Monday 19 December 2016

வார்தா புயல்- சென்னை நகர சோகம் (Cyclone Vardha- A Devastation of Chennai)

வார்தா புயல்- சென்னை நகர சோகம்  (Cyclone Vardha- A Devastation of Chennai)

               டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற இருந்த அஞ்சல் அலுவல் தேர்வு எழுத சென்னை மாநகர் சென்றபோது நடந்த நிகழ்வுகள், சென்னை நகர மக்களின் சோகத்தில் பங்கு என இந்த பதிவு இடம்பெறுகிறது 

           கார்த்திகை கனமழை, மார்கழி இளங்குளிர் என்று கழிய வேண்டிய டிசம்பர் மாதம்,  அடுத்தடுத்த துயரங்களால்  துவண்டு போனது  நம்  தமிழகம் .
  
       ஒன்று, பிற மாநிலங்கள் வியக்கும் ஆளுமை,  நமது பெருமை மிகு முதல்வர் அம்மா. ஜெயலலிதா அவர்களின் இறப்பு. அந்த அதிர்ச்சி, சோகம் தீரும் முன்னே, அடுத்த வாரத்திலேயே சென்னை மக்களை "கொடுங்காற்று வார்தா" (Cyclone Vardha), புரட்டிப்போட்டது, ஆக்ஸிஜன் வழங்கும் அருமரங்களின்  ஆணிவேரை அறுத்துப்போட்டது, பல ஏழை மக்களின் வீடுகளின் கூரைகளை பிய்த்து எறிந்தது, ஆஸ்பெஸ்டா ஷீட்டுகளை அடித்து நொறுக்கியது,

            உயிர்ச்சேதம் குறைவென்றாலும், மக்கள் அடைந்த இன்னல் சொல்லி மாளாது,  தடைபட்ட மின்சாரம் குடிநீர் வழங்கும் மின் மோட்டார்களை மௌனமாக்கியது, வெளிச்சத்தின் நகரை இருட்டாக்கியது, மின் சுழல் விசிறி இன்றி உறக்கம் வராமல் அழுதன பல குழந்தைகள், புழுக்கம் இல்லாவிட்டாலும் சின்னலென்ற மென்காற்று அவ்வப்போது வீசி பெரியவர்களின் எரிச்சலை சற்று தணித்தது , கைபேசிகள் செயல் இழந்தன, ஆண்ட்ராய்டு, ஆப்பிள், (அதிவேக பேட்டரி பவர் என்று விளம்பரம்  அள்ளி வீசிய பெரு நிறுவங்களின்)  ஸ்மார்ட், பியூச்சர்,  போன்கள் கடைசி மூச்சு வரை போராடி "கோமா" நிலைக்கு சென்றன, சென்னை நகர வலைப்பின்னல் (Web, Internet ) சேவைகள்,  முடங்கின, தகவல் தொடர்பு அறவே துண்டிக்கப்பட்டது, சாலைகள் புயல் தகர்த்த வன்மரங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன, குடி தண்ணீர் இல்லாமல் மக்கள்  (கழிந்த வருட மழைவெள்ள நிலையோடு ஒப்பிடுகையில் குறைவே ) சிறு துன்பம் ஏற்றனர். என்று துயர் தொடு வானமாய் நீளும்..

Cyclone Vardah an Image 

        டிசம்பர் 11ஆம் தேதி (ஞாயிறு) தேர்வு முடிந்ததும்., ஒரு நாள் சென்னையில் தங்கி விட்டு,  அடுத்த நாள் ஊருக்கு கிளம்பலாம் என்று முடிவு செய்திருந்தோம், அன்றைய தினமே எங்கள் சுமன் அண்ணன்* .. டே.. நாளைக்கு ஒரு பெரிய புயல்  இங்க (சென்னைல) வீச போவுது அதனால டிக்கெட்டை கேன்சல் பண்ணுங்க.. புயல் முடிஞ்சு புதன்கிழமை போலாம் னு தொலை நோக்கு பார்வையோடு  சொன்னார்.. 

     நாங்க கேப்போமா? அட போங்கண்ணே இப்டி தான் "நாடா" (Cyclone Nada) னு ஒரு புயல் அப்டி இப்டி வீசும் மழையா கொட்டும் னு சொன்னீங்க .. என்ன ஆச்சு? சவுடால் உடாதீங்க அப்டினு அந்த அண்ணன் பேச்சை நக்கல் அடிச்சோம், விளைவு.. நமக்கே தெரிஞ்சதே டிசம்பர் 12ஆம் தேதி..   

