Friday 23 December 2016

சுருளி அருவி - தேக்கடி- குமுளி - மலையோரத்து பயணம்-1. ( A Ride to Suruli Falls- Thekkady- Kumily Hill Ride)

சுருளி அருவி - தேக்கடி- குமுளி - மலையோரத்து பயணம்.( A Ride to Suruli Falls- Thekkady- Kumily Hill Ride) Part-1

  • மயிலாடும் பாறை வழியே ஓர் உற்சாக பயணம் (a Yathra Via Mayiladum Paarai)

           தமிழகத்தின் மலைவாழிடங்களான, ஊட்டி என்கிற உதகமண்டலம், கொடைக்கானல் ஊர்களை  பள்ளி, கல்லூரி பருவ  சுற்றுலாவில் கண்டு மகிழ்வுற்றதால், கேரளத்தின் மலைவாழிடமான தேக்கடி செல்லும் வழியில் நடந்த நிகழ்வுகள், ஒளிப்படங்கள் இப்பதிவில் இடம்பெறுகின்றன... 

           தேக்கடி செல்லும் இடத்தை கூகிள் மேப்பில் தேடி எடுத்ததில், மதுரை-தேனி-கம்பம்-வழியாக குமுளி செல்லும் முக்கிய சாலை. சுவாரசியம் தரும் பாதைகளை தேடுவதே எம் விருப்பம்.. அவ்வகையில்.. கூகிள் மேப்பில் புதிய வழித்தடத்தில் பாதையை கண்டுபிடித்து செல்லும் வழியை தீர்மானித்தோம்...

        விருதுநகர்-திருமங்கலம் நாற்கர சாலையில் கள்ளிக்குடி என்ற ஊரில் இருந்து இடப்பக்கம் செல்லும் சாலையில் எங்கள் பைக் (பாலஸ்-Phalus) பயணித்தது, பனி விலகாத காலைப்பொழுது, ஊர்ப்புற மக்கள் விழித்து தெருக்களில் நடமாட துவங்கி விட்டனர், வீடுகளின் முற்றத்தில் சாணி தெளித்து, கோலமிடும் அன்னையர், வேப்பங்குச்சி ஒடித்து பல்விளக்கும் பெரியவர்கள், காலைக்கடன் முடிக்க ஆற்றங்கரை நோக்கி நடக்கும் சிறுவர்கள், இரவில் அசைபோட்டு, காலை பசி போக்க தாய்ப்பசுவிடம் பால் குடிக்க செல்லும் இளம்கன்று, வைகறை மேய்ச்சலுக்கு தயாராகும் செம்மறிக் கிடைகள், விளிக்கும்  "அம்மா" என்ற அழைப்பை கேட்டவாறே.. கிராம சாலையின் நறுமணத்தை வாங்கி கொண்டே சென்று கொண்டிருந்தோம், வழிகளில்  சோளக்கொல்லை, நெல் வயல்கள், என்று இயற்கையின் எழில் கோலம், ஒளிப்படமெடுத்து பத்திரப்படுத்தினோம். 


பொன் காலை வேளை (A Golden Morning )

விவசாயம் செய்யாத வயல் காட்டில் Rider இளங்கோ 

        கள்ளிக்குடி-T .கல்லுப்பட்டி -பேரையூர் வழியே பாலஸ் கூட்டிச்சென்றது.. பேரையூர் நிறுத்தத்தில் காலை தேநீர், முடித்து, வண்டப்புலி*  செல்லும் சாலையை  நோக்கி சென்றோம், நமது தமிழகத்தின் ஊர்ப்புறங்கள் அழகாக இருந்தன. நிழலுக்கும், காற்றை சலவை செய்யவதற்கும் வேப்ப மரங்கள், பஞ்சாயத்துகள், ஊர் பெரியவர்கள் அமர்ந்து பேச அரசமர, வேப்பமர மந்தைகள்..நெல் வயல்களுக்கிடையே பூத்த தெங்குகள், பம்புசெட்டில் இருந்து ஓடை வழியே வயலுக்கு பாயும் தண்ணீர், அதில் ஆட்டம்போடும் சிறுவர், சிறுமியர்.. வெள்ளைக்குதிரையில் வேட்டைக்கு சென்று ஊர் காக்கும் அய்யனார்  என.., என்றும் மறக்க இயலாத ஒரு வழிப்பயணம்..
  
* (பேரையூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர்.  பேரையூர்- உசிலம்பட்டி முக்கிய சாலையில் மங்கலரேவு என்னும் ஊரை அடுத்து  இடப்பக்கம் பிரியும் கிளைச்சாலை வழியே செல்கையில் வண்டப்புலியை அடையலாம்)


காலை பொழுதில் நீர் நிறை நெல் வயல்கள் (Paddy fields with Coconut Trees) 

ஒரு காலை நேர கிராமத்து காட்சி -கிளிக்கிய இடம் வண்டப்புலி (A Rural Side Morning) 

ஒரு கிராமத்து காலை (a Cow infront of a hut) 



ஊர்காக்கும் அய்யனார் முன்னே ( Village God Ayyanar Statue)

காற்றை சலவை செய்யும் பெரு அரசமரங்கள் ( A Banyan Tree) 
தெங்கு மரக்கூட்டங்களுடன் நெல்வயல்.. தூரத்தில் தெரிவது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் 


            வண்டப்புலியை அடுத்து  T .கிருஷ்ணாபுரம், அதனை தொடர்ந்து,  மள்ளப்புரம்  என்ற ஊர் வருகிறது, அவ்வூரின் வழியே  செல்ல.. செல்ல  வரவேற்கிறது ஒரு சுவாரசியம், த்ரில் நிறைந்த மலைப்பாதை... 
      நாங்கள் செல்வது மலைப்பாதை (மயிலாடும் பாறை செல்லும் வழி ) என்பது எமக்கு தெரியவில்லை, ஏனெனில் கூகிள் மேப்பில் தேடிய போது மள்ளப் புரம் முதல் மயிலாடும் பாறை வரையிலான சாலை  சமவெளி பாதை என்றே காட்டியது, (ஒருவேளை கூகிள் சாட்டிலைட் படத்தை பார்த்தால் தெளிவு கிட்டியிருக்கும்) சமவெளி என்று நினைத்து  மலைப்பாதை ஏறுவது சற்றே எதிர்பாராத, திருப்பம் நிறைந்த பயணம், இவ்வாய்ப்பை எமக்கு அளித்தது கூகிள் ...தேங்க்ஸ் டு கூகிள் மேப்.
 
          மலை பாதை துவங்கும் வழியில் தமிழக வனத்துறையின் சோதனை சாவடி உள்ளது, டூ வீலரில் செல்பவர்களை சோதனை செய்வதில்லை, கார், வேன், வாகனங்களில் செல்பவர்களின், வண்டி எண் பதிவு செய்துவிட்டு, அனுமதி வழங்கப்படுகிறது, இம்மலையின்  சாலைகள் சில இடங்கள் வரை நன்றாக உள்ளன.. சில இடங்கள் தார் பெயர்ந்து, குண்டும்  குழியும்  நிறைந்துள்ளது, மலை எங்கும் காட்டுக்கொடிகள், செடிகள்,  மஞ்சள் நிற பூ பூத்த ஆவாரை செடிகள், மழை ஏதுமின்றி காய்ந்து கிடந்த சுக்குநாறி, மலைப்புல், கவிப்பேரரசு. வைரமுத்து அவர்களின் அண்மையில் வெளியான  பாடல் வரிகளில் குறிப்பிட்ட , மாசு தூசு ஏதும் சேராத மஞ்சள் பூ பூத்த கருவேல மரங்கள்... வளைவு கொண்ட மலை மீது செல்கையில் எங்கள் பாலசுக்கும் பயணம் புது வேகம் கொடுத்திருந்தது (இனி  அது 200 கிலோமீட்டர் தூரம் மலை மேலே பயணிக்க வேண்டுமென்பது அது அறியாதது )  


மலை மீது நின்று இயற்கையை ரசிக்கும் பாலஸ் & ryder இளங்கோ 

ஒரு மலைக்காட்சி (A Hill View)

             மயிலாடும் பாறை செல்வதற்குள், அந்த பெயர் தெரியா  மலை மீது பயணம் செய்வது, மனதிற்கு உற்சாகம் அளித்தது, வெயிலின் சூடு தெரியாதவாறு மலை மீது மருந்து காற்று வீசியது, மேலே நின்று ஒளிப்படம் எடுப்பதும், மலை உச்சி காட்சி காண்பதும்.. கண்களுக்கு விருந்தாய் திகழ்ந்தது, மழை பெய்யும் நாட்களில் சில சிற்றோடைகளை காணலாம், நாட்டு உடை மரங்கள். சரளை கற்கள், பிரமிக்க வைக்கும் கருங்கற் பாறைகள், சிட்டுக்குருவிகள். தகைவிலான் குஞ்சுகள், நாகணவாய்ப்புள் என்னும் பெயர் கொண்ட மைனாக்கள், ஆந்தைகள், காக்கைகள் இவற்றிக்கு உணவு அளிக்கவும்,  ஒரு சீரிய வன புகலிடமாய்  திகழ்கிறது இம்மலை, உங்கள் நேரத்திற்கு உங்கள் கண்களில் காணும் பறவைகளை கண்டு மகிழுங்கள், ஒளிப்படம் எடுக்க மறக்காதீங்க .... 

இயற்கையின் எழில் (Nature Beauty from Mayiladum Parai)

நீராவி போக்கை கட்டுப்படுத்தும் கருவேல முட்கள் 


மலை மேலே நின்று கிளிக் செய்தது (A Clik Top of the Hill)

மறக்க இயலா மலை வழி (unforgettable Hill Road) 
     
         மலை பயணம் முடிந்து, தரை சாலையில் பயணிக்கையில் வயல் தோட்டங்கள், இங்கு பெருமளவில் காய்கறி பயிர்கள், விவசாயம் நடைபெறுகிறது, அவற்றில், அதிகமானவை தக்காளிப்பழம், சின்ன உள்ளி என்னும் சிறிய வெங்காயம் (சாம்பார் வெங்காயம்) கத்தரிக்காய், வெண்டை, வெடித்து சிரிக்கும் பருத்திச்செடிகள்.  சில வயல்களில் கிரேந்தி பூக்கள், கோழிக்கொண்டை பூக்கள் பூத்து சிரித்தன, தென்னைமர தோப்புகள், அதன் வேலியாய் இலவம் பஞ்சு மரங்கள் அதிக அளவில் நின்றிருந்தன, மரத்தில் மீதுள்ள இலவம் காய்களை பறித்து காயப் போட்டு சாக்கில் அடைத்து, இலவம் பஞ்சு மெத்தை, தலையணை, தயார் செய்யும் மில்களுக்கு வண்டிகளில் ஏற்றும் பணியும் நடந்து கொண்டே இருந்தது, இக்காட்சிகளும் மனதை ரம்மியமாக்கின......

         முத்தலாம் பாறை  என்ற ஊரை அடுத்து இடப்பக்கம் செல்லும் கிளைச்சாலையில் மாளிகை பாறை கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது, அங்கே இடி முழங்குதே ... கருப்பசாமி தங்க கலசம் மின்னுதே- பாடல் காதில் ஒலிக்குதா ...! மண்மணக்கும் பாடகர் தேக்கம்பட்டி சுந்தர் ராஜன் அவர்களின்  இறவாப் பாடல்.  இந்த பாடல் கருப்பசாமிக்காகவே  படையல் செய்யப்பட்டது. எங்கள் பயணத்தில் நாங்கள் தவற விட்ட இடம் இக்கோயில்.  

காய்கறி பயிர் தோட்டத்தில் பணி செய்யும் அன்னையர் (Farmers worked in Vegetable Farm) 

           இந்த ஆண்டு (2016) தமிழகத்தில் பொழிந்த மழையின் அளவு குறைவாக இருந்தமையால், பச்சைப்பாடு மிக மிக  குறைவே, தமிழக நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்ட பகுதியிலும், மழை இன்றி பயிர் வாடியதால் தன்னுயிர் மாய்க்கும்  விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் நம் மனதை அறுக்கின்றன.. வாரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்வது, நாம் அன்றாட செய்தி தாள்களிலும், காணொலி செய்தியிலும் காண்கிறோம், இந்நிகழ்வுகள் விவசாய வளமிக்க நம் நாட்டிற்கு ஆரோக்கியமான செய்தி அல்ல.. இவற்றிக்கான தீர்வுகள் எடுக்கும் முயற்சியில் அரசும், பொது மக்கள் அனைவரும் கருத்தொருமித்து நல் வழியை தேர்ந்தெடுத்து, விவசாயத்தையும், அதை உயிர் மூச்சாய் கருதும் விவசாய தோழனையும் காக்க  வேண்டும் என்பது எம் பெரு விருப்பம்..  


(பயணம் தொடரும்)....

****** அனைத்து உள்ளங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் (நத்தார்)  தின நல் வாழ்த்துக்கள் *******

****** Wish you a Happy Christmas **********


நேசங்களுடன்
இளங்கோ கண்ணன்.








9 comments:

  1. Arumaiyaana yeluthu nadai...

    ReplyDelete
  2. உனது கருத்துக்கு, நன்றி.. நண்பா.. நிறை குறைகளை தெரியப்படுத்து, வலைப்பூவை மேம்படுத்தி கொள்கிறேன்.

    ReplyDelete
  3. சில இடங்கள் வரை நன்றாக உள்ளன.. சில இடங்கள் தார் பெயர்ந்து, குண்டும் குழிகளாய் நிறைந்துள்ளது,- குண்டும் குழியுமாக னு correct pananum.sir

    ReplyDelete
  4. சில இடங்கள் வரை நன்றாக உள்ளன.. சில இடங்கள் தார் பெயர்ந்து, குண்டும் குழிகளாய் நிறைந்துள்ளது,- குண்டும் குழியுமாக னு correct pananum.sir

    ReplyDelete
  5. சில இடங்கள் வரை நன்றாக உள்ளன.. சில இடங்கள் தார் பெயர்ந்து, குண்டும் குழிகளாய் நிறைந்துள்ளது,- குண்டும் குழியுமாக னு correct pananum.sir

    ReplyDelete
  6. நீங்கள் சுட்டிக்காட்டிய தவறு சரி செய்யப்பட்டது. தங்கள் கருத்துக்கு நன்றி.. தோழி

    இளங்கோ கண்ணன்

    ReplyDelete