Monday 10 October 2016

ஊர் சுற்றிகளின் பயணம் - கண்களுக்கு எதிரில் மறைந்து கிடக்கும் கழுகு மலை ( A Trip to Kazhugu Malai- Eagle Hill)

 கழுகுமலை  (Kalugumalai),   தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரின் நாலாட்டின்புதூர் புறவழிச்சாலையில் இருந்து  மேற்கு நோக்கி சங்கரன்கோவில்  செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த இடம் . 
இங்கு நம்மை கவரும்  இடங்கள் 
1. கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோவில்.
2. கழுகுமலை சமணர் படுகைகள் (Jain Beds)
3. கழுகு மலை நகர காட்சி 
4. கழுகுமலை மலை உச்சி.
5. ஒற்றைக்கல் வெட்டுவான் கோவில் 

1. கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோவில்.


                                                 அருள்மிகு கழுகாசல மூர்த்தி திருக்கோவில் முகப்பு தோற்றம்                                     (Kazhugumalai-Kazhugasalamoorthy Tmple Entrance)

      கழுகு மலை கழுகாசலமூர்த்தி மூர்த்தி கோவில் நகரின் நடுவில் அமைந்துள்ளது. காலை மற்றும் மாலை நேர பூஜை சிறப்பாக  நடைபெறுகிறது. கோவில் அருகில் அமைந்திருக்கும் தெப்பக்குளம், அதன் மாடங்களில் வசிக்கும் புறாக்கூட்டங்கள் நம்மை ரசிக்க வைக்கின்றன. உங்களின் கேமரா கிளிக்குகளுக்கும் விருந்தாய் அமையும். கோவிலை சுற்றி நம் முன்னோர்கள் அதாவது குரங்கு கூட்டங்கள் நம்மை வரவேற்கும் எழில் காட்சி மனதிற்கு மகிழ்ச்சி தரும்.  பூஜைக்கு தேவையான பொருட்கள் கோவிலின் முன் வாசலின் கிடைக்கின்றன. மதியம் பசியாற அன்னதான மண்டபமும் அமைந்துள்ளது.
மேலதிக விவரங்கள் www.kalugumalaitemple.tnhrce.in


கழுகுமலை கோவில் மலை தோற்றம் kazhugumalai hill view

      கழுகுமலை கோவில் பற்றிய இன்னொரு சுவை நிறைந்த சேதி தமிழ் இலக்கியத்தில் இசை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரின்  காவடி சிந்து பாடல்கள் கழுகுமலை முருகன் மீது பாடப்பட்ட பட்டவையாகும்.  காவடி சிந்து பாடலின் பகுதி ஒன்று ..
புள்ளிக்  கலாப மயில் பாகன்; சத்தி 
புதல்வனான கன யோகன்; - மலை 
போலத் தான்திரண்ட கோலப் பன்னிரண்டு 
வாகன் ; நல்வி வேகன்
வள்ளிக்கிசைந்த முரு கேசன்; அண்ணா
மலைக்  கவிராசன் மகிழ் நேசன்- என்றும்
வாழும் கழுகுமலை வாவி வளம் சொல்வேன்          
 மாதே! கேள் இப் போதே .   







தெப்பக்குளம், அதன் மாடங்களில் வசிக்கும் புறாக்கூட்டங்கள்






கழுகுமலை பற்றிய இந்து தமிழ் நாளிதழில் வெளியான சிறப்பு கட்டுரை. கிளிக்குக 
http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/article9438327.ece?widget-art=four-all

2. கழுகுமலை சமணர் படுகைகள் (JAIN BEDS).

  கழுகுமலை கோவிலை சுற்றிப்பார்த்துவிட்டு,  வடக்கு திசையில் சாலையின் இருமருங்கும் மரங்களின் நிழல்களினூடே சென்றால்  நம்மை வரவேற்பது சமணர் படுகைகள் அமைந்துள்ள நகராட்சி பூங்கா, பூங்கா காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்து இருக்கின்றது. பூங்காவில் பெண் குழந்தைகள் விளையாடி மகிழ ஊஞ்சல், சறுக்கு  மரம் போன்றவை  உள்ளன,சில விளையாட்டு பொருட்கள் உபயோகமற்று கிடக்கின்றன.




  
         சமணர் படுகை அமைந்துள்ள கழுகு மலையில் கால் வைத்ததும் நாசியில் தொடும் இளம் தென்றல் காற்று நம்மை மலை ஏற வைக்கும் மன தைரியத்தை கொடுக்கின்றது.  மலை ஏறுகின்ற பாதையில் சிறு சிறு கோவில்கள் உள்ளன. சின்னதாய் வணங்கிச்செல்ல, 









        கழுகு மலை கோவில் மலைப்பாதையில் நம்மை வியக்க வைக்கின்றது சமணர் படுகைகள் (Jain Beds). நம் இந்திய நாட்டில் 3000 ஆண்டுகளுக்கு முன் பிறந்த, மேன்மைமிக்க, நெறிமுறைகளை கொண்டு விளங்கும் சமண மதத்தின் சிற்பங்கள் மற்றும் தீர்த்தங்காரர்களின் கற்சிற்பங்கள் நம்மை கவரும் விதமாக உள்ளன. கொல்லமை, பிற உயிர்களுக்கு ஊறு  செய்யாமை, உண்மை பேசுதல், எளிய வாழ்கை வாழ்தல் போன்ற உயர் குணங்களின் இருப்பிடமான சமண மதத்திற்கு தமிழகத்தில் ஒரு பெரும் வரலாறு உள்ளது, தமிழக மக்களின் ஒரு பெரும் தலைமுறை சமண மதத்தினை பின்பற்றி வாழ்ந்துள்ளனர் என்பதற்கு நம் தமிழ் இலக்கியத்தில்  பதினென்கீழ்கணக்கு நூல்களே சான்று,  

      இச்சிற்பங்களின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயர் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.. இங்கு சமணசித்தாந்தம் போதிக்கப்பட்டது. இச்சிற்பங்கள் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கபட்டவை



      
      கழுகுமலையில்   நாம் காணும்  சிற்பங்களில் சமணர்கள்  தங்கள் குரு, தாய், தந்தை, மகள் ஆகியோரின் நினைவாக இங்கு தீர்த்தங்கரர் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். இவற்றில் பர்சவநாதர் மஹாவீரர் போன்றவர்களின் சிற்பங்கள் உள்ளன










      அழகிய வேலைப்பாடுகள் மிகுந்த இந்த சிலைகளை நம் காணும்போது நமக்குள் எழும் கேள்வி ஒன்றே, எப்படி இந்த மலையில் எத்தனையோ  இடமிருந்தும் மலையின் சரிவில் இவர்களால் கலை நயமிக்க, அழகான   சிற்பங்களை  வடிக்க முடிந்தது ? மொத்தத்தில் ஆகச்சிறந்த திறமையாளர்கள் வாழ்ந்த தமிழகம் என்பதை நம்மால் மறுக்க முடியாது என்ற உண்மையை,  நாம்  உணரவும், நம் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்கவும் உங்கள்  குடும்ப உறுப்பினர்களுடன்  ஒருமுறை கழுகுமலை சென்று பாருங்கள் நண்பர்களே!... 





              சில சிலைகள் நமது பொறுப்பின்மையால் தலை சிதைந்தும் உடைந்தும், காணப்படுகின்றன, இந்த சமணர் பள்ளிகள் முழுதும் தமிழக அரசின் தொல்லியல் கட்டுப்பாட்டில் உள்ளது என காட்சி பலகைகள் இருக்கின்றன, ஆனால் இது போன்ற இடங்களை அரசாங்கம் தவிர்த்து  அவற்றை பராமரிப்பது நமது கடமையே, சில பொறுப்பற்ற மனிதர்களின் தீய செயல்களால் நமது பாரம்பரியமிக்க, விலைமதிக்கமுடியாத, நமது நீள் நெடும் வரலாற்றை, எடுத்து கூறும், சிலைகள் நம் கண் முன்னாலே காட்சி இழந்து போவது நம் சமூகத்தின் பொறுப்பின்மையை காண்பிக்கின்றது












         
    மலைப்பாதையில் ஏற படிகள் சமணர் படுகை வரை ஒழுங்காக அமைந்துள்ளது, அதற்கு மேல் உச்சி வரை செல்ல சற்றே ஒழுங்கில்லாத மண் பாதை உள்ளது, மேலே சென்று மலை உச்சியில் சுத்தமான காற்றை கொஞ்சம் உண்டு விட்டு கழுகுமலை நகர காட்சியை பார்த்து ரசிக்கலாம். மலை உச்சியில் ஒரு நிழல் தரும் புளிய மரம் உள்ளது. உங்களின் நல்ல நேரத்திற்கு புளியங்காய் (நொண்டங்காய், உதைப்பழம்) கிடைத்தால் சுவைத்து மகிழுங்கள். மலை மேல் விநாயகர் கோயில் உள்ளது அதன் மேல், திருக்கார்த்திகை தினத்தன்று ஏற்றும்  விளக்கு தூண் ஒன்றும் உள்ளது... மலைமேல் நின்று ஊர் அழகை பார்ப்பது ஒரு அலாதி சுகம்.






        **குறிப்பு: மலை மேல் ஏற  அதிகாலை 6 முதல் 8 மணிவரை  சிறந்த நேரம் ஆகும்  மாலையில் 4 மணி முதல் 7மணி  வரை இருட்டுவதற்குள் திரும்பிவிடவும்.
            மலை ஏறுகையில் உடம்பில் சூடு அதிகமாகி வியர்வை அதிகமாக வெளியேறி புத்துணர்ச்சி தரும், எனவே தண்ணீர்  போத்தல்  வைத்துக்கொள்வது நலம், எலுமிச்சை சாறு (போஞ்சி), குளிர்பானம் கொண்டு செல்லலாம்.
             மலை பாதையில், கற்கள், சிறு முட்கள் உள்ளதால் செருப்பு அணிந்து செல்வது மிக சிறந்தது. 


3 comments:

  1. Great post! Not many people know about this wonderful place, such posts and pictures will inspire people to go over. Sastha Prakash, www.realindia.in/realblog

    ReplyDelete
  2. Hai Friend Thanks for your comments.

    ReplyDelete