Friday 13 January 2017

சுசீந்திரம் கோவில் தேரோட்டம்- நாஞ்சில் மக்களின் கொண்டாட்டம் (Suseenthiram Arulmigu Thanumalayan Temple Chariot (Ratha) Festival)



மக்கள் வெள்ளத்தில் தேரோட்டம்-Suchindram Chariot Festival

கன்னியாகுமரி மாவட்ட விழாக்களில் முக்கியத்துவம்  வாய்ந்தது, சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோவில் தேரோட்டம் ஆகும். கன்னியாகுமரி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், குமரியின் வற்றாத ஜீவ நதியில் ஒன்றான பழையாற்றங்கரையில்  இக்கோவில் அமைந்துள்ளது. திராவிட பாணியில் சோழர்களின் கலை வண்ணத்தில் இக்கோவிலின் ராஜ கோபுரம் காணப்படுகிறது. 
     
        இக்கோவிலில் குடியிருக்கும் சுவாமியின் பெயர் தாணுமாலயன்.              தாணு-சிவன், மால் -திருமால், அயன்- ப்ரம்மா மூன்று கடவுளும் ஒன்று சேர்ந்த லிங்க வடிவமாய் காட்சி தருவது இக்கோவிலின் சிறப்பு. மேலும் ராமபக்தன், சொல்லின் செல்வன் அனுமனின் சிலையும், கோயிலில் உள்ளது. கோவில் பற்றிய சிறப்பு பதிவு வரும் பதிவுகளில் இடம்பெறும். இந்த பதிவு அண்மையில் (10-01-2017) நடைபெற்ற மார்கழி பெருந்திருவிழாவின் கடைசி நாள் நிகழ்வான திருத்தேரோட்டம் பற்றியது..


கோவில் முகப்பு வாசல் முன்னே- in front of Suchindram temple  

        கோதை நாச்சியார், ஆண்டாளுக்கு பிடித்த மாதமான மார்கழியில், சுசீந்திரம் கோவில் திருவிழா நடைபெறுகிறது, கோவில் கொடியேறி பத்து நாட்களுக்கு விழா கொண்டாட்டம், திருவிழாவில் முக்கிய நிகழ்வு மக்கள்மார் சந்திப்பு ஆகும். சிவனின் மைந்தர்களான விநாயகன்,  குகன் (முருகன்) தனது தந்தையை சந்திக்க வரும் நிகழ்வே மக்கள்மார் சந்திப்பு. பத்தாம் நாள் திருவிழாவில் தேரோட்டமும், தேரோட்ட தினத்தன்று இரவில் நிகழும் சப்தாவர்ணமும் சிறப்பு நிகழ்ச்சிகளாகும். "சத்தாவர்ணம் பாத்தா செத்தாலும் மோட்சம் கிட்டும்" என்பது இங்கு வழங்கும் பழஞ்சொல். தேரோட்ட தினத்தன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் வழங்கப்படுகிறது.

 தெருக்களில் தேரோட்டம்-Chariot in Suchindrm Street

திருத்தேரின் பிரம்மாண்டம் - a View of Big Chariot 

 Suchindram Sri Thanumalayan Chariot 

          சுசீந்திரம் தேரோட்டம் கொடியேறியதுமே, நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள நாஞ்சில் நாட்டு கிராமங்களும் உற்சாகம் கொள்கின்றன, வண்ண வண்ண நிறங்களில் மனம் மயக்கும் கடைகள், சிறுவர்களுக்கான ராட்டினம், விளயாட்டு பொம்மை கடைகள், பதின்ம சிறுமியர் விரும்பும் வளையல், பொட்டு, பாசி கடைகள், மனம் விரும்பும் மலை ஆரஞ்சு, கடித்து மகிழ கரும்பு, குடித்து மகிழ இலவச பானகாரம் (பானகம்), மோர்.  குழந்தைகள் முதல் பெரியவர் வரை ருசித்து மகிழும், இனிப்புசுவையை எக்கச்சக்கமாய் அள்ளி வழங்கும் தேன்குழல்,  மிட்டாய் கடைகள், சம்பங்கி, கொழுந்து வாசனை கமழும் தெருக்கள் , பத்து நாட்களும் இசையும், தமிழும் கோவிலை சுற்றியே கிடக்கும், குளிரை பொருட்படுத்தாமல் முழு விழாவை  ரசிக்கும் மக்கள் என விழாக்கோலம் பூணும் சுசீந்திரம் நகர். 