(*சுமன் அண்ணன் ரயில்வேல வேலை பார்த்தாலும், வளிமண்டலவியல்  துறையில் தான் விருப்பம்.. என்னது வளி-மண்டல- வியலா ...? ஒண்ணுமே புரியலையா.. அதாங்க Meteorological  Department விளங்குற மாதிரினா நம்ம "வானிலை ரமணன்" போல புயல், மழை, வெப்பச்சலனம்,     எல் நினோ இவைகளை பற்றி பேசும் பெரு விருப்பம் உள்ளவர், முக நூலில் tamilnadu weatherman ரசிகர்  )

           அண்ணனின் முன்னெச்சரிக்கை கேட்டதுமே ஞாயிறு இரவே செல்போன் முழுதும் பேட்டரி சார்ஜ் செய்து விட்டோம். அண்ணன் காலைல வேலைக்கு போகும் போது சர மழை மெதுவாக பெய்து கொண்டிருந்தது, அப்பவும் அவங்க சொல்லிட்டு தான் போனாங்க..  வரும் போது ஒரு பேரழிவு இருக்கு பாத்துக்கோங்க னு சவால் விட்டுட்டு போனாங்க.. சரி பாப்போம் என்று காலை பலகாரம் தின்று விட்டு, வெளியே பார்க்கையில் மழை வேகமாக பெய்து கொண்டிருந்தது, வேகம் கூட ..கூட.. காற்றின் சத்தம் அதிகமானது, அந்நேரம் (9 மணி அளவில் ) கரண்டும் கட் ஆனது, அவ்வப்போது செல்போன் இன்டர்நெட்டில் நேரலை மழை, புயல் அறிவிப்பை பார்த்தபடி இருந்தோம், புயலின் கண், மேலடுக்கு, புயல் வீசும் வேகம், கரையை கடக்கும் நேரம் என அறிவிப்பு நீண்டு கொண்டே போனது,எங்களுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் உதறல் எடுத்தது.
          
               மத்தியான சாப்பாட்டை உண்டுவிட்டு, வீட்டு தட்டில் (மாடியில்) நின்று பார்க்கையில் மழை வெறிச்சது போலிருந்தது. வானில் கரு மேகங்கள் அதிவேகமாய் ஒடிக்கடந்தன... கலிங்கத்துப்பரணியில் செயம்கொண்டார் பாடிய பாடல் மனதுள் வந்து போனது .. கோடை காலத்தில் வெயிலின் வெக்கை தாளாமல் கருமுகில் ஓடி கடந்ததை போல.. வார்த கொடுங்காற்றின் வேகம் எழிலியை (மழை தரும் மேகம்)140 கிமீ வேகத்தில் ஓட்டம் கொள்ள செய்தது..
        
               நங்கள் தங்கியிருந்த சிட்கோ நகர் பகுதியில் உள்ள மாடி வீடுகளில் உள்ள மேல் மாடத்தில் குடும்பத்துடன், குழந்தைகளும், புயல் காற்று  வேகமாக வீசும் போதில், ஊளைகளும், கூச்சல்களும், விசில் அடித்தும் ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர்... வார்த என்னும் கொடுங்காற்றின் வேகம் எங்களை நிலைகுலைய செய்தது. எல்லாருடைய வாழ்விலும் மறக்க இயலாத சம்பவமாய் இப்புயல் ஆகிவிட்டது 

சிட்கோ நகர் பகுதியில் முக்கிய சாலையை மறித்து வேரோடு பெயர்ந்த மரம் ( A Tree Fallen in SITCO Nagar Chennai)

கொடுங்காற்றின் சுழலுக்கு பலியான மரம் ( Tree Fells down by Cyclone Vardah)

நிழல் தரும் நீண்ட தரு வீட்டின் மேல் 
            புயலானது கரை கடக்கும் நேரத்தில் நமது தமிழக அரசு மக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்து (யாரும் மாலை 6 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்) பல மக்களின் உயிர்களை காப்பாற்றியது, இல்லையென்றால் செல்பி வித் வார்த னு பேஸ் பூக் ல, வாட்ஸாப் ல, இன்ஸ்டாகிராம் ல.னு போட்டோ போட ஒரு குரூப் கிளம்பிடுவாங்கல...அவங்களையும், பாவப்பட்ட மக்களையும், குழந்தைகளையும், ஒரு அதிரடி அறிவிப்பால் எல்லாருக்கும் ஒரு பாதுகாப்பு கொடுத்தாங்க...

              மாலை 4 மணி அளவில் வேலைக்கு சென்ற எங்கள் அண்ணன் வீட்டிற்கு வந்தார்கள், எங்களுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை, அப்பவே சொன்னேன் .. என்னடா சொன்னீங்க.. சவுடால்-னா..? இப்பவாவது நம்புறீங்களா...? னு கேட்டாங்க..! ஆனா அடுத்து தான் சென்னை நகர்-ல முக்கியமான ரோடுகள்-ல மரங்கள் எல்லாம் வேரோடு முறிஞ்சு கிடக்குன்னும்..ரோடு ஒரு காடு போல இருக்குனு சொன்னாங்க.. அப்பவே கிளம்பினோம்... அந்த நேரம் சாலையில் விழுந்த மரங்கள் தான் இதெல்லாம், அப்போதான் தெரிஞ்சது, வன் காற்று வர்தவின்  சூழல், வேகம், மரங்களை பெயர்த்தெடுத்து மக்களுக்கு பயம் காட்டியதன் திறன்... இப்புயலுக்கு தப்பிய மரங்கள் கொடுத்துவைத்தவை..."Survival of the Fittest" 

சாலை நடுவே நடக்க முடியாமல் வீழ்ந்து கிடக்கும் மரக்கூட்டங்கள் 

வீழ்ந்த மரத்தை அகற்றும் நல் உள்ளம் கொண்டோர்கள் 
             

        எங்கள் குடியிருப்பு பகுதியில் சாலை நடுவில் வீழ்ந்த சிறுமரங்களை ஊரில் உள்ள வாலிபர்கள், முதியோர், திறன் மிகுந்தோர், அரிவாள் கொண்டு கொப்புகளை ஆய்ந்து, சிறு கம்புகளை தறித்து மக்கள் நடமாடும் அளவிற்கு தூய்மை செய்து, யாரையும் எதிர்பார்க்காமல் வேலையை செய்து முடித்தனர்...

          புயலின் சீற்றத்துக்கு ஈடு கொடுக்காமல் வீழ்ந்தவை நம் நாட்டின் பாரம்பரியமிக்க மரங்கள் அல்ல, வெளி நாட்டின் அழகுக்கு வளர்க்கப்படும் மரங்கள் தான் என்று ஒரு சாரார் கூறுவது சரியென தோன்றியது, ஆம் வீழ்ந்தவை, ஆல், அரசு, பூவரசு, புங்கு, புளி, போன்ற மரங்கள் அல்ல பல பெயர் தெரியாத மரங்களே...
          
                        சென்னை வாழ் மக்களுக்கு கடந்த ஆண்டு கடும் மழை பொழிவை தந்து இயற்கை சோதித்தது, இந்த ஆண்டு கொடுங்காற்று வார்தாவை கொடுத்து வாழ்வை நொடித்து போட்டது, என்றும் மக்களின் துயரங்களில் பங்கு கொண்டு, நம் சொந்தங்களுக்கு உதவி செய்தும், ஆறுதல் கூறியும் வாழ்வை வாழ்ந்திருப்போம்......

இனி புயல் தகர்த்த மரங்கள் படங்கள்...

மரங்களை வெட்டி மற்றும் பொதுமக்கள் இடம் சிட்கோநகர் சென்னை 

சாலையில் வீழ்ந்த காட்டுப் பூவரசு  


வேரோடு பெயர்த்த வார்த கொடும் புயல் 


 "வார்த"-னா உருது மொழில சிவப்பு ரோஜா னு அர்த்தமாம், பாகிஸ்தான் நாட்டுக்காரங்க கொடுத்த பெயர், இதற்கு முன் வீசிய  "நாடா" புயல் ஓமன் நாட்டுக்காரங்க கொடுத்த பெயர். புயல் பெயர்கள் அறிய .....  https://en.wikipedia.org/wiki/Tropical_cyclone_naming)

தொடர்ந்து காண வருபவை வாட்ஸப்பில் வந்த படங்கள் 







மேலும் படங்கள்
http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/article9423098.ece?ref=slideshow


நேசமுடன் 
இளங்கோ கண்ணன் 

ஒளிப்படங்கள் உதவி 
சுமன்.ம 


4 comments:

  1. அருமையான பதிவு ....
    //போன்கள் கடைசி மூச்சு வரை போராடி "கோமா" நிலைக்கு சென்றன

    ReplyDelete
  2. Nalla anubavam.... innum saalai ora maram maatra padavillai enbathu innum kodiya sokam

    ReplyDelete