Thursday 14 September 2017

மணக்குடி- பாலம் இன்ப சிற்றுலா (a Trip to Manakkudi Bridge and Beach)

மணக்குடி- பாலம்  ஒரு இன்ப சிற்றுலா 

அலைகடல் கொஞ்சும் கன்னியாகுமரி கரையோடு, மேற்கு திசை நோக்கி கடல் அழகை கண்டவாறே சென்றால் நம் மனதை கொள்ளைகொள்ளும் ஒரு ஊர் நம்மை வரவேற்கும் அதுவே மணக்குடி, 

குமரி மண்ணின் வற்றாத ஜீவநதி, மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றி, கற்களை, பாறைகளை, கடந்து நாடும் ஊரும் செழிக்க ஓடிவந்து, சுவையை அள்ளி வழங்கும்  குடிநீரை தந்து, நாகர்கோயில் நகர மலக்கழிவுகளை சுமந்து, சுசீந்திரம் தாணுமாலயனை மகிழ்வித்து, இறுதியில் கடலோடு கை கோர்க்கும் குமரி பழையாறு. இந்த ஆறும் கடலும் கலக்கும்   இடம் தான் மணக்குடி நீண்ட நீர் பரப்பாய்  இல்லாவிடினும், கண்ணை கவரும், காயல் மற்றும்  களிமார் என்ற பெயரில் இது வழங்கப்படுகிறது,  






      கன்னியாகுமரியில் பேருந்து நிலையம் கடந்து கோவளம்-முகிலன் குடியிருப்பு- மேற்கு கடற்கரை சாலை வழியே 5கிலோமீட்டர் தூரம் சென்று மணக்குடி ஊரை அடையாளம், நம்மை வரவேற்பது,  சென்னை மாநகர ஜெமினி பாலத்தின் மாதிரியில் கட்டப்பட்டுள்ள பாலம், இப்பாலம் கட்டப்படுவதற்கு ஒரு காரணம் உண்டு, குமரி மாவட்டத்தினர் அறிந்த ஒன்று ஆகும்.
         பண்டு இக்கடற்கரை ஊரை ஆறு பிரித்து போட்டபோது, வள்ளத்தில் இக்கரையில் இருந்து மறு கரைக்கு பயணம் செய்தனர், கீழ மணக்குடி- மேல மணக்குடி இடையே ஒரு படகு சவாரி தான், போகையில் பைசா கொடுத்தால் திரும்பி வருகையில் பைசா கொடுக்க தேவையில்லை, பின்னர் ஒரு சிறு பாலம் கட்டப்பட்டது, நவீன யுகத்தில் இக்காயல் நடுவே ஒரு பாலம் கட்டப்பட்டது, மக்கள் மனமகிழ்ச்சி அடைந்தனர், அது நீண்ட நாள் நிலைக்கவில்லை, பாலத்தின் ஆயுளை மட்டுமின்றி பல மனித உயிர்களையும் பலி கொண்டது, 2004 ஆம் வருடத்தில் டிசம்பர் திங்கள் 26ஆம் நாளில்  தாக்கிய ஆழிப்பேரலை, இப்பேரலை செய்த சேதம் பாலத்தின்  ஒரு பகுதி கடலுக்குளே  சென்று விட்டது, பின்னர் அரசு ஒரு உறுதியான  இரும்பு பாலத்தினை  அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு உதவி செய்தது, தமிழ் மற்றும் மலையாள சினிமாக்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. 
இந்த இரும்பு பாலத்தில்  கனரக வாகனங்கள் செல்ல வழியில்லை, பின்னர் அரசு ஒரு மிகச்சிறந்த திட்டம் தீட்டி, எவ்வித இயற்கை சீற்றங்களும் தாக்காதவாறு, வடிவமைத்து, பல்தொழிலாளர் உழைப்பில் பெருமிதமாய் காட்சியளிக்கிறது.
      இன்று மணக்குடி பாலமே ஒரு சிறந்த சிற்றுலா  தலமாக மாறி வருகிறது, இந்த பாலத்தின்  மீது நின்று, தம்மி, ஒளிப்படம் எடுப்பது சிறுவர் முதல் பெரியவர் வரை மிகுந்த ரசம் மிகுந்த அனுபவம் ஆகும், இப்பாலத்தின்  கரையில் நின்று அலை வீசும் அரபிக்கடலையும், அடுத்து அமைந்திருக்கும் மாதா கோவிலையும், காயலை சூழ்ந்திருக்கும் அலையாத்தி மரங்களையும், அங்கு இரை தேடும், புள் இனங்களையும், நிமிர்ந்தும், குனிந்தும் கிடைக்கும், மருத்துவாமலையும், நம்மை வெகுவாக கவர்பவை











தற்போது இங்குள்ள காயலில் படகு சவாரி ஏற்படும் செய்யப்பட்டுள்ளது, சுற்றுலா பயணிகள் காயலில் சென்று அலையாத்தி மரங்களையும், தொடர்ந்திருக்கும் உப்பளத்தின் காட்சியையும், தண்ணீரில் மீன் தேடும் கூழைக்கடா, நாரை கூட்டத்தையும் கண்டு வரலாம், இவை முடிந்த பின், மணக்குடி கடலில் மனம் மகிழ வீடு கட்டி விளையாடி வரலாம், கடல் அலை சீற்றத்தை பொறுத்து கடலில் இறங்குவது நலம், நீச்சல் தெரியாதவர்கள் கடலுள் செல்ல வேண்டாம் என்பதே எம் தாழ்மையான வேண்டுகோள். 

கடற்கரை சுற்றி முடித்து, நெய்தல் நிலத்து,  கலையழகு மிக்க புனித. ஆண்ட்ரு ஆலயத்துக்கும்  சென்று வரலாம்.

புனித ஆண்ட்ரு ஆலயம் 
மணக்குடி செல்லும் பேரூந்துகள்:
வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து: தடம் எண் 2,2c, 2f , 37
அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து: தடம் எண் 37 மணக்குடி.

மணக்குடி பாலத்தின்  எழில். குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும், படத்தில் 





இந்தமுறை எங்கள் பயணம் தம்பிமார்களோடு அமைந்தது 

பயணம் தொடரும்..

நேசமுடன்..

இளங்கோ கண்ணன்.


ஒளிபடத்தில் குறிப்பிட்ட தேதிகள் தவறானவை..

No comments:

Post a Comment