Friday 27 January 2017

பெரியார் புலிகள் காப்பகம், தேக்கடி (கேரளா)- Periyar Tiger Reserve Park, Thekkady, Kerala

பெரியார் புலிகள் காப்பகம், தேக்கடி (கேரளா)
           குமுளி - தேக்கடி நகரில் அமைந்துள்ளது, பெரியார் புலிகள் காப்பகம். தேக்கடி சாலையில் செல்கையில் புலிகள் காப்பக நுழைவாயில் நம்மை வரவேற்கிறது, நுழைவு கட்டணம்  (ரூபாய்-60) செலுத்தியபின், அனுமதிக்கிறார்கள். இந்த வனப்பகுதி முழுவதும் 925 ச.கிமீ ஆகும், இது  கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நுழைவு வாயில் இருந்து ஏகதேசம் ஒரு மைல் தூரம், வழியெங்கும் வன் மரங்களின் காட்சி மற்றும் தணுப்பு, மனம் மயக்கும் குயில்களின் பாடல்,  உள்ளத்திற்கு பரவசம் தரும் பேரறியா  பறவைகளின் கொஞ்சு மொழிகள்,  என வழியெங்கும் ஒரு உற்சாகம் நமக்கு ஏற்படுகிறது




       
        பெரியார்   சூழியல் பூங்காவில் பலவகைப்பட்ட மரங்கள், பூ பூக்கும் செடிகள் கொடிகள் உள்ளன. மரங்களில் பெயர்கள் மூன்று வகையாக எழுதப்பட்டுள்ளன  மலையாளம், ஆங்கிலம் மற்றும் தாவரவியல் பெயர், அத்தோடு மட்டுமின்றி  அதன் மருத்துவ குணங்களும் குறிப்படப்பட்டுள்ளன. வீழ்ந்து கிடைக்கும் மரங்கள் நம்மை ஒளிப்படம் எடுக்க அழைக்கின்றன. அவ்வாறு   ஒளிப்படம் எடுக்கையில் கவனம் தேவை. ஏனெனில் உங்கள் உடலோடு ஒட்டி உதிரம் குடிப்பதற்கு  அதிக அளவில் அட்டைகள் இங்கு உள்ளன. Rider இளங்கோவின் பாதத்தில் ஏறிய அட்டையை கண்டிபிடிக்க 2 மணிநேரம் ஆனது. இந்த அட்டைகளை பயன்படுத்தி லீச் தெரபி செய்யப்படுவதாக எங்கோ படித்த செய்தி மனதில் ஓடியது. இவ்வகை அட்டைகள் சிறிய கரும் நூலிழை போன்று இருப்பதால் அடையாளம் கண்டுகொள்வது சற்றே கடினம், நம் உடலில் கடிப்பதும் தெரியாது, இரத்தம் உறிஞ்சுவதை  நம் தேகம் அறியாது, (அந்நியன் படத்தில் பார்த்த காட்சி நினைவுக்கு வருகிறதா? யெஸ்.. கிருமி போஜனம்), எனவே நண்பர்களே கொஞ்சம் கவனம். உங்கள் குழந்தைகளை பத்திரமாய் பார்க்க வேண்டுமே அதற்காக..

     இங்கு செல்லும் பொது காலுறைகள் (shocks), ஷூ  அணிந்து செல்லலாம். மூக்குப்பொடி(கிடைத்தால்) வாங்கி வைத்து கொள்ளலாம். இல்லை என்றால் கெட்ட  ரத்தத்தை குடித்து அதுவும் (அட்டை) உயிர் வாழட்டுமே என்று கருதி, குருதி கொடையும் வழங்கலாம். உங்கள் முடிவு.  
  





        இப்புலிகள் காப்பகத்தின்  தனிச்சிறப்பு "போட்டிங் (Boating)" என்று சொல்லப்படும் படகு சவாரி, காலை 6-8 மணி, மாலை 3-5 மணி  சவாரி பயணிக்க வேண்டும். (டிக்கெட் முன்பதிவை நேரத்தே செய்து கொள்ளவேண்டும், அந்நேரத்தில் டிக்கெட் வாங்கும் இடத்தில் கூட்டம் அலை மோதும்).  இந்த சமயத்தில் தான் மான், மிளா, ஆனைக்  கூட்டங்கள், காட்டெருமை, புலி போன்ற வன ஜீவன்கள்  தண்ணீர் குடிக்க அணை பகுதிக்குள் வரும், அவற்றை கண்டு மகிழலாம் உங்கள் நேரத்திற்கு ஒன்றும் காணாமல் காட்டு மரங்களையும், இயற்கை அழகினையும்  கண்டு வரலாம், எந்நேரமும்  கணினி, செல்போன் , வாட்ஸப் , ஒரே வேலை, ஒரே இடம், அலைச்சல், டென்ஷன்   என்று பார்த்து பழகிய கண்களுக்கு ஒரு மாற்றாய் இந்த சவாரி அமையும்.

படகு சவாரி பயணத்தொகை மற்றும் விவரங்கள் தகவல் மையத்தில் விரிவாக வைக்கப்பட்டுளள்ன. மேலதிக விபரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை கிளிக்குக.
Periyar Tiger Reserve-Website





       மழை பெய்து முடிந்த காலங்களில் (ஜூன், ஜூலை, மற்றும் அக்டோபர் நவம்பர் மாதங்கள் ) பெரியாறு அணையில் நீர் நிரம்பி வழிகிறது, இக்  காலங்களில்  நம் படகு சவாரி மேற்கொள்ளும்போது வன விலங்குகளை  காண்பதரிது, காட்டு விலங்குகளுக்கு தேவையான நீர் வனத்திற்குள் கிடைப்பதால் அவை, ஆறு தேடி வருவதில்லை. வறட்சி காலத்தில் தான் ஆற்றை நோக்கி வருகின்றன, எனவே தேக்கடி பயணத்தை சரியான திட்டமிடலோடு துவங்குதல் நலம்.



       பசுமை சூழல் , சுத்தமான காற்று, மனதிற்கு அமைதி என இப்பூங்கா திகழ்வதால், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர், பார்த்து ரசிக்க குரங்கு கூட்டங்கள், அதிலும் மனித முகத்தோற்றத்தில் காட்சியளிக்கும்,  நீலகிரி லாங்கூர் வகை குரங்குகளை சாதாரணமாக காண இயலும், நீளமான புசு புசு வால்  கொண்ட மலபார் அணில் மரத்திற்கு மரம் சாடுவது பார்க்க ரம்மியமானது, இது போல் பல அனுபவங்களை காணவே  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட அதிகளவில்  வருகின்றனர். அவர்கள் காட்டுக்குள் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து, வன வாழ்வை அனுபவிக்க வருடா வருடம் வந்து செல்கின்றனர். (இதுபோல் பல பயண திட்டங்கள் உள்ளன உங்கள் செலவழிக்கும் திறன் பார்த்து நீங்கள் முடிவு செய்யலாம்).  பல ஒளிப்படங்களை சுட்டுத்தள்ளுகின்றனர்.
     
        ஆனா.. நம்ம ஆட்கள் எல்லாத்துலயும் கஞ்சத்தனம் பிடிக்கிறாங்க. நாங்கள் சந்தித்த  ஒரு குடும்பத்தில் ஒருவர் "ஏய். கேமெராவுல ஒரு போட்டோக்கு மேல எடுக்க வேணாம்பா.." என்று இறுகிய முகத்தோடு எங்களிடம் கூறியது ஒரு வியப்பை தந்தது, எப்போதும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிற பெண்மணிகளுக்கு, பல வருஷமா ஒரே தெருவுல நடக்குற பெரியவங்களுக்கு , ஒரே பள்ளிக்கூடத்துல படிக்கிற நம்ம செல்ல குழந்தைகளுக்கு , ஒரே கடை, ஒரே வேலை பாக்ற குடும்ப உறுப்பினர்களுக்கு,  மனசுக்கு ஒரு புத்துணர்ச்சியும், உடலுக்கு ஒரு தெம்பும் தருவதற்காகவே நாம் ஒரு ஜாலி ட்ரிப் போவோம், அங்கேயும் இப்படி ஆயிரமாயிரம் காரணம் சொன்னா .. எப்படி அந்த டூர் இருக்கும் என்பதை நினைத்து பார்க்க ஒரு வித பரிதாபம் ஏற்பட்டது. அதனால மகிழ்ச்சியோடு போங்க.. பல போட்டோ எடுங்க.. குழந்தைகளுக்கு நிறைய சொல்லிகுடுங்க..ஒரு புது அனுபவம் வாங்கி வாங்க..!

பெரியார் புலிகள் பூங்காவில் நாங்கள் சுட்ட சில  ஒளிப்படங்கள்







     பூங்காவின் மய்ய பகுதியில் ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை வன வாழ்க்கையின் சாரத்தை நமக்கு எடுத்துரைப்பது போன்று திகழ்கிறது. ஒரு கொடியில் பல வன விலங்குகள் சங்கிலி தொடர் போன்று பிணைந்திருப்பது இதன் சிறப்பு. நடு நாயகமாய் வீற்றிருக்கும் வன்புலி  பார்க்க பேராவல் தருகிறது. எல்லோருக்கும் ஒளிப்படம் கொடுக்கும் இடமாக அமைகிறது.
   
          இப்பூங்காவில் சுற்றுலா பயணிகள் தங்கும் வசதிக்காக கேரளா அரசு வனத்துறை சார்பில் விடுதிகள் உள்ளன (குறைவான கட்டணம்) முன்பதிவு அவசியம். அத்தோடு மட்டுமின்றி தினசரி நாளிதழ் மற்றும் வாராந்தரி  படிக்க (தமிழில் தினத்தந்தி மட்டும், மற்றவை மலையாளம், ஆங்கிலம் ) அழகான ஒரு படிப்பகம், உடன் தொலைக்காட்சி, குடிநீர்  வசதியுடன்  இங்கு நுழைவு கட்டணம் இல்லை இலவச சேவை. மேலும் பயணிகளின் வசதிக்காக கேரளா உணவு விடுதி (கேரளா பக்ஷண சாலா) உள்ளது, இங்கு கேரளா பாரம்பரிய, புட்டு கடலை கறி, இட்லி, பத்திரி, தோசை, வடை வகைகள், மற்றும் சூடான தேக்கடி தேநீர், கிடைக்கிறது, டோக்கன் வாங்கி சாப்பிட செல்லலாம்
.




காலை நேரம் மட்டுமின்றி எந்நேரமும் ஒரு பசுமையான சூழலில் மனம் மகிழ நீங்கள் தேக்கடி புலிகள் பூங்காவை தேர்ந்தெடுத்து செல்லலாம்.  


பயணம் தொடரும்....

இளங்கோ கண்ணன்.

3 comments: