Saturday 22 October 2016

சிற்பக்கலைகளின் சொர்கம் கழுகுமலை வெட்டுவான் கோவில். (Sculptor's Paradise Vettuvankovil in Kazhgumalai)

கழுகுமலை வெட்டுவான் கோவில் 

       
        கழுகுமலை சமணர் பள்ளியை கண்டு முடித்து வியப்பெய்தியதும் , நம்மை பிரம்மாண்டத்தின் உச்சிக்கு அழைத்து செல்ல காத்திருப்பது, வெட்டுவான் கோவில்(Sculptor's Paradise)  என்னும் பேரதிசயம். பாண்டிய மன்னர்களால் கி பி 8ஆம்  நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்டது என தொல்லியல் துறை தெரிவிக்கின்றது.இந்த கோவிலின் அதிசயம் பாறையை குடைந்து எடுத்து ஒரே கல்லில் செதுக்கப் பட்டதாகும், பார்க்கும் பொழுது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது,இந்த கோவிலின் பணிகள் முழுமையாக நிறைவுறவில்லை, பாண்டிய மன்னர்கள் செய்த போரின் விளைவாக இந்த கோவிலின் பணிகள் இன்றும் முடியாமல் நின்று நம்மை ஆச்சர்யத்தின் விளிம்பில்  நிறுத்துகின்றன.


           வெட்டுவான் கோவில் எல்லோராவில் உள்ளதை போன்று ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. ஆகவே தென்னகத்தின் எல்லோரா என்று சிறப்பிக்கப்படுகிறது. பெரிய மலைப்பாறையில் ஏறக்குறைய சுமார் 7.50 மீட்டர் அளவுக்கு சதுரமாக வெட்டி எடுத்து அதன் நடுப்பகுதியை கோவிலாக செதுக்கி உள்ளனர். கோவிலின் சிற்பங்கள் நம்மிடம் பல கதைகளை கூறுவதாய் தோன்றும். தமிழ் மன்னர்களின் சிறப்பில், இது போன்ற காணகிடைக்காத ஒரு அரிய வகை பொக்கிஷமாக  திகழ்கிறது அரைமலை என்னும் கழுகுமலை.

                 



 இந்த கோவிலில் அர்தமண்டபமும், கருவறையும் உள்ளது,கருவறையில் பிள்ளையார் சிலை ஒன்று தனியாக கற்கோயிலுக்குள் காட்சி  தருகின்றது . கோவிலின் முழு சிற்பங்களை ரசிக்க நமக்கு நேரம் போதாது என  தோன்றும். அவ்வளவு கலை சிற்பங்களின் புகலிடமாய் திகழ்கிறது.

                                                     



      வெட்டுவான் கோவில் சிற்பங்களில் காணப்படும்  சிலைகளில் கடவுளர்களின் சிலைகளான  திருமால், பிரம்மா, தட்சிணாமூர்த்தி, நரசிம்மர், நந்தி, போன்றவை எழில் மிக்கவை. இச்சிலைகள் அந்த சிற்பங்களை செதுக்கிய சிற்பிகளின் கை  வண்ணத்தை நம் கண்களுக்கு அள்ளி வழங்குகின்றன. இதனை காண நம் நாட்டவர் மட்டுமின்றி வெளி நாட்டவரும் வந்து செல்கின்றனர். மழை பெய்து முடித்த நாட்களில் இன்னும் அதிக பொலிவுடன் திகழ்கிறது இக்கோவில்.







        வெட்டுவான்கோவில் விமானங்களின்  நான்கு மூலைகளில் நந்தி சிலைகள், மேற்கில் நரசிம்மரும் வடக்கில் பிரம்மரும் அருள் பாலிக்கின்றனர். 


   உங்களின் ஒரு விடுமுறை நாளை நமது பாரம்பரியத்தை, வரலாற்றை, கலை நயத்தை எடுத்து கூறும் கழுகுமலை, வெட்டுவான் கோவிலுக்கு குடும்பத்துடன், உங்கள் குழந்தைகளுடன்  சென்று காணுங்கள் நண்பர்களே!, நமது வரலாற்றை அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதற்கும்,  ஒரு புத்துணர்ச்சி தரும் வரலாற்று பயணமாய் என்றும் மனதில் நிறைந்திருக்கும் இந்த வெட்டுவான் கோவில், கழுகுமலை பயணம். இக்கோவில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும். கோவிலானது தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் பராமரிக்கப் படுகின்றது.
Timings: Moring 7 to Evening 7.


 


       எங்களுக்கு காலை நேர பசியாற்றிய கழுகுமலை "கேப்டன் மெஸ்" காலை 11 மணி வரைக்கும் டிபன் கிடைக்கிறது அதுவும் சூடாக, மிக அன்பாய் டிபன் ( இட்லி, தோசை, பூரி, பொங்கல், சிறப்பாக, ருசியாக)  விளம்புகிறார்கள்.  



 கழுகுமலை  செல்வதற்கான வழிகள்



நேசமுடன்,
இளங்கோ கண்ணன்.
(Elango Kannan)

No comments:

Post a Comment