Thursday 5 January 2017

தேக்கடி பருந்தும்பாறை (பருந்து பாரா )- Thekkady-Parunthumpara (Eagle Hill)

Thekkady-Parunthumpara Trip

                கேரளாவின், குமுளி  நகரின் மண்  மணம் எம்மை வரவேற்றது, ஆமாங்க.. சில் லென்ற மழை தூற்றல்..  தமிழும், மலையாளமும் கலந்து புழங்கும் இடம், கடைகளின்  பெயர் பலகைகள் இரு மொழிகளிலும் இருந்தன. அதிக அளவில் ஏலம், கிராம்பு, நல்ல மிளகு என்ற குறுமிளகு, திப்பிலி, கருவாப் பட்டை, தக்கோலம், ஜாதிக்காய், காப்பி, போன்ற நறுமணப் பொருள்கள் கிடைக்கும் கடைகள், குறிப்பாக மணம் வீசும் தேயிலை, அதிலும் பல ரகங்கள் (கிறீன் டீ, லெமன் யெல்லோ டீ, டயட் டீ) ஏலக்காய் மணத்துடன் திகழும் தேயிலை வாசம்  நம்மை கிறக்குகிறது. அது மட்டுமில்லாமல்  சேரநாட்டு  ஸ்பெஷல், தேங்காய் எண்ணெயில் பொரித்து எடுக்கும்,  எத்தன் வாழைக்காய் வத்தல் ( சிப்ஸ் ) கடைகளும் நிறைய உள்ளன... 

                 கேரளாவில் பொதுவாக, எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமென்ற  வழி கேட்பது சிரமம் மிகுந்தது, சில மலையாளத்து  சேட்டன் மார்கள் தமக்கு தெரியாது என்று மறுமொழிவதும், சில பேர் நம்மிடத்து  தவறான  வழி சொல்லி  நம்மை பயணிக்க சொல்வது, சில வேளைகளில் சுகம், சில நேரம் எரிச்சல். எனவே கொஞ்சம் கவனத்துடன் வழி கேட்பது நல்லது, நம்ம கூகிள் மேப் சில வேளைகளில்  தவறான வழியை காட்டும் கவனம் தேவை. எமக்கு சில தமிழ் நண்பர்கள் உதவினர்.. அவர்கள் உதவியோடு எமக்கான ஹோட்டலை ( கிறீன் லீப் பெரியார்  Green Leaf Periyar- Home Stay என்ற ஹோம் ஸ்டே, கோ ஐபி போ தேடி கொடுத்தது) அடைந்தோம்..

தேக்கடி,  நகர காட்சி. An Evening Scenery in Thekkadi Junction, Kerala

                  பாலசுக்குஒரு மணி நேர ஓய்வு கொடுத்துவிட்டு,  பெட்ரோல்  நிரப்பினோம். விடுதி நண்பரிடம் கேட்டு விட்டு, தேக்கடியிலிருந்து 53 கிமீ தொலைவில் உள்ள அழகிய இடமான  பருந்தும்பாறை (பருந்து பாரா ) நோக்கி பறந்தோம்.  பயணிக்கும் வழிகள் எங்கும் மலை மேல் நிற்கும் மரங்கள் நம்மை வரவேற்கின்றது,  தேக்கடி-பெரியார்-வண்டிப்பெரியார்- இந்த ஊர்களை கடந்து வந்தால் பருந்தும் பாறைக்கு செல்ல வழி கிடைக்கும்.. பச்சை பசுமை.. வெண்  மஞ்சு பொதியல் நிறைந்து கிடைக்கும் தேயிலை தோட்டங்கள்.. மாலை 4 மணிக்கே சூரியன் சென்ற இடம் தெரியவில்லை, மெல்ல இருள் சூழ்கயில் பருந்தும் பாறை எத்தினோம். 


பருந்தும் பாறை செல்லும் வழியில் தேயிலை தோட்டங்கள். A Tea Plantation in Parunthmpara Hill Way


ஒரு அழகிய வீடு.  A House in Vandiperiyar, Kumily

        பருந்தும் பாறா செல்லும் சாலை எங்கும் தேயிலை தோட்டம்..கேரளா ஓட்டு வீடுகள், வீடுகளை சூழ்ந்த தெங்கு, கமுகு, இம்மரத்தில் படர்ந்திருக்கும் வெற்றிலைக் கொடிகள், என பசுமையான சூழல், சில வீடுகளில்  சமையலுக்கு தேவையான காய் கறித்தோட்டம்,  பெரும்பாலான வீடுகளில் கப்பை என்று அழைக்கப்படும் கிழங்கு (ஏழிலைக் கிழங்கு, மரச்சீனி)  காணப்படுகிறது, பொதுவாக கேரளத்தில் கப்பையும் , மத்திக்கறியும் பிரதான உணவு ஆகும், இம்மக்களிடையே 1950-60 களில் சொந்த ஊரில் ஏற்பட்ட பஞ்சம், வறுமை காரணமாக, தேயிலை தோட்டத்திற்கு  வேலைக்கு சென்ற நம் மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர், அவற்றில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பெரும்பான்மையினர், அவர்கள் பேசும் தமிழ் வழக்கு ரசிக்க தக்கது.. .  

 தேயிலை தோட்டத்திலே. Ryder Elango in Tea Plant


in front of Tea Plant

                  வெண்முகில்கள் பயணிக்கும்  இப்பாதையில், மனிதர் நமக்கு சற்று கடினமாகவே உள்ளது, திக முட்டு (மூச்சு திணறல்) வருமா? என கேட்க வேண்டாம், நம் பயணம் செல்லும் சாலை, சில பகுதியில்  தார் மறைந்து, சவண்டு கிடக்கிறது, கவனம் வேண்டும்.  பகல் நேரத்திலே இருள் சூழ்ந்து கிடக்கிறது காடு, இந்த சாலையில் ஏதேனும் தேயிலை பேக்டரிக்கு செல்லும் ஒன்றிரெண்டு வாகனங்கள், ஜீப், சுற்றுலா வாகனம்  தவிர வேறு போக்குவரத்து இல்லை. ஆரண்யத்தின் அமைதி, நம்மை சில நேரத்தில் அச்சமூட்டுகிறது. இந்த இடங்களில் வசிக்கும் மனிதர்கள், குழந்தைகள், மிகுந்த தைரியம் உடையவர்கள்.

பருந்தும்பாறை நெருங்கும் வழி. Via go through Parunthumpara (Eagle Hill)

 கேரளா சட்டமன்ற தேர்தல் 2016-பீர்மேடு தொகுதியில்  அ இ அ தி மு க கட்சி பதாகை.  An AIADMK Poster for Kerala Assembly Election-2016 in Peermedu Legislative 
   
      பருந்தும் பாறைக்கு செல்லும் வழி தெற்றி எங்கேயோ போய்க்கொண்டிருந்த எங்களை தடுத்து நிறுத்தி சரியான வழி சொல்லி கொடுத்தார் ஒரு தமிழர். அண்ணனுக்கு நன்றி சொல்லிவிட்டு அடைந்தோம்.மஞ்சு பொதியல் களுக்கிடையே வழியை கண்டுபிடிப்பது சற்றே சிரமமாயிருந்தது, view point என்னும் இடம்  அத்தனை அழகு, கடல் அலையை போன்றே வேகமாக நம்மை முத்தமிடும் மேக குவியல்கள், ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று விடலாம், புல்வெளி எங்கும் பூத்திருக்கும் முகிலோடு புகைப் படம் எடுக்கும் ஆசை தீராது, கொஞ்சும்  குளிரில் ஐஸ் கிரீம் குடிக்கும் இன்பம் எழுத்தில் அடங்காது,  பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படத்தில் இந்த இடம் வந்தாக ஒரு நண்பர் சொன்னார், அதை  கோடை காலங்களில் கண்டு மகிழலாம். ( நாங்கள் சென்றது மே மாத துவக்கத்தில்.. சில ஒளிப்படங்கள்  )  

இதுதாங்க அது .  Parunthumpara View Point

மஞ்சு பொதிகள் நடுவே. Cloudy Walk

அங்க எதுவுமே தெரியல .., அவ்வளவு மஞ்சு.. ஆனாலும் ரசிப்போம் 
சில கார்கள் ..Parunthumpara Parking Area

புல்வெளி அதில் மேகங்களுடன் ஒரு நடை .. An Walking With Mist

ஓர் ஆனந்த தருணம்..

பனிக்காட்டில் .. ஓர் பாறையில் 

குளிரில் பனிக்கூழ்  குடிக்கும் ஓர் இன்ப பொழுது 
இங்கேயும் சில மரங்கள் உண்டு Nature Beauty

        காலை பொழுதில் சூர்யோதயம் காண்பதை விடவும் மலை நேர சூரியன் மறையும் காட்சி இங்கு காண்பது சுகம், மலைத் தொடர்களுக்கிடையில் விழும் கதிரவன் மாயாஜால வர்ணங்கள் பூசி வானில் வண்ணக் கோலம் படைப்பதை காண கண் கோடி வேண்டுமே..உங்கள் நேரத்தை பொறுத்தே அது அமையும், அதற்குள் மஞ்சு கூடிவிட்டால் பார்ப்பது கடினமே, இந்த வியூ பாயிண்ட்  (View Point)           பகுதியின்  விளிம்புகளில் நின்று மேக கூட்டங்களோடு கதை பேசுதல் ஒரு தனி சுகம்.. நண்பர் கூட்டத்தோடு சென்று பேசினால் உங்களை வேறு பெயரில் அழைப்பார்கள். எப்படியும் உங்கள் நேரத்தை பயனுள்ள வழியில் செலவு செய்ததை இந்த பருந்தும் பாறை பயணம் தரும்.. நிறைவாக செல்லலாம்.  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் இந்த ஆண்டு இம்மலை பள்ளத்தாக்குகளில் பூத்துள்ளதாக செய்தி தாள்களில் வந்துள்ளது முடிந்தால் அதையும் ஒரு கிளிக் எடுத்துக்கொண்டு வாருங்கள்..

(கேரளாவில் நீலக்குறிஞ்சி மலர்கள் வாகமண், பருந்தும்பாறை, மீசைபுலிமலை, மூணாறு போன்ற வன மலைப்பகுதிகளில்   பூக்கின்றன )
       
        ஒரு மணி நேரம் கழித்த பின், மஞ்சுக் கூட்டங்கள் அதிகமானதால், இருள் சூழ்ந்து விட்டதாலும், மலையிலிருந்து இறங்கினோம்.. புகையில் 200 வாட்ஸ் வெளிச்சம் கூட ரொம்ப மங்கலவே தேய்ந்தது, கேரளா நாட்டிளம் பெண்கள், தத்தம் நண்பர்களோடு கோலாகல பயணம் செய்து, ஊளையிட்டு, பாட்டு பாடி எங்களை முந்திச்சென்றனர், வழியில் ஜியோ ஸ்பைசஸ்(Geo Spices), என்ற கடையில் சூடான சாயா, பல்கூசும் பனிக்கூழ் குடித்து, வழி மாறி செல்லாமல், மலை திரும்புகையில் பாம்பனார் செல்லும் வழியில் சென்று, பீர்மேடு சந்திப்பில் சேர்ந்தோம்.. 




Bye Bye Parunthumpara (Eagle Hill)




பயணம் தொடரும்...

நேசமுடன்
இளங்கோ கண்ணன்.

No comments:

Post a Comment