Tuesday 14 March 2017

பாலருவி-பிரானுர் பார்டர் பரோட்டா கடை -தென்மலை- காட்டு மரங்களோடு ஒரு பயணம் ( Palaruvi- Piranur Border Protta Hotel-Thenmala Nature Tourism Ride)

         பங்குனி, சித்திரை மாதம் வருவதற்கு முன்பே வெயில் இந்த கொளுத்து கொளுத்துதே.. நம்ம செல்ல குழந்தைகளுக்கு பள்ளிக்கூட விடுமுறை வேற வரப்போகுது, என்ன செய்யலாம் என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கும், சூடான நேரத்தில் கொஞ்சம் குளிரான குளியல் போட்டுட்டே இடம் பாக்கணும் நினைக்கிறவங்களுக்கு. இந்த பதிவு பாலருவி, தென்மலை பயணம்.

     பொதுவாக மழைக்கால பருவங்களில் குற்றால அருவியில் நாமெல்லாம் குளிக்க சென்றிருப்போம், ஒரு நெடிய வரிசை கால் கடுக்க நின்று, ஒருவர் மீது ஒருவர் மோதி, போலீஸ் காரரின் லத்தி வீச்சுக்கு இடையிலும் நின்று அருவி தண்ணீர் மேலே விழுந்தும் விழாமலும், பன்னீர் தெளித்தது போல் குளித்தவர்களும் உண்டு, விட்டா  போதும் குளிச்சது னு வந்தவர்களும் உண்டு, கூட்டம் அதிகமா இருந்தா கேக்கவே வேண்டாம், எப்படியோ குளிக்கணும் னு வந்தாச்சு நல்லா .. நின்னு பழைய அருவி, மெயின் அருவி, ஐந்தருவி, எல்லா இடத்துலயும் எண்ணெய், ஷாம்பு போட்டு குளிக்கலாம் என்ற கற்பனையோடு செல்ல வேண்டாம். நண்பர்களுக்கு தெரிந்த விஷயம் தான் , இப்போது எண்ணெய், ஷாம்பூ, சீயக்காய் பயன்படுத்தி அருவியில்  குளிக்க முற்றிலும்  தடை விதிக்கப்பட்டுள்ளது, மருந்துக்கு கூட அருவி பக்கத்திலிருக்கும் கடைகளில் தேங்காயெண்ணெய், நல்லெண்ணெய் கிடைக்காது. நாம முன்னேற்பாடா தேங்காயெண்ணை வச்சிருக்கோம், தேய்ச்சிட்டு போனாலும் கஷ்டம் தான், நம்மளை குளிக்க அருவி பக்கமே விடமாட்டாங்க,, கவனம் தேவை நண்பர்களே...! .  
A view of  Paalaruvi Water Falls
         அப்போ ? எங்கதான் போலாம் .. கொஞ்சம் வேகமா சொல்லுங்க என்கிற உங்க மனதின் குரல் எனக்கு கேக்குது, போலீஸ் லத்தி வீச்சு இல்லாத, சுகமான குளியல் போட, தென்காசி, செங்கோட்டை கடந்து, கடந்து தமிழக- கேரளா எல்லையோர வனப்பகுதியில் உள்ளது, பாலருவி (Paalaruvi) என்னும் இடம், உள்ளூர் காரர்களுக்கு பரிச்சயமான இடம், குற்றாலம் அருவி குளித்து முடித்தவர்களுக்கு, புதிதாய் காட்டுக்குள்ளே சென்று, அதிகளவு மக்கள் நெருக்கமின்றி, இயற்கையை ரசித்தவாறு, இன்ப குளியல் செல்ல சிறந்த இடம், பெண்கள், குழந்தைகளுக்கு தனி பகுதி, எப்போதும் பாதுகாப்பு நிறையவே உண்டு,   
A Highway to Paalaruvi- NH-744
          
   குற்றாலம் வழியே வருபவர்கள் பிரானுர்-செங்கோட்டை-புளியறை- ஆரியங்காவு- கடந்ததும் நம்மை சாலை பாலருவி நோக்கி அழைத்து செல்லும். கேரளா வனத்துறையினர் நபர் ஒன்றுக்கு ரூபாய்.25/- வீதம் கட்டணம் வசூலித்து உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். காட்டின் மரங்களை பார்த்தும், குரங்கு கூட்டம் நம்மை அழைக்கும், அவற்றிக்கு உணவு பண்டங்கள் கொடுக்கின்றனர், சுற்றுலா பயணிகள் (வனத்தில் உலவும் நம் முன்னோர்களுக்கு ஏதும் தின்பண்டங்கள் கொடுக்க வேண்டாம் என்பது வனத்துறையின்  அறிவுரை) அதோடு  மனம் மயக்கும் புள்ளினங்களின்  ஓசையில்  மயங்கியும், சூரிய கதிர் விழாத காட்டில் பைய பைய  .. செல்ல..செல்ல பாலருவியை அடையலாம். 

Cute Monkeys in Paalaruvi Forest

நம்மை வரவேற்கும் நம் முன்னோர்கள் 
     மலையில் பிறக்கின்ற கல்லடா நதி வெள்ளம், பாறைகளில் மீது  மோதி, தெறித்து பால் போன்ற நிறத்தில் அருவி வழிவதால் பாலருவி என பெயர் பெற்றது. மதியம் 12 வெயிலின் போதும் தண்ணீர் சில்லென்று இருக்கிறது. அருவியில் குளிக்கும் சுகம். குளித்து பார்த்து உணரவும், தண்ணீரின் சுவை சொல்லில் தீராது, அருவியில் வீழும் நீரை தண்ணீர் போத்தல்களில் பிடித்து செல்கின்றனர் பலர். கேரள மற்றும் தமிழக மக்களின் நோய்களை தீர்ப்பதிலும், உடல் நலம் பேணுவதிலும் ஒரு இன்றியமையாத இடம் இப்பாலருவிக்கு நிச்சயம் உண்டு..
Beauty of Paalaruvi (Milky Falls) with Cumulus 



பாலருவியின் எழில் 

        குற்றாலம், பாலருவி சுற்றுலா என்றதும் அருவியில் குளித்து முடித்ததும், சுவையா சாப்பிட ஒரு கடை தேடுவீங்க? அப்டினா  நீங்க மறக்காம  செல்ல வேண்டியது பிரானுர் ரஹ்மத் பார்டர் பரோட்டா கடை, சுற்று வட்டத்தில் மட்டுமல்லாது உலக தமிழர்களுக்கு தெரிந்த ஒரு அடையாளம், இந்த புரோட்டா கடை, அத்தனை ருசி, சுவை, இங்கு புகழ் பெற்ற புரோட்டா மட்டுமல்ல வீச்சு பரோட்டா, முட்டை பரோட்டா, கொத்து பரோட்டா, என பல வகைகள் உண்டு, மதியம் எங்களுடைய பயணத்தில் இடம் பெற்றது நாவில் சுவை நிற்கும் நாட்டுக்கோழி பிரியாணி, மற்றும் காலத்தை வெல்லும் சுவையில் காடை பிரியாணி. இங்குள்ள உணவு வகைகள் இதனை சுவையாக திகழ காரணம் இக்கடையில் தயாரிக்கப்படும் தனிவகை மசாலாக்கள், இவர்களே பொடிகளை தயார் செய்வதால் இக்கடை சால்னா, பொரியல், அரப்பு எல்லாமே, தமிழகம் கடந்தும் மக்கள் மனதில் நிலை பெற்றுள்ளது. கடையினை கண்டுபிடிப்பது எளிது, செங்கோட்டை-பிரானுர் சாலையிலே உள்ளது. யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள். பார்டர் பரோட்டா கடை என்று பல பெயரில் கடைகள் இருந்தாலும் தனித்துவம் வாய்ந்தது "ரஹ்மத்" கடை தான். இந்த பக்கமா போனீங்கன்னா ஒரு விளாசு விளாசுங்க..!
  
Piranur (Shenkottah) -  Famous Border Parotta Hotel  Pic from Youtube page

பிரானுர் - பார்டர் பரோட்டா கடையின் உள்தோற்றம் 

Piranur (Shenkottah) -  Special Urban Chicken Biriyani & Quil Bird Biriyani


பிரானுர் - பார்டர் பரோட்டா கடையின் சுவைமிகு நாட்டுக்கோழி, காடை பிரியாணி பொட்டலங்கள் 
       பாலருவி கண்டு முடித்து, அதன் அருகே வன மகன்கள் வாழும் ஒரு இடம் உள்ளது. ரோஸ் மலை  முடிந்தால் இங்கு சென்று தென்மலை அணையின் அழகை பார்த்து  வரலாம்.. கொல்லம் -புனலூர் சாலையில் செல்லும் போது  ஒரு சிற்றுலா இடமான அம்பநாடு ஹில்ஸ் அமைந்துள்ளது இங்கும் நாம் போய்  வரலாம். நங்கள் இவ்விரு இடங்கள் பற்றி அறியாததால் அங்கு சென்று வர இயலவில்லை, நண்பர்கள் கண்டிப்பா சென்று வரவேண்டும் என்பது எம் விருப்பம். 
     
          மலை மீது பயணத்தோடு சாலையோடு துணை வரும் ரயில் தண்டவாளம் உள்ளது, தென்மலை 16 கண்ணு பாலம்  தற்போது புதுப்பொலிவு பெற்று திகழ்கிறது, அதையும் ரசித்து விட்டு, அங்கு சில தம்மிகளை எடுத்துவிட்டு, பகிரி, முகப்புத்தகத்தில்  பதிவேற்றம் செய்து மகிழலாம்.

Thenmala (Aryankavu) Railway Bridge

a View of Thenmala Water Reservoir 

In front of the Reservoir

Thenmala Dam View
தென்மலை அணையின் அழகு காட்சி  

       இவ்வழியில் அடுத்த சுற்றுலா இடம் தென்மலை அணை. இங்கு அணைக்காட்சி, பூங்கா மற்றும்   இந்தியாவின் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட  சூழல் சுற்றுலா (Eco Tourism) திட்டம்,  சுற்றுலா பயணிகள் காட்டுயிர் சோலைகள் கண்டுவரும் பயண திட்டம் போன்றவை  உள்ளன . இயற்கையோடும், வனங்களை பார்வையிடும், மனதிற்கு ஒரு புது பொலிவு தரும் விதமாய் இப்பயணம் அமையும் என்பது எம் விருப்பம்.. உங்கள் விருப்பம் அது தானே..! 

பயணம் தொடரும்....

நேசமுடன் 
இளங்கோ கண்ணன். 


சில முக்கிய குறிப்புகள்
via to Paalaruvi 

from Madurai (Tamil Nadu)  (by Road-NH-744)
Madurai-Thirumangalam-T.Kallupatti-Srivilliputhur-Puliyankudi- Ilanji-Shenkottah-Puliyarai-Aryankavu- Palaruvi (Kerala)

Nearest Railway Station : Shenkottah

1. பாலருவி சுற்றுலா செல்ல நீங்கள் முடிவெடுத்ததும் அருவியில் தண்ணீர் விழுகிறதா?  என்று விசாரித்து செல்வது முக்கியம் .
கேரளா பாலருவி வனத்துறை இணையம் சொடுக்குக
(for more Informations Click Below Links)

Kerala-Palaruvi- Water Falls

2. தென்மலை அருவி- சூழல் சுற்றுலா விவரங்கள்
Thenmala- Tourist Places

Thenmala -Eco Tourism

Thenmala - Attractions

3. பிரானுர் ரஹ்மத் பார்டர் பரோட்டா கடை காணொலி காட்சி.
Piranur- Rahmath Border Parotta



1 comment:

  1. பதிவு அருமை நண்பரே.. பார்டர் கடையில் நானும் சாப்பிட்டேன். கூட்டமோ விசேஷ வீட்டுக் கூட்டம்.. வந்தவர்கள் எல்லாம் புரோட்டா கிடைத்தால் போதும் என்று தான் இருந்தனர். ருசியோ அமர்க்களம்.. எனது அனுபவம் இங்கே http://rayilpayanam.blogspot.in/2017/09/blog-post_2.html

    ReplyDelete