தேர் அசைந்து வருகிறது- A Crowd of People and Chariot 



வெள்ளி அன்ன வாகனத்தில் சுவாமி -Silver Swan Palankeen with Swami 
             
              நாஞ்சில் நாடு என்றதுமே நம் நினைவுக்கு முதலில் வருபவர் தமிழுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஆளுமை எங்கள் ஆசான். திரு. நாஞ்சில் நாடன் அவர்கள். அவர் சுசீந்திரம் பற்றியும், அதனை மையப்படுத்திய பல கதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளார். அவரின் புகழ் பெற்ற சிறுகதையான கிழிசல் தமிழ்நாடு பள்ளி பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது பக்கம் எண் 232-ல், படித்து சுசீந்திரம் விழாவை நேரில் கண்டு மகிழுங்கள்..
நாஞ்சில் நாடன் அவர்களின் கிழிசல் சிறுகதை படிக்க

எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் -Famous Tamil Writer. Mr. Nanjil Nadan 

நாஞ்சில் நாடன் எழுத்துகளை வாசிக்க.. நேசிக்க..இணைய முகவரி 
வெள்ளிக்குதிரை வாகனத்தில்- Silver Horse Palankeen with Swami 

              தேரோட்ட நிகழ்வை குமரி மாவட்ட பண்பலை வானொலியான (Kumari FM 101) நேரலை செய்தது, பண்பலை அறிவிப்பாளர் திரு.சுகுமார், பலத்த கூட்ட நெரிசல்களுக்கிடையேயும், கோவில் சிறப்பையும், தேர் திருவீதியில் செல்லும் அழகினையும்,  விழாவை காண வந்திருந்த பக்தர்களிடமும், குறிப்பாக ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணிகளிடமும்  விழாவை பற்றி பேட்டி எடுத்து  கலகலப்பாக்கினார்.

குமரி பண்பலை அறிவிப்பாளர் அண்ணன் சுகுமார்- Kumari FM 101-Announcer Mr. Sukumar's Live Commentary on Chariot Festival at Suchindram

மக்கள் வெள்ளத்தோடு நேரலை செய்த போது -Kumari FM 101-Announcer Mr. Sukumar's Live  Running Commentary on Chariot Festival at Suchindram 

தேரோட்டத்தை காண வந்திருந்த ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணிகளிடம் பேட்டி கண்ட தருணம்- Kumari FM 101-Announcer Mr. Sukumar's Live few words from The German Tourists 

தேர் செல்லும் திருவீதி- Chariot in Suchindram Streets 

          தேர்திருவிழாவை புது மணம் முடித்தவர்கள் காண வேண்டும் என்பது இங்குள்ள வழக்கு, அதிகளவில் புதுமண தம்பதிகள் அதிகம் வந்திருந்தனர்.                                
 சுசீந்திரம் -கன்னியாகுமரி புதிய  பாலம் கட்டி முடித்த சாலையோரத்தில், மண் பானையில் வைத்திருந்த கூழ் கடையில், தம்பிகளோடு கம்மங் கூழ் குடித்து விட்டு, டிசம்பர் 26-2014 ஆழிப்பேரலை தினத்தில் நடந்த தேரோட்டத்தை பற்றி பேசிக்கொண்டே புறப்பட தயாரானோம் ..

