Monday 13 March 2017

பெரியார் சூழல் சுற்றுலா (காட்டுக்குள்ளே ஒரு பயணம்)- Periyar Eco-Tourism- Thekkady-02

       (சென்ற பதிவின் தொடர்ச்சி..)
        தேக்கடி புலிகள் காப்பகத்தின் குறுங்காடு முடிவடையும் இடத்தில் முல்லை பெரியாறு அணையின் ஒரு பகுதி எம்மை வரவேற்றது. அங்கு சென்ற போது தான் கண்டோம்.. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களின் பல பாடல் காட்சிகள் பதிவு செய்யப்பட்ட இடம், உயிரே படத்தின் நெஞ்சினிலே பாடலின் சில காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டவையே..மேலும் இந்த அணை காட்சி எதாவது சினிமா பாடலில் பார்த்தால் நீங்கள் மகிழ்ச்சி கொள்வீர்கள்.. எங்களை போலவே...

      வனத்தில் நின்ற மரங்களை விட, அணை முகத்தில் நின்ற பட்ட மரங்களின் அழகே தனி .. நீருக்குள் மூழ்கி, இலை, கிளைகளை, மறந்து ஒற்றையாய் நீரில் நின்று தவம் புரியும் சித்தர்கள் போலே  தெரிந்தன.. இம்மரங்கள். அதை ஒளிப்படமாய் பதிவு செய்தோம் ..

அணையின் ஒரு எழில் தோற்றம் - A Beautiful View of Periyar Tiger Reserve 

அணையின் ஒரு எழில் தோற்றம்A Beautiful View of Periyar Tiger Reserve 

நீரில் தவம் செய்யும் ஒற்றைக்கால் மரங்கள்- A Beautiful trees like Penance Saints 

நீரில் தவம் செய்யும் ஒற்றைக்கால் மரங்கள் - A Beautiful trees like Penance Saints 



மூங்கில் மரத்தெப்பம்  - A Bamboo Raft

       இவ்வன விலங்கு காப்பகத்தில் நாங்கள் தேர்ந்தெடுத்த பயணம் ஆதிவாசி மக்கள் தங்களது தொன்மை காலத்தில் நதியில் பயணித்த மூங்கில் தோணி, காட்டில் எங்கேயும் காண கிடைக்கும் மூங்கில் மரங்களை ஓன்றிணைத்து கட்டு மரமாய் செய்து, சிறு துடுப்பின் உதவியால்  ஆற்றை கடக்கவும், இதில் அமர்ந்து மீன் பிடிக்கவும் பயன்படுத்தியது . தோணியில் பயணிக்க வன காவலர்கள் தயாரானதும். எமக்கு பாதுகாப்பு உடைகள் கொடுத்து அணிய சொன்னார்கள், உடைகள் பொருத்தி முடிந்ததும், பயணம். தொடர்ந்தது. வன காவலர்களிடம் நாங்களும் துடுப்பு போடலாமா? என கேட்டதும், சரி என சொல்லி, ஆளுக்கொரு துடுப்புகளை கொடுத்தார்கள். துடுப்பின்  விசைக்கேற்ப மூங்கில் கட்டுமரம் வெள்ளத்தை தழுவி சென்றது, எல்லாருக்கும் ஒரு பெஞ்ச் போன்ற இருக்கை  அமைக்கப்பட்டிருந்தது. அதனால் தண்ணீர் நம் மீது பட வாய்ப்பில்லை. நீரை நாமும் கையில் கோரி குடித்தும், சிதறியும் விளையாடலாம், கட்டுமரத்தோடு பயணிக்கையில் நம் உதடு முணுமுணுக்கும் பாடலை பாடியும், சந்தோசத்தோடு பயணிக்கலாம், இவ்வேளையில், மான், யானைகூட்டம், வனவிலங்குகள் நீர் அருந்த வரும் காட்சியையும் காணலாம்.





மூங்கில் மரத்தெப்பம்A Bamboo Raft Small 



மூங்கில் மரத்தெப்ப சவாரி-  with Forest Rangers

பைக் ரைடர் மட்டுமல்ல இப்போ  படகு ரைடர் - not a Bike Rider now Raft Rider

     ஒரு கால் மணிக்கூர்  கட்டு மரத்தோடு பயணம் செய்து முடித்தும், நீர் வற்றி கிடந்த இடத்தில் கட்டுமரம் நின்றது. உள்ளே கொஞ்சம் நடக்கலாம் என்று அழைத்து சென்றனர். புல்வெளி மேடுகளை தொடர்ந்த ஆற்று நீர்தேங்கி கிடந்த இடத்தில் வனமகன்கள், மற்றும் மகள்கள்   தூண்டில் வைத்து அன்றைய சமையலுக்கு தேவையான மீன்களை பிடித்து கொண்டிருந்தனர். இம்மக்களின் அன்றாட உணவில் கிழங்கு , மீன் கண்டிப்பாய் இடம்பெறும்.
   
         தூண்டில் வைத்து மீன் பிடிக்க பொறுமை நிறைய அவசியம் என்பதை ஆற்றிலோ, குளத்திலோ, கிணற்றிலோ, மீன் பிடித்து பார்த்த நண்பர்கள் அறிவர். இத்தொன்ம குடிகள் மீன் பிடிக்கும் முறை சற்றே புதிது. நீண்ட குச்சி கம்புகளில் (நொச்சி, பூவரசு) நுனியில் கங்கூஸ் கட்டி நடுவில் மிதக்கும் கட்டையோடு முடிவில் மீன் கடிக்கும் கொழு, அதில் மீன் கடிக்க கொழுவில் மண்புழு கொருத்து தண்ணீருக்குள் வீசி புழுவை மீன் எப்போது கடிக்கும், என்று ஏங்கி பார்த்து,   கம்பை கையோடு பிடித்துக்கொண்டே இருப்போம் நாம் , கை  அசையும் போது  நீருக்குள் இருக்கும் கொழுவும் அசையும் அதனால் மீன் கடிக்காது, மீனை பிடிக்கவும் முடியாது. இதுல கவனிக்கணும் இம்மக்களோ தூண்டில் கம்பு   அசையாமல் இருப்பதற்கு ஒற்றை கவுளி கம்பால் இரு புறமும் பிடிமானம் வைத்துள்ளனர், அதனால், கம்பும் அசைவதில்லை, மீனும் எளிதில் சிக்கி கொள்ளும் (ஒளிப்படம் கீழே), அணையில் அதிகம் மீன்கள் இருந்தாலும், தூண்டில் முள்ளில் சிக்கும் மீனினங்கள் (சிலேபி, விரால் , கரிமீன்) சிலவே. இதை எழுதுங்காலை அண்ணன் கவிஞர். கபிலனின் வரி ஒன்று ஓடியது,

நூறு முட்கள் இருந்தும்
ஒரு தூண்டில் முள்ளில்
சிக்கி கொள்கிறதே - மீன்

இதே கவிதை வரியை யாரோ... நீ.... பிஞ்சு நிலவா ?.. என்ற திரைப்பாடலிலும் சிதையாமல்   வைத்திருந்தார், மெல்லிய இசையால் வித்யாசாகர் அழகூட்ட, பாடகர் ஹரிஹரனின் தேன் குரலில் செவியில் இன்றும் இனித்துக்கொண்டே இருக்கின்றது.
முல்லை பெரியாறு அணையில் - Another View of the Lake

பொறுமையோடு மீனை பிடிக்கும் முயற்சி- Fish Catching a New Method from the Tribal Peoples

பொறுமையோடு மீனை பிடிக்கும் முயற்சி-  ish Catching a New Method from the Tribal Peoples

மீன் பிடிக்கும் தொன்ம குடியினர் 

       இந்த பயணத்தில், எம்மோடு பயணம் செய்த கேரளா வனத்துறையினர், இந்த தோணி பயணத்தை சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்தனர், அணையில் சில இடங்களில் தண்ணீரில் மூங்கில் மரம் சிக்கிக்கொண்ட போது அதை சரி செய்து, பயணத்தை பாதுகாப்பாக முடித்து வைத்தனர்.. வன ஜீவன்களை காண முடியவில்லை என்ற ஒரு குறையை தவிர..!
 
      மூங்கில் மர பயணம் மதியம் 12.30  மணியளவில் நிறைவுற்றது, பின்னர் காட்டு வழி பாதையோடு அழைத்து வந்தனர். இவ்வழி  ஆளுயர புற்கள் நிறைந்த மற்றொரு வழி இங்கும் வனஜீவன்கள் இல்லை, பறவைகளின் பாட்டொலி கேட்டு, இறந்து கிடந்த எருது கொம்பில் ஒரு ஒளிப்படம் எடுத்து. வன காவலர்களுக்கும் , சக பயணியார்க்கும் நன்றி தெரிவித்து மகிழ்வோடு  விடை பெற்றோம்..

எங்கள் குழுவினர் - Our Team


இறந்து கிடந்த ஒரு காட்டெருமை கொம்பின் அருகே- A Bison's Horn 

பயணம் தொடரும்...

நேசமுடன்
இளங்கோ கண்ணன்


வனத்தில் உலவ, முன்பதிவு செய்து கொள்ளவேண்டிய
பெரியார் புலிகள் காப்பக இனைய தளம்
(Periyar Eco Tourism - Official Website link is below )


Periyar -Tiger-Reserve-ECO Tourism

1 comment:

  1. அமைதியின் உறைவிடம்.பசுமை பேசும் இயற்கை. 👍

    ReplyDelete