும், அதை நேரில் பார்ப்பது நமக்கு கிடைத்த வரம் என்றார். அப்பறவை மனித நடமாட்டம் தென்பட்டாலே மரத்திலிருந்து சென்று விடும் எனவும் கூறினார்.. படிக்கும் நண்பர்களுக்கு ஒரு கேள்வி.. நமது மாநில பறவை எது ?...

தமிழ்நாட்டு மாநில பறவை மரகத புறா- Tamil Nadu State Bird- Emerald Dove - Image Courtesy-Google Images

       ஆதிவாசிகள் குடியிருப்பு தாண்டி சென்றதும், இரட்டை வண்டிப்பாதை வழியே பயணிக்கும் போது, வனத்தில் உள்ள முசுறு (சிவப்பு சித்தெறும்பு) கூட்டை காவலர் காட்டி தந்தார், பார்க்கவே ஆச்சர்யமாய் இருந்தது, இவ்வகை எறும்புகள் பெரிய வகையை சார்ந்தவை. நம் ஊர்களில் பொதுவாக பூவரசு, மஞ்சணத்தி, வேம்பு, மா போன்ற மரங்களில் முசுறு கூடு பார்த்திருப்போம் மரத்தின் இலைகளை இணைத்து கட்டும் கூடு, அதன் மேல் அஞ்சாறு முசுறுகள் சுற்றி கொண்டே இருக்கும். தொட்டால் நம்மை ஒரு வழி ஆக்கிவிடும். நம்மை கடித்தவுடனே அது இறந்தும் போய்விடும் அப்படி அதன் பிறப்பு. நம் பள்ளிக்கூட நாட்களில் எறும்புகளில்  காணப்படும் அமிலம் எது? என்ற கேள்வி வந்ததும் "பார்மிக் அமிலம்" என்று ஆசிரியர் சொன்னது நினைவுக்கு வரும். அந்த வகை எறும்புகள் இக்காட்டில் உள்ளன. 

ஆரண்யத்தின் நடுவே - Center of the Forest

வன் முசுறு கூடு -Red ant Nestle

   
எங்கள் குழுவினரோடு- Our Trip Members 

            அடர்ந்த வனத்திற்குள் செல்ல செல்ல ஒரு மெல்லிய அமைதி, எங்கோ ஊளையிடும் நரியின் சத்தமும், பறவைகளின் க்ரீச்சிடலும், வண்டினங்களின் ரீங்காரமும் மனதிற்கு ஒரு ஆசுவாசம் தருபவை. வழியில் பச்சை கம்பளம் விரித்தாற்போல புல்வெளி தரை, கூடவே வனத்தின் மகன்களோடு உரையாடி சென்றது ஒரு புது அனுபவம். காட்டில் தேன் எடுப்பது ஒரு தனி நுட்பம் பிடிமானம் இல்லாத நெடிய மரங்களில் ஏறுவது அங்குள்ள மனிதர்களின் தனித்திறமை.  தேன் எடுக்க  பயன்படுத்தப்படும் ஒரு  புல் வகையை காட்டி தந்தார், அதை கொளுத்தி அணைக்கும் போது பெரும் புகை உண்டாகும், அப்புகை நமக்கு எரிச்சல் ஏற்படுத்தாதது, அப்புகையினை வன் தேன் கூடுகளின் மீது காட்டுகையில் தேனீக்கள் கலைந்து சென்று விடும், பின் தித்திக்கும் தேன் தாடையில் இருந்து தேன் எடுக்கப்படுகிறது, என்ற தகவலை சொன்னார்.. காட்டுக்குள்ள போற நமக்கு இதெல்லாம் கேக்குற அனுபவம் தான். செஞ்சு பாக்க வழியில்லை.. 
    வனத்தின் அழகில் மயங்கி எடுத்த சில ஒளிப்படங்கள்.

அழகிய முள் மரம் - a Throne Tree

பூவே உன் பெயரென்ன?- A Beautiful Wild Flower unknown Name?



நாம் போகிறோமே...



ஒரு நெடுநாள் வாழ்ந்த மரத்தின் அருகே- A long lifetime Tree 

வனத்தின் அழகு - Beauty of the Forest

வன் கானகம் 

          இப் பெரியார் புலிகள் காப்பகத்தில் சில அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் நீலகிரி லாங்கூர் குரங்குகள், காட்டு போத்து என்று அழைக்கப்படும் காட்டெருமை, நம் கண்கள் கண்டும் மறைத்து கிடைக்கும் இருநிற தவளை (மலபார் தவளை) சருகின் மீது, இலையின் மீதோ அமர்கயில் அதன் நிறம் மாறி விடும்.  ஆகவே இதையும் பார்த்து மகிழவேண்டும்.  புலிகள் இங்கு வந்து செல்லும் ஆனால் அவற்றை காண்பது அரிது. யானைகளும் வந்து உலவும் இடம். இவற்றை காண கோடை காலங்களில் செல்ல வேண்டும் என்பதே வன காவலர்களின் அறிவுரை. எங்கள் கண்களில் சில காட்டு போத்துகளும், ஒரு வேகமாய் சென்ற மானும், பறவைகளுமே தென்பட்டன. 

          வீழ்ந்து கிடக்கும் மரங்களில் வளரும் ஒருவகை காளான் அதிசயிக்க வைத்தது, மீள் தன்மை கொண்ட சருகு காளான், இதை சுருட்டி, கசக்கி வைத்த போதும், பழைய நிலைக்கு வந்து விடுகிறது. அதிசயம்.
 
சருகு காளான்- Paper like Mushrooms (not Eat) 

தடி காளான் - Bulged Mushrooms (not Eat)
இருநிற தவளை (மலபார் தவளை)-Bi Colured Frog (Malabar Frog)
    
     இந்த வனப்பரப்பு முடிந்ததும், தண்ணீர் சூழ்ந்திருக்கும் அணை பரப்பிற்கு அழைத்து சென்றனர். காலை சிற்றுண்டி அங்கு தரப்பட்டது. அரை மணி நேர நடை பயணத்திற்கு ஒரு சின்ன ஓய்வு...


பயணம் தொடரும்...

நேசமுடன்
இளங்கோ கண்ணன்.


வனத்தில் உலவ, முன்பதிவு செய்து கொள்ளவேண்டிய
பெரியார் புலிகள் காப்பக இனைய தளம்
(Periyar Eco Tourism - Official Website link is below )

Periyar -Tiger-Reserve-ECO Tourism

No comments:

Post a Comment