           


சத்தான ருசியான கம்மங் கூழ் - Millet Pooridge

ருசியான கம்மங் கூழுடன் தம்மி - Selfie with Millet Pooridge

ருசியான கம்மங் கூழ் குடித்து, அருமை தம்பிகளோடு ஒரு  தம்மி- Selfie with Millet Pooridge

திரும்பவும் இரவு நடைபெற்ற சத்தா வர்ண நிகழ்வை பார்க்க வந்தபோது..
மஞ்சள் கிரேந்தி பூ அலங்கார அழகில்- Beauty of Yellow Flowers with Swami

சுவாமிகளின் அருள் வழங்கும் சத்தாவர்ண காட்சி கைபேசி ஒளிவெள்ளத்தில் - Sapthavarna Event in Suchindram Chariot Festival 
         சப்தாவர்ணம், ராத்திரி நடைபெறும் முக்கிய நிகழ்வாகும், தாணுமாலயனை (சிவனை) சந்திக்க வந்திருந்த மக்கள்மார் தத்தம் கோவிலுக்கு பிரிந்து செல்லும் நிகழ்ச்சி ஆகும், நாஞ்சில் நாட்டின் புகழ் மிக்க  இருபதுக்கும் மேற்பட்ட  நாதஸ்வர, தவில் கலைஞர்கள் இசை முழக்க, பல்லக்கில் வீதி உலா வரும் சுவாமிகள் அந்த இசையில் லயித்து மயங்குவர்.  இறுதியில் வாசிக்கப்படும் கப்பல் மேளம் ரசிக்கத்தக்கது, அதை கேட்டே பல நாள் மகிழலாம், பல்லக்கு தூக்கும் கலைஞர்களின் கை வண்ணம், கால் வண்ணத்தில் தாணுமாலயன் தட்டழியும் நிகழ்வு, பார்ப்போர் உள்ளத்தை கலங்க வைத்தது, கலங்கிய கண்களோடு  மக்கள் கூட்டமும் கலைந்தது. 


பயணம் தொடரும்...


How to Reach Suchindram

 through fly- Nearest Airport- Thiruvananthapuram International Airport, Thiruvananthapuam, Kerala

Nearest Railway Station- Nagercoil & Kanyakumari Railway Station

Through Buses - From Thiruvanathapuram- Nagercoil (Vadasery) or Anna Bus Stand Meenakshipuram, Nagercoil - Suchindram (Bus Route from Vadasery-01,02,03 (A, B, C, D, E, F, G, H, 1K, 2K), FP-303, 505.

Nearest Tourist Spots: 

1. Land End Kanyakumari (Cape Comorin),
2. Bharath Matha Temple, Vivekanandhapuram
3. Nagercoil Nagaraja Temple ( Capital of Kanyakumari District)
4. Sotthavilai Beach
5. Manakudi Birds Sanctuary 
6. Ayya Vaikunda Swamy Temple, Swamithoppu
7. Puthalam, Birds Park
8. Theroor Paddy Fields ( Birth Place of Kavi Mani. Mr. Desika Vinayagam Pillai)


சுசீந்திரம் வந்தடையும் வழிகள் 
வான் வழி - திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம் 
ரயில் வழி- நாகர்கோவில் தொடரி நிலையம் (ம) கன்னியாகுமரி தொடரி நிறுத்தம்.

தரை வழி - மதுரை, திருநெல்வேலி வழியாக பயணிப்பவர்கள், வடசேரி (நாகர்கோயில்) புற நகர் பேருந்து நிலையம் வந்து, கன்னியாகுமரி செல்லும் பேருந்தில் (தடம் எண் -01,02,03,A,B,C,D,E,F,G,H,1k,2K) 303, 505,  பயணிக்கையில், சுசீந்திரம் வந்தடையலாம் அல்லது உள்ளூர் பேருந்து நிலையமான அண்ணா பேருந்து நிலையம் (குளத்து பஸ் ஸ்டாண்ட்), சென்று 30, 33C, 33, மற்றும் சிற்றுந்துகளில் பயணிக்கலாம்..

சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் 
1. கன்னியாகுமரி 
2. விவேகானந்தபுரம் பாரத மாதா கோவில், கேந்திரம் 
3. சொத்தவிளை கடற்கரை 
4. மணக்குடி பறவைகள் குடில் 
5. அய்யா வைகுண்ட சுவாமி தலைமை பதி, சுவாமிதோப்பு 
6. அருள்மிகு நாகராஜா கோவில், நாகர்கோவில் 
7. புத்தளம், உப்பளம், பறவைகள் குடில் 
8. கவி மணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த  தேரூர் மற்றும் அங்கு கண்ணுக்கு அழகை தரும் நெல் வயல்கள். 





நேசமுடன் 
இளங்கோ கண்ணன்.

1 comment: